- பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பது வேதனை அளிக்கும் செயல்பாடுதான். தேசத்தின் சொத்தாக இருக்கும் நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதா என்கிற உணர்வுபூர்வமான ஆத்திரம் எழத்தான் செய்கிறது.
- அதே நேரத்தில், முறையாக செயல்படாத அரசுத் துறை நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரி கொட்டி முதுகில் சுமக்கத்தான் வேண்டுமா என்கிற அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பாமலும் இருக்க முடியவில்லை.
- மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குறைபாடுள்ள வெடிமருந்தால் 403 விபத்துகள் ராணுவத்தில் நடந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- அந்த வெடிமருந்துகள் ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலைகளால் தயாரிக்கப்பட்டவை. அதனால், 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 160 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
- குறைபாடுள்ள அந்த வெடிமருந்துகளை செயலிழக்கச் செய்து அகற்றுவதில் ரூ.960 கோடி வீணாகியிருக்கிறது. அந்த பணத்தில் 100 நடுத்தர இலகுரக பீரங்கிகளை வாங்கியிருக்கலாம்.
- ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம், பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. புல்கான் விபத்தைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
- ஆனால், ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் தவறுகள் குறித்து எந்தக் குறிப்பும் அதில் இல்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்பு அமைச்சகம் அந்த வழக்கை ராணுவத் தலைமையகத்துக்கு திருப்பி அனுப்பியது மட்டுமல்ல, புல்கான் கிடங்கில் பணியிலிருந்த வீரர்களின் திறமை குறித்து கேள்வியும் எழுப்பியது.
- ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தைக் கேள்வி கேட்க வேண்டியவர்களே அதன் தவறுகளை மூடி மறைக்க முற்படும்போது, அதன் கீழ் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தியின் தரநிர்ணயம் எப்படி பாதுகாக்கப்படும்? புல்கான் விபத்துக்குப் பிறகு ரூ.303 கோடி மதிப்பிலான கண்ணி வெடிகள் வேறுவழியில்லாமல் அழிக்கப்பட்டன.
- நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைகுழுக்களும், கணக்குத் தணிக்கை அதிகாரிகள் குழுவும் பலமுறை ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தைக் குற்றப்படுத்தியிருக்கின்றன.
- நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி அளவை எட்டாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றன. அவற்றின் உற்பத்தித் தரத்தால் ஏற்பட்ட பல விபத்துகள் குறித்துக் கண்டித்திருக்கின்றன.
- ராணுவத்தின் தேவைக்கு ஏற்ப கோரப்படும் எல்லா கொள்முதல் ஆணையையும் வாரியம் ஏற்றுக்கொள்ளுமே தவிர, குறிப்பிட்ட காலத்தில் வழங்குவதில்லை. தரத்தில் குறைவு, எண்ணிக்கையில் குறைவு என்பதெல்லாம் சகஜம். 2013, 2018-க்கு இடையேயான ஐந்து ஆண்டுகளில் வாரியம் ஏற்றுக்கொண்ட கொள்முதல் ஆணையில் 51% முதல் 67% வரை துண்டு காணப்படுகிறது. அதில் பெரும்பாலானவை வெடிமருந்து வகையைச் சார்ந்தவை.
- ராணுவத்தின் தேவைக்கு ஏற்ப குறித்த காலத்தில் தரமான வெடிமருந்துகளை வழங்க முடியாத ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம், அதற்கு சரியான காரணங்களை தெரிவிப்பதும் இல்லை, அது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் கேள்வி எழுப்புவதும் இல்லை.
- ஆர்டிலரி துப்பாக்கிகள், பீரங்கிகள், சிறிய ரக பீரங்கிகள், கண்ணி வெடிகள், வான் நோக்கிச் சுடும் பீரங்கிகள் ஆகியவற்றில் வெடிமருந்து விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வாரியம் கூறுவதுபோல, தயாரிப்புக் குறைபாடு மட்டுமல்லாமல் வெடிமருந்துக் கிடங்குகள், தளவாடங்கள் முறையாகக் கையாளப்படாததுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- ஏனென்றால், இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் செயல்படும் பல்வேறு ராணுவப் பிரிவினர் எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லா நிகழ்வுகளிலும் விசாரணைக்கு உத்தரவிடப்படுமே தவிர, கடைசியில் தளவாட தொழிற்சாலைகள் தங்களுக்கு அதில் தொடர்பு இல்லாததுபோல கை கழுவுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
- இந்தியாவில் ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் கீழ் 41 தளவாட தொழிற்சாலைகள், 24 இடங்களில் இயங்குகின்றன. அவற்றில் சுமார் 82,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். வெளிச்சந்தையில் கிடைக்கும் பொருள்களைக்கூட ராணுவம் சமீபகாலம் வரை வாரியத்திடமிருந்துதான் வாங்கிக் கொண்டிருந்தது.
- தனது தொழிற்சாலைகள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியமும் சலுகைகளும் வழங்க வேண்டும் என்பதற்காகவும் அந்தப் பொருள்களின் விலையை அதிகரித்து ராணுவத்திற்கு வழங்குவதை வாரியம் வழக்கமாகக் கொண்டிருந்தது. ரூ.17 லட்சம் பெறுமானமான அசோக் லேலண்ட் ஸ்டாலியன் வாகனத்தை, ரூ.28 லட்சத்துக்கு ராணுவத்துக்கு வாரியம் வழங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
- ராணுவ வீரர்களுக்கு வழங்கும் உடையிலேயேகூட சட்டைக்கும் பேண்ட்டுக்குமான நிறத்தில் வேறுபாடு காணப்பட்டதால் பலரும் ஆத்திரத்தில் அவர்களே துணி வாங்கி தைத்துக் கொள்ள முற்பட்டனர். கடைசியில், ராணுவம் மொத்தமாகத் துணியை வாங்கி வீரர்களுக்கு வழங்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.
- உலக அளவில் தனியார் துறைதான் ராணுவத்திற்கு தளவாடங்களும், வெடிமருந்துகளும் வழங்குகின்றன. அவற்றின் தரத்தை தட்டிக்கேட்க முடியும், குறித்த காலத்தில் தேவைக்கு ஏற்ப தளவாடங்களைப் பெற முடியும்.
- 82,000 ராணுவ தளவாட தொழிற்சாலை ஊழியர்களின் நலன் பெரிதா, இந்திய ராணுவத்துக்குக் குறித்த நேரத்தில் தரமான வெடிமருந்துகளும், தளவாடங்களும் கிடைப்பது முக்கியமா? அதனால், உடனடியாக ராணுவ தளவாட தொழிற்சாலைகளை அரசுத் துறையிலிருந்து அகற்றி கார்ப்பரேஷன்களாக மாற்றியாக வேண்டும்.
நன்றி: தினமணி (10-02-2021)