TNPSC Thervupettagam

தொண்டர்தம் பெருமை: சொல்லவும் பெரிதே!

July 11 , 2024 184 days 273 0
  • மதிப்புக்குரிய ஒருவரை அடிகள் என்று அழைக்கும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தின் சொற்பரப்பில் ‘அடி’ இருக்கிறதே ஒழிய, மேற்சொன்ன பொருளில் ‘அடிகள்’ இல்லை. திருவடி தொழும் மரபு வந்தபோதுதான் அடிகள் என்னும் சொல்லும் தமிழில் தடம் பதிக்கிறது.
  • திருவடி தொழும் மரபு சமண, பௌத்தத் தாக்கத்தால் வந்தது. சிந்திக்கும் தொழிலை நடத்தும் தலையே மதிக்கத்தக்க முதன்மை உறுப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், உடல் மொத்தத்தையும் தாங்கிச் சுமந்து உழைப்பையும் பிழைப்பையும் நடத்தும் கால்களே முதன்மை உறுப்புகள் என்று தலைகீழாக்கம் செய்து, கால்களை மாண்அடியாகவும், திருவடியாகவும், தலையால் தொழப்படும் தன்மை உடையவையாகவும் ஆக்கிய பெருமை சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் உரியது.
  • மேலிருந்து அதிகாரம் செலுத்துகிற ‘தலைவன்’ என்பதற்கு மாற்றாகக் கீழிருந்து தொண்டு செய்கிற ‘அடிகள்’. அறிவர்களை, அருளாளர்களை ‘அடிகள்’ என்று அழைக்கும் இந்தச் சமண, பௌத்த வழக்கத்துக்குச் சான்றாக இளங்கோ அடிகள், கவுந்தி அடிகள், அறவண அடிகள் போன்ற பெயர்களைக் கருதலாம்.
  • ‘அடிகள்’ மக்கள் ஏற்பைப் பெற்றுவிட்ட நிலையில், திருவடி தொழும் மரபு பரவலாகிச் சைவத்துக்குள்ளும் நுழைகிறது. சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிவந்த திருநாவுக்கரசராகிய அப்பர் அடிகள் இறைவனையே அடிகள் ஆக்கிவிடுகிறார். சைவ அடியார்களும் அந்தப் பெயரைப் பெறுகிறார்கள்: திருவாதவூர் அடிகள், இளம்பெருமான் அடிகள், பட்டினத்து அடிகள், நமிநந்தி அடிகள்...

எளிமையான விளிப்பெயர்:

  • வள்ளலார் இராமலிங்கருக்கும், மறைமலையாருக்கும், மகாத்மா காந்திக்கும் வழங்கிய பிறகு கொஞ்ச காலம் காணாமல் போய்விட்ட அடிகள் என்னும் எளிமை நிறைந்த விளிப்பெயரைத் திரும்பவும் மீட்டெடுத்துக் கொண்டுவந்து புகழுக்கு உரியதாக்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
  • சமயத் திருமடங்களின் தலைவர்கள் மிகவும் பக்திபூர்வமாய்க் குருமகாசந்நிதானம், சுவாமிகள், தேசிகர் என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், தொண்டை முதன்மைப்படுத்துகிற வகையில் அடிகள் என்று அழைக்கப்படும் மரபைப் புதுப்பித்தார் அடிகளார்.
  • குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகாசந்நிதானம், திருவருள்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டிய அவருடைய மிக நீண்ட துறவுப் பெயர் ஆவணங்களுக்கு மட்டுமான பெயராகச் சுருங்கிவிட, தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற குறும்பெயரே நீண்டு பரவி நிலைத்தது. மக்கள்தம் நாவில் வழங்கோசை வையம் பெறும்.
  • மதுரை கருமுத்து தியாகராசர் நடத்திவந்த ‘தமிழ்நாடு’ இதழ்தான் குன்றக்குடி ஆதீனகர்த்தர் திருவளர்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ‘குன்றக்குடி அடிகளார்’ என்று தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியதாக அடிகளாரே எழுதியிருந்தாலும், அடிகளாரின் ஏற்பில்லாமல் அது நிகழ்ந்திருக்கவோ தொடர்ந்திருக்கவோ வாய்ப்பில்லை.

தமிழ்ப் பால்:

  • அரங்கநாதனாக இருந்து, கந்தசாமிப் பரதேசி ஆகி, கந்தசாமித் தம்பிரான் ஆகிப் பின் குன்றக்குடி அடிகளாராக ஆன அவரது ஆளுமை உருவாக்கத்தை அவர் எழுதிய ‘மண்ணும் மனிதர்களும்’ என்னும் நூலின்வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சிறுவனாக இருந்தபோது பல்வேறு வீடுகளில் பால் ஊற்றும் பணி செய்திருக்கிறார்.
  • அப்படி அவர் பால் ஊற்றிய வீடுகளில் ஒன்று சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையுடையது. இவர் பால் ஊற்ற, அவர் தமிழ் ஊற்றியிருக்கிறார். அங்கு வருகிற சிறுவர்கள் மனப்பாடமாகத் திருக்குறள் சொன்னால், குறள் ஒன்றுக்குக் காலணா. நாளும் குறள் சொல்லிக் காலணாவே பெற்றுவந்த அடிகளார் சாரணர் படைக் குருளையராகச் (Cub Scout) சேர்ந்தபோது, சீருடை வாங்கக் காசில்லாமல் சேதுப்பிள்ளையிடம் குறள் சொல்லி வாங்கியிருக்கிறார்.
  • கடியாபட்டி என்னும் ஊரில் இருந்தபோது வசதி படைத்தவர்கள் நடத்திவந்த ‘சோதி கிளப்’ என்னும் மனமகிழ் மன்றத்துக்குச் செய்தித்தாள் படிக்கச் செல்வார் அரங்கநாதன். திடீரென்று ஒரு நாள் உறுப்பினர்கள் மட்டுமே நுழையலாம் என்று மற்றவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிடுகிறது.
  • உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளவும் மறுக்கப்படுகிறது. சூடு பிறக்க, கூடவே செயலும் பிறக்க, இருபது நண்பர்களைத் திரட்டி ஆளுக்கொரு செய்தித்தாளுக்குப் பணம் கட்டி ‘வினோபா பாவே வாசகசாலை’யைத் தொடங்குகிறார் அரங்கநாதன்.

மீட்கப்பட்ட ஊருணி:

  • ஊரே நீர் உண்ணும் பிள்ளையார் கோயில் ஊருணியில் திடீரென்று நாற்றம். ஊருணியைக் கைவிட்டு வீட்டுக் கேணிகளில் நீரெடுக்கத் தொடங்குகிறார்கள் ஊரார். கேணி இல்லா வீட்டினர் கேணி உள்ள வீட்டினரைச் சார்ந்திருக்கும் நிலை; அதில் நேர்ந்த சாதி/வர்க்க அடுக்குமுறைச் சிக்கல்.
  • நோகும் அடிகளார் தன் வயதினரைத் திரட்டிக்கொண்டு ஊருணியைத் தூய்மைப்படுத்தப் புறப்பட்டபோதுதான் தெரிகிறது: நாற்றம் ஊருணியிலிருந்து வரவில்லை. வழிபாடே இல்லாமல் கைவிடப்பட்ட பிள்ளையார் கோயிலின் கருவறையில் நாய் ஒன்று செத்து அழுகிக் கிடப்பதால் வருகிறது.
  • அதை எடுத்துப் பாலூற்றிப் புதைத்து, கோயிலைத் தூய்மை செய்து, தன் பொறுப்பிலேயே விளக்கேற்றி வழிபாடும் செய்கிறார் அடிகளார். ஊருணியோடு சேர்ந்து கோயிலும் மீண்டும் உயிர்பெற்றது. விளைவாக, ஊருக்குப் பொதுவாக ஊருணி கிடைத்தது.

அடிகளார் உருவான வரலாறு:

  • வீட்டுக்கு உழைக்காமல் ஊருக்கு உழைத்து வெட்டிச் சோறு தின்பதாகத் தந்தையார் கடிந்துகொள்ள, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டுப் புறப்பட்ட அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் ஏழு ரூபாய்ச் சம்பளத்துக்கும் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்கும் வேலையில் சேர்கிறார்.
  • பொறுப்போடு பணிசெய்து தருமபுர ஆதீனம் கயிலைக் குருமணியின் அன்புக்குப் பாத்திரமாகிறார். ஒருநாள் தனக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த அரங்கநாதனைப் பார்த்து, “பழுக்கலாமா?” என்று அருமையாகக் கேட்கிறார் ஆதீனம். அரங்கநாதனும் உடன்பட்டுத் துறவு ஏற்றுப் பழுக்கிறார். கந்தசாமித் தம்பிரான் ஆகிறார்.
  • தருமபுர ஆதீனத்தில் சிறக்கப் பணிசெய்யும் கந்தசாமித் தம்பிரானைக் குன்றக்குடி ஆதீனத்தின் சின்னபட்டமாகப் பொறுப்பேற்க அழைக்கிறார்கள். போவதற்குக் கந்தசாமித் தம்பிரானுக்கோ அனுப்புவதற்குத் தருமபுர ஆதீனத்துக்கோ மனமில்லை.
  • தேவார ஏட்டில் கயிறு சார்த்திப் பார்க்கிறார்கள்: “பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே!”, “பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே!” என்று முடியும் பாடல்கள் வருகின்றன. கந்தசாமித் தம்பிரானைக் குன்றக்குடிக்குத் தர ஒப்புகிறார் தருமபுர ஆதீனம். கந்தசாமித் தம்பிரான் குன்றக்குடி அடிகள் ஆகிறார்.

தொண்டு நெறி:

  • அடிகளாரின் பேச்சாற்றல் புகழ்மிக்கது. ‘தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாற்றில், குற்றம் செய்தவர் சிவனா? நக்கீரனா?’ என்ற தலைப்பில் தருமபுர ஆதீனம் நடத்திய பட்டிமன்றத்தில், சிவனே குற்றவாளி என்று கந்தசாமித் தம்பிரானாக இருந்தபோது பேசியவர், ‘புலமை புலமையோடு மோத வேண்டுமே தவிர, நெற்றிக்கண்ணுக்குத் தமிழ்ச் சங்கத்தில் என்ன வேலை? வன்முறையில் தமது கருத்தை ஏற்கச்செய்தல் நல்ல மரபாகாது’ என்று உரக்கப் பேசி மரபாளர்களின் கண்டனங்களைப் பெற்றவர்.
  • ‘அநியாயம் தலைதூக்கும்போதெல்லாம் கடவுள் அவதாரம் நிகழ்கிறது என்கிறார்கள்; அப்படியானால் இப்போது ஏன் நிகழ்வதில்லை?’ என்று அடிகளாராக ஆன பின்பு கேள்வி எழுப்பியவர். பட்டிமன்றங்களை வெட்டிமன்றங்களாக்கும் பேச்சாளர்களை மேடையிலேயே இடித்துரைத்தவர். பட்டிமன்றங்கள் பாதை மாறும்போது வழிநடத்த வேண்டியது நடுவர்களின் கடமை என்று அறிவுறுத்தியவர்.
  • கோயில்களில் தமிழ் அருச்சனையை ஆதரித்தவர். ‘தமிழ் அருச்சனை வடமொழி வெறுப்பு இயக்கமல்ல. வழிபாடு இதயம் கலந்ததாக அமைய வேண்டும். அருச்சனையில் வழிபடுவோரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கம். திருக்கோயிலில் மணிகள் அசைந்தால் போதாது; மனித இதயங்களும் அசைய வேண்டும்’ என்றவர்.
  • வினோபா பாவே நடத்திய நிலக்கொடை (பூதானம்) இயக்கத்தில் பங்குபெற்றவர். இன்னும் பெரிய பரப்பில் தொண்டாற்றலாம்; என்னோடு வந்துவிடுங்கள் என்று வினோபா அழைத்தபோது அதற்கும் தயாரானவர். துறவு நெறியில் பழுப்பதற்காகக் குடும்பத்தைத் துறந்து மடத்துக்கு வந்து, பின் தொண்டு நெறியில் பழுப்பதற்காக மடத்தையும் துறந்து செல்லத் துணிந்தவர். சூழல் பழுக்கவில்லை.
  • பெரியாருக்கும் அடிகளாருக்கும் இருந்த உறவு புகழ்பெற்றது. மறந்தும் பிறர் அடி தொழாத தன்மதிப்பு மரபினர் பெரியார். மறவாமல் திருவடி தொழும் அருள்மதிப்பு மரபினர் அடிகளார். ஆனால் இருவருமே மக்கள் தொண்டர்கள்; ஆகவே நண்பர்கள். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
  • ஜூலை 11: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டுத் தொடக்கம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories