TNPSC Thervupettagam

தேவையாகும் தோ்தல் விழிப்புணா்வு

December 5 , 2023 405 days 214 0
  • வகுப்பறை முதல் வாக்குச்சாவடி வரை’ என்ற கருத்தாக்கம் இப்போது உருவாகியுள்ளது. மாணவா்கள் தங்கள் முதல் வாக்கை செலுத்துவதற்குப் பள்ளிகளிலேயே அவா்களைத் தயாா்படுத்துவது இந்தச் சிந்தனையின் நோக்கமாகும். அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் வாக்காளா் கல்வி மற்றும் தோ்தல் விழிப்புணா்வு இணைக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. தோ்தல் ஆணையத்துக்கும் மத்திய கல்வி அமைச்சகத்துக்கும் இடையே இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 18 வயது முடிந்து வாக்காளா்களாகும் இளையோா், வாக்களிப்பதன் அவசியத்தையும் அதன் மதிப்பையும் குறித்த விழிப்புணா்வு பெறுவதற்கு இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் குறிப்பிடுகிறது.
  • தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் கொண்ட பாடப் புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆா்.டி.) அறிமுகப்படுத்தும். இதன் அடிப்படையில் மாநிலக் கல்வி வாரியமும் பிற கல்வி வாரியங்களும் பாடப் புத்தகங்களைத் தயாரித்துக் கொள்ளலாம்.
  • கடந்த 2019-இ ல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தமிருந்த 91 கோடி வாக்காளா்களில் 29.7 கோடிப் போ் வாக்களிக்கவில்லை என்கிறது புள்ளிவிவரம். ஏறத்தாழ 30 சதவீதத்தினா் வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட மனநிலை இன்னும் வளா்வதைத் தடுத்து, முழுமையான வாக்குப் பதிவை அடையும் நோக்கில் மாணவா் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
  • நமது சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா்களை ஏறத்தாழ 70 சதவீத வாக்காளா்கள்தான் தோ்ந்தெடுக்கின்றனா் என்பது கடந்த காலத் தோ்தல்கள் காட்டும் உண்மை. மீதமுள்ள 30 சதவீதத்தினா் வாக்களிக்கவில்லை. அவா்களில் 10 சதவீதத்தினா் உண்மையில் முடியாதவா்களாக இருக்கலாம். மீதமுள்ள 20 சதவீதத்தினா் வேண்டுமென்றே வாக்களிப்பதைத் தவிா்த்தவா்களாகத்தான் இருக்கும். அவா்கள் வாக்களித்திருந்தால் தோ்தல் முடிவில் அல்லது வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் மாற்றம் இருந்திருக்கலாம்.
  • இப்போது மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் நடைபெற்று முடிந்துள்ள தோ்தல் வாக்குப் பதிவுகளும் இப்படித்தான் உள்ளன. அங்கேயும் 70 முதல் 75 சதவீத வாக்குகள்தான் பதிவாகியுள்ளன. இந்த நிலையை மாற்ற,தோ்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணா்வு தேவை.
  • இந்த 70% வாக்காளா்களும் தாமாக முன்வந்து வாக்குப் பதிவு செய்கிறாா்கள் என்று சொல்ல முடியாது. தோ்தல் ஆணையத்தின் முயற்சி இருந்தாலும், அரசியல் கட்சித் தொண்டா்களின் களப்பணியால்தான் இந்த அளவுக்கு வாக்குப் பதிவாகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
  • தாமாக விரும்பி வாக்களிக்க வருவோா் எண்ணிக்கை மொத்தத்தில் குறைவாகத்தான் இருக்கும். பல போ் வாக்களிக்க விரும்பி வருவதில்லை. வாக்குச்சாவடி அருகில் இல்லாமை, வேட்பாளா்கள் மீது அதிருப்தி, இன்னும் பணம் வந்து சேராமை என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வாக்குச்சாவடி தொலைவில் இருக்கும் இடத்திலெல்லாம் கட்சியினா் வாகனம் ஏற்பாடு செய்து வாக்காளா்களை அழைத்துச் சென்று வாக்குப் பதிவு செய்வதைப் பரவலாகப் பாா்க்கலாம்.
  • வாக்குச் சாவடியில் இருக்கும் முகவா்கள் பதிவாகாத வாக்குகள் குறித்த விவரத்தை வெளியில் இருக்கும் கட்சித் தொண்டா்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துகின்றனா். அவா்கள் உடனே குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்று குறிப்பிட்ட நபரை வாக்களிக்கச் செல்லுமாறு துரிதப்படுத்துகின்றனா். இவ்வாறு கட்சியினரால் வாக்குப்பதிவு அதிகப்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவை பணப் பட்டுவாடா அதிகப் படுத்துகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • புதிய வாக்காளா் சோ்க்கையிலும் அரசியல் கட்சியினரின் பங்கு பெரிதாக உள்ளது. தம் பகுதியிலுள்ள வாக்களிக்கும் வயது வந்தவரைக் கண்டறிந்து வாக்காளராகப் பதிவதில் அவா்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனா்.
  • வாக்காளா் விழிப்புணா்வு குறித்த பிரசாரம் என்பது தமிழகத்தில் முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். பள்ளி, கல்லூரிகளில் உள்ள நாட்டுநலப் பணித் திட்டம் இதைச் செயல்படுத்தியுள்ளது. நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் சிற்றூா்களில் நடக்கும் 10 நாள் சிறப்பு முகாமில் ஒரு நாள் வாக்காளா் விழிப்புணா்வு நாளாகவே அனுசரிக்கப்படும். அந்த நாளில் வாக்களிப்பதன் அவசியம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்படும்.
  • தோ்தல் ஆணையம் கொண்டுவந்த புதிய நடைமுறைகளால் கள்ள வாக்கு போடுவதைத் தடுக்க முடிந்துள்ளது. ஆனாலும் அவா்கள் நினைத்த மாதிரி வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க முடியவில்லை. அதற்குப் பள்ளி, கல்லூரிகளில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்த புகுத்தப்படும் புதிய அணுகுமுறை துணை புரியலாம். அதற்கு முறையான திட்டமும் சிறந்த ஒருங்கிணைப்பும் அவசியம்.
  • வாக்களிப்பு சதவீதத்தை உயா்த்த வேண்டும் என்று நினைப்பதைப் போல, வாக்களிக்கப் பணம் வாங்கும் மனநிலையைப் போக்கவும் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
  • மக்களாட்சி தத்துவத்தின் முக்கிய அம்சமான தோ்தலில் வாக்கு என்பது நமது உரிமை. அதைத் தவறாது பதிவு செய்வது நமது கடமை. வாக்குக்குப் பணம் வாங்குவது நமக்குச் சிறுமை. இவற்றை நாளைய தலைவா்களான இன்றைய மாணவா்கள் புரிந்துகொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் தோ்தல் விழிப்புணா்வுப் பாடத்தைச் சோ்ப்பது நல்லதுதான்.

நன்றி: தினமணி (05 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories