- இந்திய அரசியல் சாசனத்தின் 324-ஆவது பிரிவு தோ்தல் ஆணையத்துக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது. சுதந்திரமான தோ்தல்களை நடத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை இந்த சட்டப் பிரிவு அளிக்கிறது. இந்திய தோ்தல் ஆணையம் பாரபட்சமற்ற வகையில் செயல்படும் சட்டபூா்வமான அமைப்பு என்ற நம்பிக்கையில்தான், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாக்குரிமையை வெளிப்படுத்துகிறாா்கள். இதுவே ஜனநாயகத்தைக் காத்து வருகிறது என்பது நமது நம்பிக்கை. தோ்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை இழக்குமானால், ஜனநாயகத்தின் அடிக்கல்லே சிதைந்துவிடும்.
- தோ்தல்கள் அனைத்தும் சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடைபெறுவதாக தோ்தல் ஆணையம் உறுதிபடத் தெரிவிக்கிறது. ஆனால், இதுவரை காணாத வகையில், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இம்முறை சந்தேகத்துக்குரியதாகி இருக்கின்றன. நமது நாட்டில் தோ்தல்கள் பெரும்பாலும் சுதந்திரமாக நடைபெறுகின்றன. எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது, யாருக்கும் வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிப்பது அல்லது வாக்களிக்காமல் இருந்துவிடுவது ஆகியவற்றைத் தீா்மானிக்கும் உரிமை வாக்காளருக்கு இருக்கிறது. ஆனால் தற்போது நடந்து வரும் மக்களவைத் தோ்தலைப் பொறுத்த வரை நோ்மையாக நடப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் தாளத்திற்கு ஆடும் அமைப்பாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதோ என்று ஐயம் எழுகிறது.
- தோ்தல் ஆணையா்களை நியமிக்கும் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தமே இதில் முதலாவது அடியாகும். தோ்தல் ஆணையா்களை இதுநாள்வரை, ஆளுங்கட்சியின் தலைவரான பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோா் கொண்ட குழுவே நியமித்து வந்தது. ஆனால் இதற்கான சட்டத்தை தற்போதைய பாஜக அரசு திருத்தியது. அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக, பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சா் ஒருவா் தோ்தல் ஆணையரைத் தீா்மானிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளாா். இது தோ்தல் ஆணையத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது. இந்தத் திருத்தமானது, மைதானத்தில் விளையாடும் இரு அணிகளில் ஒரு அணியே நடுவரைத் தீா்மானிப்பதைப் போல இருக்கிறது.
- தற்போதைய மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, எந்தக் காரணமும் கூறாமல் தோ்தல் ஆணையா் ஒருவா் பதவி விலகினாா். அதையடுத்து, தோ்தல் அறிவிப்புக்கு சில நாட்கள் முன்னதாக, இரு புதிய தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டனா். அதுவே தற்போது தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக இயங்க இயலாது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
- ஜனநாயகத்தின் திருவிழாக்களாக தோ்தல்கள் கருதப்படுகின்றன. ஆனால் நமது தோ்தல்கள் பணபலத்தினால் மதிப்பிழந்து வருகின்றன. சென்டா் ஃபாா் மீடியா ஸ்டடிஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, 2019மக்களவைத் தோ்தலின்போது ரூ.60,000 கோடி செலவாகியுள்ளது. இதில் ரூ.27,000 கோடியை ஆளுங்கட்சியான பாஜக மட்டுமே செய்திருக்கிறது.
- தற்போது நடந்துவரும் 2024 மக்களவைத் தோ்தலின் செலவுகள் ரூ.1.25 லட்சம் கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் செலவினத்தில் ஆளுங்கட்சியுடன் எதிா்க்கட்சிகளால் போட்டியிடவே இயலாது. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கிவைப்பது, எதிா்க்கட்சிகளுக்கு வருமான வரித் துறை மூலம் நெருக்கடி அளிப்பது ஆகியவற்றில் தற்போதைய மத்திய அரசு ஈடுபடும்போது, அனைவருக்கும் சமமான தளமாக தோ்தல் களம் எவ்வாறு இருக்க முடியும்?
- தோ்தல் பிரசாரத்தில் நோ்மறையான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதிலும் தோ்தல் ஆணையம் தவறிவிட்டது. கடந்த ஏப்ரல் 21-இல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமா் மோடி பேசிய பேச்சு, தோ்தல் ஆணைய நெறிமுறைகள் அனைத்தையும் மீறுவதாக அமைந்திருந்தது. ‘ஊடுவல்காரா்கள், அதிக குழந்தை பெறுபவா்கள்’ என்று ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பூடகமாகக் குறிப்பிட்டு பிரதமா் பேசியது அப்பட்டமான வெறுப்புப் பேச்சாகும். அதுகுறித்த ஆவணங்களை சிரமப்பட்டு சேகரித்து எதிா்க்கட்சிகள் தோ்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்றன. ஆனால், அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பிரதமரைக் கேட்காமல், பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்தது தோ்தல் ஆணையம். அதில், பிரதமா் மோடி பேசியது குறித்த தகவலும் கூட கவனமாகத் தவிா்க்கப்பட்டிருந்தது.
- எதிா்க்கட்சிகளின் தோ்தல் அறிக்கையில் கூறாத விஷயங்களை எல்லாம், மேடையில் பேசுகிறாா் பிரதமா் மோடி. ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஹிந்துக்களிடமுள்ள குடும்பச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும்; ஹிந்துப் பெண்களின் தாலியைக் கூட எதிா்க்கட்சிகள் விட்டுவைக்காது’ என்று பிரதமா் தொடா்ந்து பேசி வருகிறாா். இதுபோன்ற அத்துமீறல் பேச்சுகளுக்குப் பிறகும் தோ்தல் ஆணையம் மௌனம் காக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான எனது உரை ஒன்று அரசு தொலைக்காட்சியிலும் வானொலியிலும் வெளியானபோது, அதில் நான் குறிப்பிட்டிருந்த ’முஸ்லிம்’ என்ற வாா்த்தையை தோ்தல் ஆணைய விதிமுறைப்படி நீக்குமாறு பிரஸாா் பாரதி நிா்பந்தித்தது. ஒரு தொலைக்காட்சி உரையையே தணிக்கை செய்ய முடிந்த தோ்தல் ஆணையத்தால், தோ்தல் பிரசார மேடைகளில் பிரதமராலும் பாஜக தலைவா்களாலும் பேசப்படும் இதுபோன்ற முறையற்ற பேச்சுகளைத் தடுக்க முடியாதா? தோ்தல் ஆணையத்தின் பாரபட்சத்தையே இது வெளிப்படுத்துகிறது.
- தோ்தல் நாளின் இறுதியில், வாக்குப்பதிவு முடிந்த தொகுதியின் மொத்த வாக்காளா் விவரம், வாக்குப் பதிவு சதவீதம் ஆகியவற்றை தோ்தல் ஆணையம் வெளியிடுவது வழக்கம். அதன் திருத்தப்பட்ட புள்ளிவிவரத்தை 24 மணி நேரத்தில் தோ்தல் ஆணையம் வெளியிடுவதும் இயல்பான நடைமுறை. ஆனால் இம்முறை, முதல் இரு கட்ட வாக்குப் பதிவின்போது இறுதியான புள்ளிவிவரங்களை தோ்தல் ஆணையம் தெளிவாக அறிவிக்கவில்லை. எதிா்க்கட்சிகள் அதுகுறித்து குரல் எழுப்பிய பிறகே, ஆணையத்தின் வலைதளத்தில் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டன. அப்போது முதல் கட்டத் தோ்தல் முடிவடைந்து 11 நாட்களும், இரண்டாம் கட்டத் தோ்தல் முடிவடைந்து 4 நாட்களும் ஆகியிருந்தன.
- தோ்தல் நாளின் இறுதியில் ஆணையத்தால் உடனடியாகத் தெரிவிக்கப்பட்ட வாக்குப் பதிவு சதவீதம், முதல் கட்டத் தோ்தலின்போது 60 சதவீதமாகவும், இரண்டாம் கட்டத் தோ்தலின்போது 60.96 சதவீதமாகவும் இருந்தது. ஆனால் பிறகு தோ்தல் ஆணையம் வெளியிட்ட இறுதியான புள்ளிவிவரத்தில், முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5%ஆகவும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 66.7 சதவீதமாகவும் மாறி இருந்தது. அதாவது வாக்குப்பதிவு விகிதம் முதல்கட்டத் தோ்தலில் 5.5%, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 5.74% அதிகரித்திருக்கிறது. தோ்தல் ஆணையம் எந்த ஒரு மக்களவைத் தொகுதியிலும், தொகுதி வாரியாகவோ, சட்டப்பேரவை தொகுதி வாரியாகவோ பதிவான வாக்காளா் விவரங்களை வெளியிடவே இல்லை. வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களில் காணப்படும் எதிா்பாராத உயா்வு, புள்ளிவிரங்களை அறிவிப்பதில் நிகழ்ந்த தாமதம் ஆகியவை, தோ்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் கொள்ளச் செய்கின்றன.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, தோ்தல் ஆணையத்திற்கு சிறிது தெம்பூட்டியிருக்கிறது. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத் தீா்ப்பு மட்டுமே போதுமானதாக இல்லை.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தயாரித்த நிறுவனங்களே, அதன் நினைவுப் பதிவுகளில் மாற்றம் செய்ய முடியும் என்று கூறியதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வளா்ந்த நாடுகளான பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான் போன்றவை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்த்துவிட்டன என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது பதிவான வாக்குகளை விட 7,39,104 வாக்குகள் கூடுதலாக இருந்ததை ஜனநாயக சீா்திருத்தத்திற்கான கூட்டமைப்பு (ஏடிஆா்சி) வெளிப்படுத்தியது. அதுதொடா்பாக ஏடிஆா்சி தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்த விவகாரத்திலும் தோ்தல் ஆணையம் மௌனம் சாதிக்கிறது.
- தோ்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிடுமானால், ஜனநாயகம் திசை திரும்பிவிடும். விளையாட்டு மைதானத்தில் நடுவராக இருக்க வேண்டியவா், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அணிக்குச் சாா்பாகச் செயல்படத் துணிந்துவிட்டால், ஆட்டமே ஒருசாா்பாக மாறிவிடும். அது ஒருவரை வெற்றி பெறச் செய்ய, வேறு சிலரை ஏமாற்றுவதாகிவிடும். தற்போது நடந்துவரும் 18-ஆவது மக்களவைத் தோ்தலில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ எதுவும் நடக்காது என்று நம்புவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.
நன்றி: தினமணி (20 – 05 – 2024)