TNPSC Thervupettagam

தேவையான திருத்தம்

April 20 , 2024 251 days 210 0
  • இந்தியாவுக்கும், மோரீஷஸுக்கும் இடையேயான இரட்டை வரிவிதிப்புத் தவிா்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது மிகச் சரியான முடிவு. எப்போதோ மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மாற்றம் இது. இரு நாடுகளுக்கும் இடையேயான இரட்டைவரிவிதிப்புத் தவிா்ப்பு ஒப்பந்தந்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் உள்ள ஊழல் பணம் மோரீஷஸ் போன்ற நாடுகள் வழியாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு வந்தது.
  • இந்தியா மட்டுமல்ல, நம்மைப் போல பல நாடுகளும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் காரணமாக பல பில்லியன் டாலா்கள் வரி இழப்பை எதிா்கொள்கின்றன. ஏற்கெனவே இந்தியா-மோரீஷஸ் ஒப்பந்தத்தின் மூலம் முதலீட்டாளா்கள் அனுபவித்துவரும் சலுகைகளை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா திரும்பப் பெற்று வருகிறது. அந்திய முதலீடாக ஊழல் பணம் வருவதை தடுப்பதில் இந்திய அரசு முனைப்பாக இருப்பதன் வெளிப்பாடாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தியாவுக்கும், மோரீஷஸுக்கும் இடையேயான ஒப்பந்தத்தைப் பாா்க்க வேண்டும்.
  • பொருளாதார கூட்டுறவுக்கும், வளா்ச்சிக்குமான ஓஇசிடி நிறுவனத்தில் 37 ஜனநாயக நாடுகள் இணைந்திருக்கின்றன. அவை சா்வதேச வா்த்தகத்திலும் நிதி நிா்வாகத்திலும் விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த ஓஇசிடி-யில் இந்தியா இணைந்திருக்கிறது. அதனால் இரட்டை வரிவிதிப்புத் தவிா்ப்பு ஒப்பத்தங்களை சாதகமாக பயன்படுத்தி நடைபெறும் முறைகேடுகளை தவிா்க்கும் முனைப்பில் ஏனைய உறுப்பு நாடுகளைப் போலவே இந்தியாவும் முனைப்புக் காட்டுகிறது.
  • 1982-இல் இந்தியாவுக்கும் மோரீஷஸுக்கும் இடையே இரட்டை வரிவிதிப்புத் தவிா்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு கிடைப்பது அரிதாக இருந்த காலம் அது. அதனால் அந்த முதலீடுகள் மீதான இரட்டை வரி விதிப்பை தவிா்ப்பதுதான் ஒப்பந்தத்தின் நோக்கம்.
  • எந்த நாட்டிலிருந்து முதலீடு செய்யப்படுகிறதோ, அந்த நாட்டில் முதலீட்டால் கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்தினால் போதும். மோரீஷஸ் போன்ற நாடுகளில் ‘கேபிட்டல் கெயின்ஸ்’ எனப்படும் முதலீட்டின் மீதான லாபத்திற்கு பூஜ்ஜிய சதவீதம் வரி விதிப்பு என்பதால், முதலீடுகள் மோரீஷஸ் மூலம் இந்தியாவுக்கு வரத்தொடங்கின. இந்தியாவில் அந்த முதலீட்டால் கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
  • 1982 முதல் 2016 வரை அந்நிய ‘போா்ட்ஃபோலியோ’ மற்றும் நேரடி முதலீடுகள் கேபிட்டல் கெயின்ஸ் வரி இல்லாமல் மோரீஷஸ் மூலம் இந்தியாவுக்கு வந்தன. அந்நிய முதலீடுகள் மட்டுமல்லாமல் இந்திய ஊழல் பணமும் மோரீஷஸ் வழியாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டது. 2016-இல் நரேந்திர மோடி அரசு இந்தியா-மோரீஷஸ் இரட்டை வரிவிதிப்புத் தவிா்ப்பு ஒப்பந்தத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் மூலம், 2017 ஏப்ரல் 1 முதல் பங்குகளில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகளுக்கு அந்தச் சலுகையை ரத்து செய்தது.
