TNPSC Thervupettagam

தொடரட்டும் நடமாடும் மருத்துவ முகாம்கள்

November 16 , 2021 984 days 585 0
  • ஒரு வார காலத்துக்கும் மேலாக நீடித்த பெருமழையால் தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
  • தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவாமல் முன்கூட்டியே தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.
  • இது தொடர்பில், நிவாரணப் பணிகளில் பங்கெடுத்துவரும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ள தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளார்.
  • கடந்த நவம்பர் 13 அன்று ஒரே நாளில் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 5,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
  • சென்னைக்கு வெளியே பெருமழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • இத்தகைய முகாம்களுக்குத் தேவை இருக்கும்பட்சத்தில், தொடர்ந்து நடத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஒருங்கிணைத்த அனுபவங்கள் இதற்கு உதவியாக அமையக்கூடும்.
  • வாராந்திர விடுமுறை நாட்களில், பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்துவதற்குத் தலைமைச் செயலாளர் அளித்த யோசனை பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
  • இதுவரையில் எட்டு சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதுபோல, மழைக்கால மருத்துவ முகாம்களும் மழைப் பாதிப்புகள் நீங்கும் வரை தொடர வேண்டும்.
  • வெள்ளப் பாதிப்புப் பகுதிகளுக்குப் பொதுமக்கள் தேவையில்லாமல் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலாளர், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் பாம்புக் கடி ஊசிகள் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
  • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழைக்காலத்தில் எதிர்கொள்ளும் ஆபத்துகளில் பாம்புகளும் ஒன்று. புறநகர்ப் பகுதியின் தண்ணீர் தேங்கும் இடங்களில் பாம்புகள் குறித்த அச்சம் நிலவுகிறது.
  • அரசு இத்தகைய விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது என்பது பாராட்டுக்குரியது. எனினும் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த முதியவர், ஏசியை சுத்தம் செய்ய அதன் உள்ளே கையை விட்டபோது பாம்பு கடித்து பலியானது துயரகரமானது.
  • இதுபோன்ற தருணங்களில் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டுமானால் அவசியம் அரசு எந்தெந்த மருத்துவமனைகளிலெல்லாம் பாம்புக் கடி மருந்து இருக்கிறது என்பதைப் பரவலாகத் தெரியப்படுத்துவது முக்கியம்.
  • அவசரத் தொலைபேசிச் சேவை, அவசர ஊர்திச் சேவை, அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரச் சேவை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை ஆயத்த நிலையில் இருந்தாலும் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்கேற்பே முக்கியமானது.
  • பாதுகாப்பான அல்லது காய்ச்சி வடித்த குடிநீரே மழைக்காலங்களில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவும்.
  • தொற்று அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அரசின் மருத்துவச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரியிருக்கும் தலைமைச் செயலாளர், உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கும் நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் சுத்திகரிப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்.
  • அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்குத் திரும்பியிருக்கும் இந்த வேளையில் அவர்களுக்குப் பாதுகாப்பான தண்ணீர் வழங்குவது அவசியம்.
  • தேங்கி நிற்கும் நீர் முற்றிலுமாக வெளியேறி இயல்பு வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்கும் வரை, அருந்தும் நீரிலும் பயன்படுத்தும் நீரிலும் கவனமாக இருப்பதே நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories