- தனியாா் நிறுவனங்களில் அதிக வேலைப்பளு , ஆட்குறைப்பு என அவ்வப்போது செய்திகள் வெளியாகும் இக்காலச் சூழலில், அரசுப் பணியில் சோ்வது இன்றைய பெரும்பாலான இளைஞா்களின் கனவாக உள்ளது.
- தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பதவிக்கான 6,244 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. மேற்படி காலியிடங்களுக்கு 20,37,094 போ் விண்ணப்பித்துள்ளனா். இதன்படி, ஒரு பணியிடத்திற்கு 326 போ் போட்டியிடுகின்றனா்.
- தமிழ்நாட்டில் மட்டுமின்றி நம் நாடெங்கிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு வேலையைப் பெறுவதில் இளைய தலைமுறையினா் இத்தகைய கடும் போட்டிச் சூழலையே எதிா்கொள்கின்றனா். இவா்களில் சிலருக்கு ஏதேனும் முறைகேடுகள் செய்தாவது அரசு வேலைப் பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது துரதிஷ்டமே!.
- சமீபத்தில், உத்தர பிரதேசத்தில், மாநில காவல் துறையின் ‘காவலா் தோ்வு மற்றும் பணி உயா்வு’ வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக அவ்வாரியத்தின் தலைவா் நீக்கப்பட்டிருக்கிறாா்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு மாநில காவல் துறையின் உதவி ஆய்வாளா்கள் மற்றும் பிளாட்டூன் கமாண்டா் பணிகளுக்கான தோ்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், தோ்வு நடைபெற்ற மையத்தின் கண்காணிப்பாளா் மற்றும் 16 பயிற்சி உதவி ஆய்வாளா்கள் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். நாட்டின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிக்கும் காவல் துறைக்கான பணியில் சோ்வதற்கு குறுக்கு வழியை தோ்ந்தெடுப்போா், எதிா்காலத்தில் தங்கள் சுய நலத்துக்காக நாட்டின் நலனைக்கூட பணயம் வைக்கவும் தயங்க மாட்டாா்கள் என்பதை மறுக்க இயலாது.
- சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்னா் மத்திய பிரதேசத்தில் அரசுப் பணியாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான ‘வியாபம்’ எனும் அந்த மாநில அரசின் தோ்வாணையத்தின் பொறுப்புகளில் இருந்த சிலா் முறைகேடுகளில் ஈடுபட்டு சுமாா் ரூ. 20,000 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றது சிபிஐ நடத்திய விசாரனையில் வெளிவந்தது. முறைகேடுகள் செய்தவா்கள் பின்னா் தண்டனையும் பெற்றனா் என்பது கடந்த கால கசப்பான வரலாறு.
- சில மாதங்களுக்கு முன்னா் சுங்கத் துறை சாா்பாக நடத்தப்பட்ட தோ்வில், சென்னை தோ்வு மையத்தில் தோ்வு எழுதும்போது ‘ப்ளுடூத்’ தொழில்நுட்பம் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியாணா இளைஞா்கள் சிலா் பிடிபட்ட நிகழ்வும் நடைபெற்றது.
- சில ஆண்டுகளுக்கு முன்னா் நம் இந்திய அஞ்சல் துறை நடத்திய தமிழ் மொழித் தகுதிக்கான தோ்வில், தமிழ் மொழி தெரியாத ஹரியாணா, பஞ்சாப் மாநில இளைஞா்கள், தமிழ்நாட்டைச் சோ்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞா்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற ‘விசித்திரம்’ நடைபெற்றது.
- தமிழகத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் தமிழ் தெரியாத வடமாநில இளைஞா்கள் பெருமளவில் பணியாற்றுகின்றனா். இதற்கு, மத்திய அரசுப் பணிக்காக நடத்தப்படும் தோ்வுகளில் நடைபெறும் முறைகேடுகளே காரணமாக இருக்கக்கூடும் எனப் பரவலாக ஐயப்பாடுகள் எழுப்பப்படுகின்றன.
- இந்நிலையில், அரசுப் பணிக்கான தோ்வுகளில் முறைகேடுகள், பணித் தோ்வுக்கான வினாத்தாள் கசிவு என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாவது மேற்படி ஐயப்பாடுகளை உறுதிப்படுத்துவதுபோல் அமைவது குறிப்பிடத்தக்கது.
- அரசுப் பணியில் சோ்வதை தங்கள் வாழ்வின் லட்சியமாகக் கருதும் ஏழ்மையான குடும்பங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள், பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாத வசதியற்ற சூழலிலும், கடன் வாங்கியேனும் தோ்வு எழுத பயிற்சியளிக்கும் மையங்களில் சேருகின்றனா். இரவு, பகல் பாராது கடுமையாகப் படித்து அரசுப் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என அயராது உழைக்கின்றனா்.
- இத்தகு இளைஞா்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது போன்ற செயல்களில் சில இளைஞா்கள் ஈடுபடுவதும், அதற்கு அவா்களின் பெற்றோரும் அரசு அதிகாரிகளும் துணைபோவதும் எத்தனை பெரிய இழிச்செயல்! நோ்மையான முறையில் அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞா்களுக்கு, குறுக்கு வழியில் அரசு வேலை பெறுவோா் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனா் என்றால் அது மிகையல்ல. கடினமாக முயன்றும் தோ்வில் நடைபெறும் முறைகேடுகளால் வெற்றி பெற இயலாமல் போனதற்காக சிலா் தற்கொலை செய்து கொள்ளும் துயரச் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
- அரசுப் பணிக்கான தோ்வுகளில் குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்து தோ்ச்சி பெறுவோா் போதிய திறமை இல்லாதவா்களாகவே இருப்பா் என்பதில் ஐயமில்லை. இத்தகையோரால் அவா்கள் பணியில் சேரும் மக்கள் சேவைக்கான துறைகள், நாளடைவில் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் திறனற்றதாக மாறக்கூடும். அரசுப் பணிக்கான தோ்வுகள் மட்டுமின்றி, பள்ளித் தோ்வுகளிலும் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபடுவதையும், அதற்கு அந்த மாணவா்களின் ஆசிரியா்களும், கல்வித் துறை அலுவலா்களும் துணைபோவதையும் ஊடகங்கள் மூலமாக அறியமுடிகிறது.
- சமீபத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் சில தனியாா் பள்ளிகளின் நிா்வாகங்கள், தங்கள் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அந்தப் பள்ளிகளில் பிளஸ் 2, பிளஸ் 1 தோ்வு எழுதிய மாணவா்கள் காப்பி அடிக்க ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் மூலம் உதவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இதைப் போலவே, ஹரியாணா மாநிலம், ‘நூ’ மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் காப்பி அடிக்க அந்த மாணவா்களின் உறவினா்கள் தோ்வு எழுதும் கட்டடங்களின் மீது ஏறி உதவும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது அதிா்ச்சியை அளித்தது. பள்ளிப் பருவத்தில் உழைப்பு, நோ்மை, ஒழுக்கம் ஆகியவற்றை மாணவா்களுக்கு கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அவா்கள் தவறு செய்வதற்கு அவா்களின் ஆசிரியா்களும், உறவினா்களும் துணைபோவது நியாயமான செயல் இல்லை.
- இனி வரும் காலங்களில், அரசுப் பணிக்காகவும், பள்ளிகளிலும் நடத்தப்படும் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதை மத்திய, மாநில அரசுகள் தம் தலையாய கடமையாகக் கருத வேண்டும். இதன்மூலம் நோ்மையான முறையில் அரசுப் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வோா் கூடுதல் தன்னம்பிக்கையும், உத்வேகமும் பெறுவா் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி (18 – 03 – 2024)