தொடரும் குழந்தைத் தொழிலாளர் முறை
- சமீபத்தில், டெல்லியில் இரண்டு தொழிற்சாலைகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தினமும் 14-15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட இக்குழந்தைகளுக்கு மிகக் குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது.
- போதிய உணவு, உறக்கம் இல்லாமல் தொழிற்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் உடலில் காணப்பட்ட காயங்கள் தலைநகரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. டெல்லி மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இருக்கிறது.
வரையறையும் காரணங்களும்:
- இந்தியாவைப் பொறுத்தவரை 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம். எனினும், குழந்தைகள் செய்யும் அனைத்து வேலைகளும் குழந்தைத் தொழிலாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக, குழந்தைகள் தமது திறன்களை வளர்த்துக்கொண்டு தங்களின் எதிர்காலத்துக்கு உதவும் வேலைகளைச் செய்யும்போது அவர்கள் குழந்தைத் தொழிலாளர் என்கிற வரையறைக்குள் வருவது இல்லை.
- மாறாக, குழந்தைகளின் உடல்-மன நலம், சுதந்திரம், பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது குழந்தைத் தொழிலாளர் முறையாகும். இந்த அளவீட்டின்படி, பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுரங்கம், பண்ணை வேலைகள், செங்கல் சூளை, பீடித் தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாகக் கருதப்படுவர்.
- குழந்தைகளைப் பாலியல் தொழிலில் தள்ளுவது, ஆபாசப் படங்களில் நடிக்கவைப்பது, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுத்துவது, பயங்கரவாத அமைப்புகளில் சேர்ப்பது போன்றவையும் குழந்தைத் தொழிலாளர் முறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- குழந்தைகள் மோசமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது குடும்பத்தில் நிலவும் வறுமை. பெரும்பாலான குழந்தைகள் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்வி கற்க வேண்டிய வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இரண்டாவதாக, ஆதரவற்ற சிறுவர்களும் பெற்றோரிடமிருந்து பிரிய நேர்ந்த சிறுவர்களும் சமூக விரோதிகளால் கடத்தப்பட்டு இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
உலக நிலவரம்:
- சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு 2013இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 26.5 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். அதாவது, உலக மக்கள்தொகையில் 18 வயதுக்கு உள்பட்டவர்களில் 17% பேர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.
- உகாண்டா, கானா, நைஜீரியா, தான்சானியா, கென்யா, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா போன்ற சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். பொருளாதாரத்தில் பின்தங்கிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட மக்களின் எண்ணிக்கை ஆப்ரிக்காவில் அதிகம். தவிர போர், அரசியல் நிலையின்மை போன்ற காரணங்களாலும் அங்கு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தெற்காசியா, மத்தியக் கிழக்கு நாடுகள், வட அமெரிக்க நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் கணிசமான அளவில் இருப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்திய நிலவரம்:
- தெற்காசியாவில் குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்களில் 55 லட்சம் பேர் சிறுவர்கள், 45 லட்சம் பேர் சிறுமிகள். உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.
- 2022இல், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் தெலங்கானா முதலிடத்திலும், அசாம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
சட்டமும் தண்டனையும்:
- குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், அதிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வை வழங்கிடவும் இந்திய அரசு பல்வேறு சட்டங்களை வகுத்துள்ளது.
தொழிற்சாலைகள் சட்டம், 1948:
- இந்தச் சட்டம் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவதைத் தடைசெய்கிறது. இதில் குடும்பத் தொழில்கள், சினிமா போன்ற பொழுதுபோக்குத் துறைகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
- குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடுப்பு மற்றும் ஒழுங்காற்றுதல்) 1986: இச்சட்டமானது, ஆபத்தானவை (பீடி, பட்டாசு, வேதித் தொழிற்சாலை) என வரையறுக்கப்பட்டுள்ள வேலைகளில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடைசெய்கிறது.
சிறார் நீதிச் சட்டம், 2000:
- இச்சட்டம் குழந்தைகளை அபாயகரமான வேலையிலும் அடிமைத்தனத்திலும் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என வரையறுக்கிறது.
இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், 2009:
- இந்தச் சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இலவச, கட்டாயக் கல்வி பெறுவதை உறுதிசெய்வது அரசின் கடமை. இந்தச் சட்டங்கள், குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வகைசெய்கின்றன. மேலும், ரூ.25,000 முதல் ரூ.50,000வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
சமூக - பொருளாதாரப் பாதுகாப்பு:
- 2025க்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க ஐ.நா. அவை இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் குழந்தைகள் கல்வி, உணவு, ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறத் தகுதியானவர்கள். அனைத்துக் குழந்தைகளுக்கும் இவற்றை உறுதிப்படுத்தி சமூக, பொருளாதாரப் பாதுகாப்பில் நிறைவை அளிப்பதன் மூலமே குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 08 – 2024)