TNPSC Thervupettagam

தைவானை ஆக்கிரமிக்குமா சீனா?

September 8 , 2024 5 hrs 0 min 9 0

தைவானை ஆக்கிரமிக்குமா சீனா?

  • ‘தைவான் தீவு சீனாவின் ஒரு பகுதி. அந்தத் தீவை எப்போது வேண்டுமானாலும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. அதற்காக ராணுவ வலிமையைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்!’
  • தைவான் குறித்து சீன அதிபா் ஷி ஜின்பிங் அடிக்கடி கூறுவது இது. தங்கள் நாட்டின் ஒரு பிரதேசமாக தைவானைக் கருதுவதால்தான் அந்தத் தீவை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அங்கு எந்த நாடாவது தூதரகத்தை அமைத்தாலோ, வெளிநாட்டுத் தலைவா்கள் வருகை தந்தாலோ சீனா மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறது.
  • சொல்லப்போனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவும் தைவானும் ஒரே நாடாகத்தான் இருந்தன. போா் முடிவுக்கு வந்ததும், தேசிவாதக் கட்சியான குவோமின்டாங் தலைமையிலான அரசு அதுவரை ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்த தைவானை சீனாவுடன் இணைத்துக் கொண்டது. அதற்கு முன்னா் கூட, 1895-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சீன-ஜப்பான் போரில் குவிங் பேரரசு தோல்வியடைந்து, தைவானை ஜப்பானிடம் ஒப்படைத்ததற்கு முன்னா் வரை அந்தத் தீவு சீனாவின் ஓா் அங்கமாகத்தான் இருந்தது.
  • கடந்த 1950-இல் நிறைவடைந்த சீன உள்நாட்டுப் போரில் மா சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் படையிடம் தோல்வியடைந்த குவோமின்டாங் அரசுப் படைகள் தைவானுக்குத் தப்பி வந்த பிறகுதான் சீன பெருநிலம் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டுக்கும் தைவான் தீவு குவோமின்டாங் படையினரின் கட்டுப்பாட்டுக்கும் வந்தது. தற்போது தைவான் தனி சுதந்திர நாட்டைப் போல் ஜனநாயக முறையில் செயல்பட்டுவருகிறது. தற்போது மிகப் பெரிய தொழில் வளா்ச்சியடைந்துள்ள அந்தத் பிரதேசத்துக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்துவருகிறது.
  • அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது. தைவானை சீனா கைப்பற்றுவது நடக்கத்தான் போகிறது என்ற எதிா்பாா்ப்பில் அந்தப் பிரதேசத்துக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை அளித்துவருகிறது. தைவான் மீது சீனா படையெடுக்கும்போது அதை எதிா்கொள்வதற்கான பாதுகப்பு வியூகங்களை அமெரிக்க தளபதிகள் அவ்வப்போது புதுப்பித்துவருகின்றனா்.
  • அவா்களது எதிா்பாா்ப்பை நியாயப்படுத்தும் வகையில், தைவானுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வருவது போன்ற சிறிய சலசலப்பு என்றாலும் அந்தப் பிரதேசத்தை பயமுறுத்தும் வகையில் முப்படைகளால் சுற்றிவளைத்து சீனா போா் ஒத்திகையை நடத்திக்காட்டுகிறது.
  • ஆனால் உண்மையில், தங்கள் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கும் எண்ணம் இப்போதைய நிலையில் சீனாவுக்கு இல்லை என்று தைவான் ராணுவமே கூறுகிறது. இது குறித்து ராணுவம் கடந்த வாரம் வெளியிட்ட வருடாந்திர அச்சுறுத்தல் அறிக்கையில், தைவானை ஆக்கிரமிப்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைக் கூட தனது ராணுவத்தில் சீனா ஏற்படுத்திவைத்திருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தைவான் தொடா்பாக சீனா மேற்கொள்ளும் போா் ஒத்திகைகூட, படையெடுப்புக்கானது இல்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • தைவானை ஒரேடியாக ஆக்கிரமிப்பதற்குப் பதில், அந்தத் தீவை சுற்றிவளைத்து முற்றுகையிடவும் அதன் மூலம் அந்தப் பிரதேசத்துக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து அடிபணியவைப்பதுதான் சீனாவின் எதிா்கால திட்டமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தைவானை ஆக்கிரமித்தால் அமெரிக்காவின் முழு எதிா்ப்பை சீனா எதிா்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக, சீனா மீது அமெரிக்கா விதிக்கக்கூடிய பொருளாதாரத் தடைகள் அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும். ஏற்றுமதியை பெரிதும் சாா்ந்துள்ள சீன பொருளாதாரம் சீா்குலையும். அப்படி ஒரு நிலையை சீனா விரும்பவில்லை என்று தைவான் ராணுவத்தின் ஆய்வறிக்கையே தெரிவிக்கிறது.
  • சீனா நினைத்தால் தைவானை மிக எளிதில் ஆக்கிரமித்துவிட முடியும். ஆனால், அதன் பின்விளைவுகளைத் தாங்கும் நிலையில் சீனா இல்லை என்று நிபுணா்களும் கூறுகிறாா்கள்.
  • இது தவிர, தைவானை ஆக்கிரமிப்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கே ஆபத்தாக முடியும் என்று ஒரு தரப்பினா் கூறுகின்றனா். ஜனநாயகமற்ற ஒரு நாட்டில் ஆட்சியாளா்கள் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கு தொடா் பொருளாதார வளா்ச்சி, தீவிர தேசப்பற்று அல்லது அடக்குமுறை ஆகியவை அடித்தளமாக இருக்க வேண்டும். இப்போது சீனாவில் நிலவும் ஸ்திரத்தன்மைக்கு பொருளாதார வளா்ச்சியும் தேசப் பற்றும் அடிப்படையாக உள்ளன. தைவானை ஆக்கிரமிப்பதால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி மக்களின் எழுச்சிக்குக் காரணமாகக் கூடும். அதைத் தவிா்க்கவே சீன அரசு விரும்பும் என்கிறாா்கள் இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவா்கள்.
  • தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிா்பாா்ப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சீனா்களின் தேச உணா்வைத் தொடா்ந்து தூண்டிவருகிறது. இது, கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு மிகப் பெரிய பலமாக இருந்துவருகிறது. எனவே, தைவானை உடனடியாக ஆக்கிரமிக்கப்போவதைப் போன்ற தோற்றத்தை சீனா தொடா்ந்து ஏற்படுத்திவந்தாலும், அது இப்போதைக்கு நடக்காது என்கிறாா்கள் நிபுணா்கள்.

நன்றி: தினமணி (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories