TNPSC Thervupettagam

தேவை வாழ்வாதார நீட்டிப்பு

July 16 , 2020 1650 days 849 0
  • கரோனா தீநுண்மி பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை இழந்து மீண்டும் தங்கள் கிராமங்களுக்கே திரும்பிய லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு, தற்போது உயிர்நாடியாகத் திகழ்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்.

  • இதுமட்டுன்றி பள்ளிகளும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் திறக்கப்படாததால் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த தனியார் பள்ளி ஆசிரியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் இத்திட்டத்தின்கீழ் தொழிலாளர்களோடு இணைந்து வாய்க்கால்களைத் தூர்வாருதல், சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  • இடைத்தரகர்களின் குறுக்கீடு இன்றி, கிராம பஞ்சாயத்துகளால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 4 கோடியே 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலைவாய்ப்பை நல்கும் இத்திட்டத்தின் மூலம் அன்றாடம் ரூ. 200 கூலியாக வழங்கப்படுகிறது.

நூறு நாள் வேலை திட்டம்

  • கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நிகழாண்டில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களிலேயே ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்பத்தினர் திட்டத்தின் உச்சவரம்பான நூறு நாள்களை நிறைவு செய்துள்ளனர்.

  • 23 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் 60 வேலை நாள்களை பூர்த்தி செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஏழு லட்சம் குடும்ப உறுப்பினர்கள் 80 வேலை நாள்களைக் கடந்து திட்டக் கால வரையறையின் விளிம்பில் நிற்கின்றனர்.

  • அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 60 ஆயிரம் குடும்ப உறுப்பினர்களும், ஆந்திரத்தில் 24,500 குடும்பத்தினரும் நூறு நாள் வேலை திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக மத்திய அரசின் திட்டத் தரவு குறிப்பிடுகிறது.

  • நிகழாண்டில், பருவமழை கணிசமான அளவு பொழியக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்கள், தற்போது நூறு நாள் வேலைத் திட்டத்தின் விளிம்பில் நிற்பதால், ஆண்டு இறுதியில் விவசாயப் பணிகளும் நிறைவடையும் பட்சத்தில், அவர்கள் சொல்லொணாத் துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

  • அதிலும் குறிப்பாக, விவசாயப் பணிகளைக் கூட பெற இயலாத முதியோர், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியின மக்கள், ஆதரவற்ற பெண்களின் ஆகியோரின் நிலைமை சொல்லும் தரமன்று.

மத்திய அரசின் கவனம் வேண்டும்

  • இந்தத் திட்ட விதிமுறைப்படி, வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் மாவட்டங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், பொதுமக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில், நூறு வேலை நாள்களை நூற்றைம்பது நாள்களாக அதிகரித்துக் கொள்ளலாம்.

  • அந்த வகையில், கரோனா தீநுண்மி ஏற்கெனவே தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டிருப்பதால், நிகழாண்டில் ஏழை, எளிய மக்கள் எஞ்சியிருக்கும் நாள்களை எதிர்கொள்ளும் வகையில், வேலை நாள்களை குறைந்தது இருநூறு நாள்களாகவாவது உயர்த்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

  • மேலும், நிகழாண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.38 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில், ஏற்கெனவே 70 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டுவிட்டது.

  • தற்போது கிராமப்புறங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எஞ்சிய 30 சதவீத தொகை, அதாவது எட்டாயிரம் கோடி ரூபாய் என்பது யானைப் பசிக்கு சோளப் பொரியாகத்தான் இருக்கும். ஆகையால், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன், அதை காலதாமதமின்றி விடுவிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

  • இந்தத் திட்டத்தின்படி, விண்ணப்பித்த நபர்களுக்கு அடுத்த 15 நாள்களில், அவர்களது இருப்பிடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதி.

  • இல்லையென்றால், விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தொகை அலவன்ஸ் பெற உரிமம் பெற்றவர்கள் ஆவர். அந்த வகையில், நிகழாண்டில் விண்ணப்பித்த 8 கோடியே 7 லட்சம் பேரில், 6 கோடியே 25 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட அலவன்ஸ் வழங்கப்படவில்லை.


 


 

கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்

  • வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளின் துயர் துடைப்பதில் ஈடு இணையற்ற பங்காற்றும் இதுபோன்ற திட்டங்களை பலப்படுத்த வேண்டிய இத்தருணத்தில், பிகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு உட்பட்ட 116 மாவட்டங்களில், தலா 25 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், "கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்' எனும் புதிய திட்டத்தை ரூ. 50 ஆயிரம் கோடியில் மத்திய அரசு கடந்த மாத இறுதியில் தொடங்கிவைத்தது.

  • இத்திட்டத்தின்கீழ் 25 வகையான வேலைகள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், இதில் பெரும்பாலானவை ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திலும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

  • அதிலும் குறிப்பாக, மேற்கண்ட ஆறு மாநிலங்களில் மட்டும் இத்திட்டத்தின் வாயிலாக கடந்த நிதியாண்டில் தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் அதிகபட்சமாக 53.5 சதவீத மகளிர் பயனடைந்துள்ளனர்.

  • தற்போது, "கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்' திட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில், பெண்களைப் புறந்தள்ளி இந்தத் திட்ட நடைமுறையை நீர்த்துப் போக செய்துவிடக் கூடாது.

  • மேலும், இத்திட்டத்தின் முழு திறனையும் பயன்படுத்தும் வகையில், வேலை நாள்களை, குறைந்தது 200 ஆக உயர்த்தி, வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அலவன்ஸ் தொகையை காலதாமதமின்றி விடுவித்து, நிலுவைத் தொகையைப் போர்க்கால அடிப்படையில் விடுவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டினால் ஏழைகளின் வாழ்வு புத்துயிர் பெறும்.

நன்றி: தினமணி (16-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories