TNPSC Thervupettagam

தொடரும் தீவிரவாதம்

May 9 , 2024 243 days 210 0
  • சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 35 நக்ஸல்கள் சரணடைந்திருக்கின்றனர். நக்ஸல்கள் மறுவாழ்விற்காக மாநில அரசால் தொடங்கப்பட்ட "வீடுகளுக்குத் திரும்புங்கள்' என்கிற முன்னெடுப்பின் விளைவாக, தங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தெற்கு பஸ்தர் பகுதிகளிலுள்ள பைரம்கர், மலன்கர், கதேகல்யாண் மாவோயிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிலரும் சரணடைந்திருக்கிறார்கள்.
  • சாலைகளில் குழிகள் தோண்டி தடை ஏற்படுத்துதல், மரங்களை வெட்டுதல், போராட்டங்களுக்காக பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் மலைவாழ் மக்கள் சிலரும் சரணடைந்தவர்களில் அடக்கம். 16 வயது சிறுமி, 18 வயது சிறுவன் ஆகியோரும் சரணடைந்திருப்பது எந்த அளவுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் வேரூன்றியிருக்கிறது என்பதன் அடையாளம்.
  • முந்தைய பூபேஷ் பகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 180 நக்ஸல்கள் உள்பட தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய 796 பேர் சரணடைந்திருக்கிறார்கள்.
  • பாஜக தலைமையிலான ஆட்சி சத்தீஸ்கரில் அமைந்தது முதல் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
  • 3 பெண்கள் உள்பட 10 மாவோயிஸ்டுகள் கடந்த வாரம் நாராயண்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு ஏப்ரல் 16-ஆம் தேதி பஸ்தர் பகுதியின் காங்கேர் மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், மூன்று வீரர்கள் காயமடைந்தனர். மோதல் நடைபெற்ற பகுதியிலிருந்து துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், வெடிபொருள்கள் என ஏராளமானவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
  • கடந்த ஒரு மாதத்தில் 58 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால், இந்த ஆண்டில் மட்டும் பஸ்தர் பகுதியில் 91 பேர் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் உயிரிழந்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலையொட்டி தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பது வழக்கம். நக்ஸல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அவர்களுக்கு பயந்து மக்கள் வாக்களிப்பது குறைவாகவே இருக்கும். இப்போதைய மக்களவைத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல.
  • அரசின் கடந்த ஒரு மாத நடவடிக்கைகள் நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிரான குறிப்பிடத்தக்க வெற்றி என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் நக்ஸல் தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்த வண்ணம் இருக்கிறது என்பதையும் இந்த மோதல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வசமிருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்பதிலிருந்து அவர்களுக்கு அந்நிய சக்திகளின் ஆதரவு இருக்கக்கூடும் என்பது உறுதிப்படுகிறது.
  • சத்தீஸ்கரில் பாஜக அரசு அமைந்ததைத் தொடர்ந்து இதுவரை பஸ்தர் பகுதியில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 23 பேர் மட்டுமே மோதலில் கொல்லப்பட்டனர் என்பதும், அதைவிட அதிக அளவிலான பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்திகள்.
  • நக்ஸல் தீவிரவாதம் பஸ்தர் பகுதியின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தலாக கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்கிறது. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களின் வருங்காலம் கேள்விக்குறியாகிறது என்பதுதான் மிகப் பெரிய வேதனை.
  • மத்திய-மாநில அரசுகளின் பல்முனை அணுகுமுறைகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதிலும், அந்தப் பகுதியின் மலைவாழ் மக்கள் மத்தியில்அரசின்மீது நம்பிக்கை ஏற்படுத்துவதிலும் ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து நக்ஸல் தீவிரவாதிகளும், அவர்களுக்கு உதவி வழங்கும் மலைவாழ் மக்களும் சரணடைய முற்படுகிறார்கள்.
  • பலவீனப்பட்டுவரும் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளும், ஆதிக்கமும் ஆறுதல் அளிக்கும் செய்தி. அதே நேரத்தில் ராணுவ ரீதியிலான தீவிரவாத தடுப்பு அணுகுமுறை எந்த அளவுக்கு அமைதியை நிலைநாட்ட உதவும் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் மோதல்களும், அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவதும் நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழித்து அமைதியை ஏற்படுத்தி விடுமா என்கிற கேள்வியில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
  • மாவோயிஸ்டுகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் மத்தியில், வலியுறுத்தப்படுகிறது. மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் நிபந்தனையில்லாத பேச்சுவாத்தைக்கு மாவோயிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்தது. நேருக்கு நேர் வர அவர்கள் தயாராக இல்லாத நிலையில் காணொலி மூலமான பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாக அறிவித்தது.
  • புதிதாக ஆட்சிக்கு வந்த மாநில அரசின் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையற்ற அழைப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு பாதிக்கப்படும் மலைவாழ் மக்கள் அந்த அறிவிப்பை நம்பிக்கையுடன் வரவேற்றனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லையென்பது மிகப் பெரிய பின்னடைவு.
  • தீவிரவாதத்தை துப்பாக்கி முனையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாதுதான்; அதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடவும் முடியாது!

நன்றி: தினமணி (09 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories