TNPSC Thervupettagam

தேவை நிவாரணமல்ல தீா்வு

December 26 , 2023 392 days 257 0
  • சென்னை எண்ணூா் பகுதியில் மிக்ஜம் புயலின்போது வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.8.68 கோடி வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது ஆறுதலாக இருக்குமே தவிர, பிரச்னைக்குத் தீா்வாக இருக்கப் போவதில்லை. அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால், மீனவா்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, பறவைகள், மீனினங்களின் இனப்பெருக்கத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • கனமழை காரணமாக, மணலி பகுதியில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கசிவு, எண்ணூா் முகத்துவாரப் பகுதியில் கலந்ததில் தொடங்கியது பிரச்னை. அந்தப் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள் அனைத்திலும் கச்சா எண்ணெய் படிந்தது.
  • சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகுதான் இந்த நிலைமை நிா்வாகத்தின் கவனத்தையே ஈா்த்தது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் கவனத்தை ஈா்த்து, அது தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகுதான், பிரச்னையின் தீவிரத்தை நிர்வாகம் உணரத் தலைப்பட்டது.
  • அதன் பிறகு எண்ணூா் பாலம் முதல் ரயில்வே பாலம் வரையிலும், பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியிலும் இருக்கும் எண்ணெய்ப் படலங்களை ஆயில் ஸ்கிம்மா்உள்ளிட்ட எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமாா் 1,49,240 லிட்டா் எண்ணெய் கலந்த நீரிலிருந்து 405 டன் எண்ணெய் அகற்றப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.
  • மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (சி.பி.சி.எல்.) இருந்து எண்ணூா் கடற்கழி (க்ரீச்) வரையில் உள்ள 11 கி.மீ. மட்டுமல்லாமல், தெற்கில் காசிமேடு மீன்பிடித் துறைமுகம், வடக்கில் பழவேற்காடு கடற்கழி, ஆயிரக்கணக்கான புலம்பெயா் பறவைகளின் பல்லுயிர்ப் பெருக்க மையமான பழவேற்காடு ஏரி என்று புயல் வேகத்தில் எண்ணெய்க் கசிவு பரவியது. அதைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிற மாநில அரசு, சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலா்களின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
  • சென்னை மாநகரத்தின் தண்டையார்பேட்டையில் உள்ள சில பகுதிகளில், தங்கள் வீடுகளில் எண்ணெய்க் கசிவு படிந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு எண்ணெய்க் கசிவு வெளியேறி இருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுதான் இதற்குக் காரணமா, இல்லை அதுவும்கூடக் காரணமா என்கிற விவாதமும் எழுந்திருப்பதில் இருந்து, முறையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் இல்லை என்று தெரிகிறது.
  • எண்ணெய்க் குழாய்களின் கசிவோ, பெரிய அளவிலான எண்ணெய் வெளியேற்றமோ எங்கள் நிறுவனத்தில் ஏற்படவில்லை. சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த எண்ணெய்க் கசிவுகள் வெள்ளத்தில் கலந்திருக்கும் வாய்ப்பு வேண்டுமானால் இருக்கலாம்என்கிற சி.பி.சி.எல்.-இன் விளக்கம் விசித்திரமாக இருக்கிறது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் எண்ணெய்க் கசிவுகள் டன் கணக்கிலா இருந்துவிடும்?
  • சி.பி.சி.எல். அல்லாமல், மணலி பகுதியில் செயல்படும் 25-க்கும் அதிகமான ஏனைய நிறுவனங்களும் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்கிற சி.பி.சி.எல். நிறுவனத்தின் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டியது. கடந்த பல ஆண்டுகளாகவே, மணலி பகுதியில் செயல்படும் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அந்தப் பகுதி மக்களும், ஆா்வலா்களும் குரலெழுப்பி வருகின்றனா். சி.பி.சி.எல் உள்ளிட்ட 17 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்களும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கியமான காரணிகள்.
  • மாநில அரசின் எண்ணூா் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலும், வெளியேற்றப்படும் சூடான நீரும் எண்ணூா் கடற்கழியில் கலக்கின்றன. 2017-இல் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குழாய்கள் அமைத்து படிந்து கிடக்கும் சாம்பல்களை அகற்ற உத்தரவிட்டும், எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 1996 கடற்கரைப் பகுதி மேலாண்மை திட்டம், கடற்கழிச் சூழலியல் அமைப்பு ஆகியவற்றின் மூலம் எண்ணூா் நீா்ப்பிடிப்புப் பகுதியைப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. அதுவும் மறக்கப்பட்டிருக்கிறது.
  • 2010 ஏப்ரல் மாதம் அமெரிக்கக் கடற்கரைப் பகுதியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய டீப் வாட்டா் ஹோரைசான் எண்ணெய்க் கசிவு, உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்று. 43,000 சதுர மைல்கள் எண்ணெய்க் கசிவு பரந்துப் படா்ந்தது. அதற்குக் காரணமான பி.பி. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் 20.8 பில்லியன் டாலா் (சுமார் ரூ. 1.73 லட்சம் கோடி) பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக வழங்கியது மட்டுமல்ல, விரைவாக வழங்குவதை அமெரிக்க அரசு உறுதியும் செய்தது. அந்த நிகழ்வை இப்போது ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.
  • அதுபோன்று சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டையும் , தொழிற்சாலைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான அதிகாரமுள்ள ஒழுங்காற்று அமைப்பு இந்தியாவில் இல்லை. நீதிமன்றத் தீா்ப்புகளும், மதிக்கப்படவில்லை; பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுகளும் பின்பற்றப்படவில்லை; பல்லுயிர் பெருக்கப் பகுதி என்கிற அக்கறையும் இல்லை; மக்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையும் இல்லை.
  • எண்ணூரின் தேவை இடைக்கால நிவாரணமல்ல; நிரந்தரத் தீா்வு!

நன்றி: தினமணி (26 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories