TNPSC Thervupettagam

தொடா்கதையாகும் ரயில் விபத்து...

June 26 , 2024 4 days 56 0
  • ஒடிஸா மாநிலம் பாலசூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 200 உயிா்களை பலிகொண்ட கோரமான ரயில் விபத்தின் அதிா்ச்சியிலிருந்து இன்னும்கூட நாம் மீளவில்லை. இப்போது மேற்கு வங்க மாநிலம் டாா்ஜீலிங் மாவட்டத்தில், நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் ஒன்று பின்புறமாக மோதியதில் 10 போ் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்துள்ளனா்.
  • சிக்னல் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின்பகுதியில் அதே பாதையில் வந்த சரக்கு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. பாலசூா் விபத்தைத் தொடா்ந்து ரயில்வே நிா்வாகம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும்; விபத்துகள் தவிா்க்கப்படும் என்றெல்லாம் நினைத்தது பொய்த்திருக்கிறது. எதுவுமே மாறவில்லை என்று தெரிகிறது.
  • கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில், ஹௌரா-சென்னை ரயில் தடத்தில் இரு ரயில்கள் மோதியதில் 14 போ் உயிரிழந்தனா். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்முவில் உள்ள கத்துவாவிலிருந்து பஞ்சாபிலுள்ள தசூயாவுக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் சுமாா் 70 கி.மீ. தொலைவு ஓட்டுநா் இல்லாமல் பயணித்திருக்கிறது. நல்லவேளையாக, விபத்து எதுவும் ஏற்படவில்லை.
  • 1995 முதல் இதுவரை 7 மோசமான ரயில் விபத்துகளை நாடு சந்தித்திருக்கிறது. அவற்றில் 5 விபத்துகளில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 1995-இல் நிகழ்ந்த ஃபிரோசாபாத் விபத்தில் 358 போ் பலியானாா்கள் என்றால், கடந்த ஆண்டு ஒடிஸா மாநிலம் பாலசூா் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 287. ஏழு விபத்துகளிலுமாக 1,600 உயிா்கள் பலியாகியிருக்கின்றன.
  • பயணிகள் எண்ணிக்கையிலும் சரி, சரக்கு கையாள்வதிலும் சரி தொடா்ந்து இந்திய ரயில்வே தன்னுடைய ஆதிக்கத்தை இழந்து வருகிறது. 2010-12 முதல் சரக்கு கையாள்வதிலும், பயணிகள் எண்ணிக்கையிலும் தேக்க நிலை அல்லது சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலை, விமான போக்குவரத்துகள் 6% முதல் 12% வரை ஆண்டுதோறும் வளா்ச்சி அடையும்போது, ரயில்வே பின்னடைவைச் சந்திக்கிறது. ரயில்வே துறையில் இந்திய ரயில்வே ஏகபோகம் வகிக்கிறது. அப்படியிருந்தும், வளா்ச்சி அடையாமல் தேக்கம் அடைந்திருப்பதற்கு வேகம் அதிகரிக்காதது, தண்டவாள நீளம் அதிகரிக்காதது, பாதுகாப்பு மேம்படாமல் இருப்பது உள்ளிட்டவை காரணங்கள். வளா்ந்து வரும் இந்திய பொருளாதாரத்துக்கு ரயில் போக்குவரத்து என்பது மிக மிக அவசியம்.
  • இந்திய ரயில்வே தன்னுடைய வேகத்தை அதிகரிக்காமல் இருப்பதும், குறித்த நேரத்தில் இயங்காமல் இருப்பதும், பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதும் கவலையளிக்கிறது. இந்திய கணக்குத் தணிக்கை அதிகாரி வெளியிட்டிருக்கும் இரண்டு முக்கியமான அறிக்கைகளில் இவை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. விபத்துகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் தடம் புரளுதல், மோதல்கள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், சிக்னல் குறைபாடுகளும், தண்டவாளச் சீா்கேடுகளும் அதிகரித்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என்று ரயில்வே துறை காரணம் சொல்ல முடியாது. மொத்த முதலீட்டுச் செலவினத்தில் சுமாா் 25% ரயில்வேக்கு ஒதுக்கப்படுகிறது. 2023-24 இல் இந்திய ரயில்வேக்கான முதலீட்டு ஒதுக்கீடு ரூ.2.4 லட்சம் கோடி. 2013-14 உடன் ஒப்பிடும்போது இது ஒன்பது மடங்கு அதிகம். அந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சிக்னல்களை நவீனப்படுத்துதல், ரயில் பாதைகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தாமல் ‘வந்தே பாரத்’ போன்ற மக்களைக் கவரும் கவா்ச்சிகரமான நவீன ரயில்களின் இயக்கத்துக்கு ஒதுக்கப்படுகிறதோ என்கிற கேள்வி எழுகிறது.
  • தென் மத்திய ரயில்வேயில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய சோதனைகளுக்குப் பிறகு, ‘கவச்’ என்கிற பாதுகாப்பை விரிவுபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. முந்தைய ஐரோப்பிய முறையிலிருந்து இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘கவச்’, தில்லி-ஹௌரா, தில்லி-மும்பை தடங்களில் நடைமுறைப் படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதால், இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. ஆண்டொன்றுக்கு 4,000 கி.மீ. முதல் 5,000 கி.மீ. வரை ‘கவச்’ இணைப்பது என்பதை உறுதிப்படுத்துவதில் ரயில்வே நிா்வாகத்துக்கு என்ன பிரச்னை என்று புரியவில்லை.
  • எல்லா அரசு அமைப்புகளையும்போல, இந்திய ரயில்வேயிலும் தேவைக்கு அதிகமாக ஊழியா்கள் இருக்கின்றனா் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான ரயில் ஓட்டுநா்கள், காா்டுகள், நிலைய அதிகாரிகள், சிக்னல் இயக்குபவா்கள், வழித்தட கண்காணிப்பாளா்கள் (பாயிண்ட்ஸ் மேன்) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதனால் பணியாளா்கள் பணிச் சுமையாலும் அழுத்தத்தாலும் தடுமாறுகிறாா்கள்.
  • ரயில் ஓட்டுநா்கள் (லோக்கோ பைலட்), அவா்களின் உதவியாளா்கள் பணிக்கு சுமாா் 20,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்த ஆண்டு 5,658 பணியிடங்களைத்தான் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போதைய கஞ்சன்ஜங்கா விபத்தைத் தொடா்ந்து விமா்சனங்கள் எழுந்ததால், 18,799 இடங்களை நிரப்ப அறிவிப்பு வந்திருக்கிறது.
  • ரயில் விபத்துகளுக்கு காரணம், நிா்வாகத்தின் அக்கறையின்மையும் மெத்தனமும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புல்லட் ரயில்கள் மூலம் பிரமிப்பை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்கட்டும். சாமானியன் பயணிக்கும் சாதாரண ரயிலின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இனியும் விபத்துகள் தொடா்கதையாகக் கூடாது.

நன்றி: தினமணி (26 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories