TNPSC Thervupettagam

தொன்மம் தொட்ட கதை : காதலின் கண்கள்

February 25 , 2024 183 days 219 0
  • எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் வரலாற்று நிகழ்வுகளை வைத்துத் தொடக்கத்தில் அதிகளவில் சிறுகதைகளை எழுதியுள்ளார். தொன்மம், வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட இவரது கதைகள்‘காணாமலே காதல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.அந்த வகையில் ‘விபரீதக் காதல்’ என்ற கதை முக்கியமானது.
  • மௌரியப் பேரரசர் அசோகர் பொது ஆண்டுக்கு முன்பு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; மகத நாட்டை ஆண்டவர். கலிங்கப் போருக்குப் பிறகு பௌத்த சமயத்தைத் தழுவினார் அசோகர். அசோகரின் மூன்றாம் மனைவி பத்மாவதி. இவர்களுக்குப் பிறந்தவர் குணாளன்.
  • அசோகரின் நான்காவது மனைவியான அசந்திமித்ராவின் பணிப் பெண்ணாக வந்தவர் திஷ்யரக்ஷை. இவர் அசோகரின் ஐந்தாவது மனைவியாகிறார். அசோகரின் இறுதிக் காலத்தில் அவரைப் பார்த்துக்கொண்டவர் திஷ்யரக்ஷை; அதனால் அசோகரது அன்புக்குரியவராகிறார்; ஆட்சியில் அதிகாரம் மிக்க இடத்துக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார். அசோகருக்கும் இவருக்கும் வயதில் பெரிய வித்தியாசமுண்டு.
  • இந்தச் சூழலில்தான் திஷ்யரக்ஷையின் மனம் குணாளனை விரும்புகிறது. குணாளனின் கண்கள் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. ஆனால், இவர் குணாளனுக்கு சித்தி முறை; தவிர குணாளனுக்குத் திருமணமும் அப்போது முடிந்திருந்தது. அவர் மனைவி பெயர் காஞ்சனமாலை. குணாளன், திஷ்யரக்ஷையின் விருப்பத்தை நிராகரிக்கிறார். தன் ஆசையைப் பூர்த்தி செய்யாத குணாளனின் கண்களைப் பிடுங்கி எறிகிறார் திஷ்யரக்ஷை. அசோகர் வரலாற்றுடன் இந்தக் கதையும் சொல்லப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வைத்தான் கு.ப.ரா. புனைவாக எழுதியிருக்கிறார்.
  • கு.ப.ரா.வின் ‘விபரீதக் காதல்’ என்ற சிறுகதை 1940இல் எழுதப்பட்டிருக்கிறது. கு.ப.ரா.வுக்கு முன்பே வங்காள மொழியில் இதை அடிப்படையாகக் கொண்டு ஹரபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘காஞ்சன்மாலா’ நாவலை எழுதியிருக்கிறார். அசோகரின் வரலாற்றுடன் தொடர்புடைய இத்தொன்மக்கதை காலந்தோறும் படைப்பாளர்களால் வெவ்வேறு வகைகளில் பார்க்கப்பட்டிருக்கிறது.
  • கு.ப.ரா.வும் இக்கதையை நவீனப்படுத்தி எழுதியிருக்கிறார். கு.ப.ரா.வின் புனைவின்படி, திஷ்யரக்ஷை அசோகரின் அன்பைப் பெறுகிறார். அதன் பயனாக ஒரு வருடத்திற்கு அரசாளும் உரிமையைத் தனதாக்கிக் கொள்கிறார். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியாவது குணாளனை அடைந்தே தீரவேண்டும் என்பதுதான் அவரது ஒரே விருப்பம். அதற்காகத்தான் அரசையே தற்காலிகமாகக் கைப்பற்றுகிறார்.
  • திஷ்யரக்ஷையை முன்னிறுத்தியே கு.ப.ரா. இக்கதையை எழுதியிருக்கிறார். தவிர, ஈடிபஸ் சிக்கலை (Oedipus Complex) அடிப்படையாகக் கொண்டே திஷ்யரக்ஷையை அணுக வேண்டும். தந்தையைக் கொன்று தாயை மணக்கிறார் ஈடிபஸ்; இறுதியில் தவற்றை உணர்ந்து தன் கண்களைத் தானே குருடாக்கிக்கொள்கிறார்.
  • இப்புனைவினூடாக திஷ்யரக்ஷையின் புதைநிலை மனதைக் கு.ப.ரா. திறந்து பார்க்க முயன்றிருக்கிறார். திஷ்யரக்ஷையின் அடிமனதில் ஆழமாகப் பதிந்துள்ள ஆண் உருவமே குணாளன். அவன் திஷ்யரக்ஷையின் அப்பாவின் தோற்றத்தைப் பிரதிபலித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்குள் அந்த உருவம் ஒரு கதாநாயகத் தன்மையுடன் படிந்துள்ளது.
  • அரண்மனையில் குணாளனைப் பார்த்தவுடன் நனவிலி மனதிலிருந்த தொல்படிமம் மேல்நிலை மனதிற்கு நகர்கிறது. ‘தன்னுடைய கணவன் அசோகனுடைய மகன் குணாளன் என்ற நினைப்பே அவளுக்கு உதிக்கவில்லை’ என்று கு.ப.ரா. எழுதியிருக்கிறார். நனவிலி மனதின் இயற்கையான உணர்வை மேல் மனதைக் கொண்டு கட்டுப்படுத்தாதபோது திஷ்யரக்ஷையின் இந்த முடிவைத்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. உளவியல் அதனைத்தான் சொல்கிறது.
  • பாலியல் விருப்பங்கள் என்பவை நனவிலி மனதோடு தொடர்புடையவை. சமூகம், ஒழுக்கம், மரபு, பண்பாடு போன்ற காரணங்களால் மேல்நிலை மனம் நனவிலி மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து அழுத்தப்படும் ஆசைகள் ஒரு கட்டத்தில் மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். திஷ்யரக்ஷைக்குக் குணாளனின் உடல் தோற்றத்தைவிட ஒளியூட்டப்பட்ட கண்கள்மீதுதான் மோகம். அந்தக் கண்களின் வழியாகத்தான் குணாளனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் இவர் காண்கிறார்.
  • அவரை அடைய அவரது மனம் வெவ்வேறு வழிகளில் முயல்கிறது. தானொரு அரசி என்பதையும் கடந்து கெஞ்சுகிறார். காதலுக்காகப் பௌத்த தர்மத்தைத் தழுவுகிறார். இத்தகைய சாத்வீக வழிகளில் எல்லாம் அவர் தோல்வியையே அடைகிறார். இறுதியில், குணாளனை அடைவதற்காகத்தான் அவர் அசோகரின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகிறார். திஷ்யரக்ஷைக்குக் குணாளனிடம் இருந்தது நசுக்கப்பட்ட விருப்பங்களின் தொகுப்பு. தன்னிலை அழியும்வரை இந்த விருப்பங்கள் வெவ்வேறு வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்.
  • குணாளனின் கண்கள் பிடுங்கப்பட்டு திஷ்யரக்ஷையிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவர் அந்தக் கண்களின் வழியாகக் குணாளனை அடைய முடியும்; அந்தக் கண்களின் ஒளி தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார். ஆனால், யதார்த்தத்தில் குணாளனின் கண்கள் மாமிசத் துண்டங்களாக திஷ்யரக்ஷைக்குத் தெரிகின்றன. கு.ப.ரா. கதையின் முடிவுமீது இதன் வழி மறுவாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories