- உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்திருப்பது உண்மை. இன்னொருபுறம் இந்திய விவசாயிகள் வறுமையில் வாடுவதும், கடனாளிகளாகத் தொடர்வதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கின்றன. வேளாண் துறையில் காணப்படும் இந்த முரண் அகற்றப்பட வேண்டும்.
- விவசாயிகளுக்காக வேளாண் காப்பீட்டுத் திட்டம்; "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா' மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.6,000 குறு, சிறு விவசாயிகளுக்கு நேரடி மானியம்; குறிப்பிட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை; மானிய விலையில் உரங்கள்; மாநில வேளாண் அமைச்சகங்கள் மூலம் விதைகள்; இடுபொருள்கள் என்று பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது என்னவோ உண்மை. ஆனால், பெரும்பாலும் பருவ மழையை நம்பியிருக்கும் இந்திய விவசாயியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு தான் வருகிறதே தவிர, உயர்வதாகத் தெரியவில்லை.
- இடைத்தரகர்களும், வியாபாரிகளும் விவசாயிகளின் உழைப்பிலும், அவர்கள் எதிர்கொள்ளும் வறுமையிலும் கொழிக்கிறார்கள். பண்ணையார்களும் நிலச்சுவான்தார்களும் அகற்றப்பட்டிருக்கிறார்களே தவிர, விவசாயிகள் மீதான சுரண்டல் எள்ளளவும் குறைந்தபாடில்லை. கூட்டுறவுப் பண்ணை முறை வெற்றி பெறாததும், விளை நிலங்கள் தலைமுறைக்குத் தலைமுறை பாகப்பிரிவினையால் கூறுபோடப்படுவதும் விவசாயம் லாபகரமாக இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்.
- சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 2012 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளில் 8,719 விவசாயிகள் ஒளரங்காபாதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடன் தொல்லை, வறட்சி, எதிர்பாராத பருவமழை காரணமாக அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாதது, தங்களது பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க முடியாதது ஆகியவற்றால் தற்கொலை செய்து கொண்டவர்கள்தான் அதிகம். 1,929 விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் முக்கியமான விவசாயம் சார்ந்த மாநிலங்களில் எல்லாம் வேளாண் இடர் (ஃபார்ம் க்ரைசஸ்) காணப்படுகிறது; தொடர்கிறது. இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கையும் பொருளாதார சீர்திருத்தமும் விவசாயிகளின் உழைப்புக்கும், அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்துக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்திருக்கின்றன. விவசாயிகளின் தற்கொலைகள் 1995-க்குப் பிறகுதான் இந்த அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியது.
- கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கிய இடம்பெயர்தல் அதிகரித்திருப்பது குறித்து அரசியல்வாதிகள், அதிகாரிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மொத்த மக்கள்தொகையில் விவசாயத்தில் ஈடுபடுவோரின் விழுக்காடு வேகமாகக் குறைந்து வருகிறது. பிடிவாதமாக விவசாயத்தை தொடர்பவர்களில் பாதிக்குப் பாதி பேர் அடுத்த தலைமுறையில் கிராமவாசிகளாக இருக்கப் போவதில்லை.
- 1951-இல் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 23% விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றால், 1991-இல் வெறும் 17%-ஆக ஏற்கெனவே குறைந்துவிட்டது. சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விவசாயிகள் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்திற்கும் உணவு உற்பத்தி செய்பவர்கள் என்பதையும், மேலை நாடுகளைப் போல இயந்திரமயமாதல் இந்தியாவில் எளிதல்ல என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
- குறு, சிறு விவசாயிகள் அதிகம் காணப்படும் மாநிலங்களில்தான் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம். ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் பயிரிடும் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 2003-இல் 20.4%-ஆக இருந்தது, இப்போது 24.9%-ஆக 4.5% அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் குறு, நடுத்தர விவசாயிகளின் விகிதம் 14.7%-ஆகக் குறைந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் குடும்ப பாகப்பிரிவினை.
- இந்திய விவசாயிகளில் பாதிக்கும் அதிகமானோர் கடனாளிகள். ஆந்திரம், தெலங்கானாவில் 90% விவசாயிகள் சராசரியாக ரூ. 2.45 லட்சம் கடனைச் சுமக்கிறார்கள். ராஜஸ்தானில் 60% விவசாயிகளும், ஜார்க்கண்டில் 100% விவசாயிகளும் கடனாளிகள்.
- பஞ்சாபிலும், ஹரியாணாவிலும் குறு, சிறு விவசாயிகள் ஒவ்வொருவரும் சுமார் இரண்டு லட்சம் கடன்பட்டவர்கள்.
- தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி, விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.3,798. அதில் பயிரிடுவதற்காகவும், விவசாயத்திற்காகவும் ஏற்கெனவே ரூ.2,959 செலவாகியிருக்கும். அதனால், அந்தக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.839 மட்டுமே. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியின் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா' மூலம் குறு, சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும் ரூ.6,000 அவர்களைக் கவர்ந்திருக்கிறது.
- மானியங்களும், உதவித் தொகைகளும், குறைந்தபட்ச ஆதரவு விலைகளும் குறு, சிறு விவசாயிகளின் நிலைமையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. வருமான வரி விலக்கு பெறும் பெருவிவசாயிகள் மட்டுமே இந்தியாவில் முன்பு இருந்த ஜமீன்தார்கள், பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் போல பெரும் லாபம் ஈட்டுகின்றனர்.
- கூட்டுறவுப் பண்ணைகள் ஏற்படாத வரை குறு, சிறு விவசாயிகளின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுவிடாது. தேசிய அளவில் இதுகுறித்த பொதுவிவாதம் மேற்கொள்ளப்படுவது உடனடி அவசியம்.
நன்றி: தினமணி (09 – 08 – 2023)