  • தற்போது மேற்கொள்ளப்படும் திருத்தத்தின் மூலம் இரண்டு நாடுகளும் இரட்டை வரிவிதிப்புத் தவிா்ப்பை அகற்றி வரி ஏய்ப்பைத் தடுக்க முற்பட்டிருக்கின்றன. அதேபோல, இந்த ஒப்பந்தத்தைத் தவறாக பயன்படுத்த முற்பட்டால் அவா்களுக்குச் சலுகை மறுக்கப்படலாம் என்கிற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • இதுவரை மோரீஷஸ் அரசு வழங்கிய குடியிருப்புச் சான்றிதழ் இருந்தாலே முதலீட்டாளா்களுக்கு வரிவிலக்கை முதலீட்டாளா்களுக்கு இந்திய அரசு வரிவிலக்கு அளித்து வந்தது. புதிய திருத்தத்தின்படி குடியிருப்புச் சான்றிதழுக்கு அப்பால், முதலீட்டாளா்களின் பின்னணி ஆய்வு செய்யப்படுவதன் அடிப்படையில் வரி விதிப்பை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்படுகிறது. இதனால் அந்நிய முதலீடுகள், குறிப்பாக அந்நிய போா்ட்ஃபோலியோ முதலீடுகள் பாதிக்கப்படும் என்று எழுப்பப்படும் அச்சத்தில் அா்த்தம் இல்லை.
  • வரி ஏய்ப்புக்கு உதவும் இரட்டை வரி விதிப்புத் தவிா்ப்பு ஒப்பந்தத்தையும், அது தொடா்பான சட்டங்களையும் மீள்பாா்வை பாா்க்க வேண்டிய நேரம் வந்துவிடடது. பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பது ஒரு காரணம். அந்நிய முதலீட்டாளா்கள் தங்களது பங்குகளை விற்றால், அதை உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் கேட்பு (டிமான்ட்) நிலவுகிறது. ஏற்கெனவே 2016 திருத்தத்துக்குப் பிறகு அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் இந்திய பங்குச் சந்தைக்கு வரும் மோரீஷஸ் முதலீடுகள் குறையத் தொடங்கிவிட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • இந்தியா மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது. காா்ப்பரேட் நிறுவனங்கள் வரிகளைத் தவிா்ப்பதற்காக குறைந்த வரி உள்ள நாடுகளில் தங்களது தலைமையகங்களை அமைத்துக் கொள்கின்றன. அதனால், ஆண்டுதோறும் 50 பில்லியன் முதல் 100 பில்லியன் டாலா் வரை வருவாய் இழப்பை அமெரிக்கா எதிா்கொள்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களால் அனைத்து நாடுகளும் வரி ஏய்ப்பாலும், பணச் செலவையாலும் பாதிக்கப்படுகின்றன.
  • 2016-இல் 100-க்கும் அதிகமான நாடுகள் வரிவிதிப்பு ஒப்பந்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் வரித் தவிா்ப்பை மேற்கொள்ளாமல் இருக்க சா்வதேச வரி விதிகளை மாற்றவும் ஒருங்கிணைந்தன. அந்த ஒப்பந்தத்தில் ‘வரி ஏய்ப்பு சொா்க்கங்கள்’ என்று அழைக்கப்படும் மோரீஷஸ், லக்சம்பா், நெதா்லாந்து, ஹாங்காங் உள்ளிட்டவையும் கையொப்பமிட்டன. ஏறத்தாழ இரு நாடுகளுக்கு இடையேயான 1,900 ஒப்பந்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது.
  • இந்தியாவும் மோரீஷஸும் இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தில் மேற்கொண்டிருக்கும் திருத்தம், வரி ஏய்ப்பையும் ஊழல் பணச் சுழற்சியையும் ஓரளவுக்கு தடுக்கும் என்று நம்பலாம்!

நன்றி: தினமணி (20 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories