TNPSC Thervupettagam

தொட்டனைத் தூறுவதாகட்டும் ‘மணற்கேணி’ கல்வி செயலி

February 2 , 2025 3 days 35 0

தொட்டனைத் தூறுவதாகட்டும் ‘மணற்கேணி’ கல்வி செயலி

  • குழந்தைகளைப் பராமரிக்க அலைபேசியைப் பயன்படுத்தும் பெற்றோரின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் அளவுக்கதிகமாகி விட்டது. தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் 2021-ல், ‘இணைய வசதி கொண்ட அலைபேசி மற்றும் இதர சாதனங்களின் பயன்பாடு குழந்தைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள்’ என்கிற தலைப்பில் ஆய்வு முடிவு வெளியிட்டது.
  • இணையப் பயன்பாடு, விளையாட்டு, இசை கேட்பது, நண்பர்களுடனான அரட்டை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியச் சிறார்களில் 78.90 சதவீதத்தினர் அன்றாடம் குறைந்தது 2 மணிநேரம்வரை அலைபேசியினை பயன்படுத்துவது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

செயல்வழி செய்த புதுமை:

  • இந்தச் சூழலில்தான் தமிழக அரசின் கல்வித்துறை தனது மணற்கேணி செயலியை பயன்படுத்த வேண்டி அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை நமது கவனத்தை ஈர்க்கிறது. “இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யாதீர்கள்” என்பார் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி. அறிவியலும் தொழில்நுட்பமும் நமது வாழ்க்கையை வல்லமையாக்க வருபவை.
  • அதேநேரம் கல்வி போன்ற சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தளங்களில் இதன் பயன்பாடு குறித்து அவ்வப்போது மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. தமிழக அரசின் கல்வித்துறை அண்மைக்காலத்தில் செய்துவரும் சீர்திருத்தங்களில் இந்தியாவுக்கே முன்மாதிரியான அம்சங்கள் பல உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
  • கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வேகத்தில் நடைபெறுவது. அதுதான் சரியும்கூட. தமிழகத்தில் 2005-ல் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகமானபோது குழந்தைகளின் கற்றல் வேகத்துக்கு ஏற்ப கற்றலும், கற்பித்தலும் சாத்தியமானது.
  • அதுபோல மதிப்பீட்டு வழிமுறைகளிலும் செயல்வழிக் கற்றல் புதுமை செய்தது. அந்தந்தக் குழந்தை செய்து பார்த்த செயல்பாடுகளை அடிப்படையாக வைத்தே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் அழகாகச் சொன்னால், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கேள்வித்தாள். ஒவ்வொரு குழந்தையும் அடுத்தக் குழந்தையோடு போட்டிப் போடுவதைவிட தன்னோடு போட்டிப்போடுவதே சிறந்தது என மகிழ்ந்தோம்.

ஆசிரியர்களின் சுதந்திரம்:

  • இன்றைய இணைய உலகில் அனைத்தும் மறந்துபோவதுபோல் இதுபோன்ற குழந்தை மைய சீர்திருத்தங்களையும் விரைவிலேயே மறந்துவிட்டோம். காலனிய ஆதிக்க இந்தியாவில் கல்வியை அரசே கொடுக்க முன்வந்த காலகட்டத்தை முன்னாள் தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) இயக்குநர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் தனது பல ஆக்கங்களில் பகிர்ந்திருப்பார். அதாவது, மக்கள் நடத்திக் கொண்டிருந்த பள்ளிகளை அரசே ஏற்று நடத்த முன்வந்த பின்னர் மக்களுக்கும் அந்தப் பள்ளிகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்குமான நெருக்கமும் மறையத் தொடங்கியது.
  • மேலும் பாடம் கற்பித்தல் மற்றும் பாடநூல் உருவாக்கத்திலும் ஆசிரியர்களுக்கிருந்த சுதந்திரம் பறிபோனது. அரசு அச்சடித்துக் கொடுக்கும் பாடநூல் களை அப்படியே வரி பிசகாமல் ஒப்புவிப்போராக ஆசிரியர்கள் ஆகிப் போனார்கள். மேலும் மேற்பார்வை அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வதற்கு இது எளிதாக அமைந்தது என்பார். அன்றைக்குப் பறிபோகத் தொடங்கிய சுதந்திரம் இன்றுவரை மீளவில்லை என்றும் அவர் குறிப்பிடுவார்.
  • கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் போன்றவை ஆசிரியர்- மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலுக்குத் துணையாக வருபவை மட்டுமே. அவை இறுதியானவை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் சுதந்திரமாகச் செயல்பட்டு கற்றலை இனிமையாக்கி பள்ளி நேரத்தை மகிழ்வானதாக மாற்றிட முடியும். இந்த நம்பிக்கை ஆசிரியர்களுக்கு வரவேண்டும். குழந்தைகளின் கற்றலுக்கு உதவிகரமாக இருக்க வேண்டிய பெற்றோர்களும் தங்களது பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும்.
  • சரி, மணற்கேணி போன்ற செயலிகள் வேண்டாமா? நிச்சயம் வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களில் உள்ள பாடங்களுக்கான காணொலி காட்சிகள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் வீடியோக்களாக மணற்கேணி செயலியில் வழங்கப்பட்டுள்ளன. அரசே கட்டணமின்றி வழங்கும் இத்தகு செயலி நல்லதொரு முன்னெடுப்பு. தனியார் செயலிகளை அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோரால் விலைகொடுத்து வாங்க முடியாது.
  • அதேநேரம் மணற்கேணி போன்ற செயலிகளின் உள்ளீடுகளை ஆசிரியர்களே தினம் தினம் புதுமையாக்கும் வகையில் ஆசிரியர்களின் தனித்திறன்களை உள்ளீடு செய்யும் வசதியோடு பயன்பாட்டினை மாற்றி அமைக்க வேண்டும். ஆணைகள் மூலம் நடைமுறைப்படுத்த முயலாது அரவணைத்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories