TNPSC Thervupettagam

தொற்றா நோய்கள்: தேவை உடனடிக் கவனம்

February 21 , 2025 10 hrs 0 min 12 0
  • இந்தியாவில் வாழ்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் வாழ்க்கை முறை சார்ந்த - தொற்றா நோயால் அவதிப்பட்டு வருவதாகச் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தொற்றும் நோய்களைவிட இந்தத் தொற்றா நோய்கள் அதிகரித்துவருவதன் தீவிரத்தை அரசும் சமூகமும் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
  • நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்ட ரெட்கிளிப் ஆய்வகம் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 28 லட்சம் பேர் குறித்த தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மக்கள்தொகையில் பெரும் பகுதியைச் சர்க்கரை நோய், தைராய்டு கோளாறுகள், கொழுப்புச் சமநிலை இன்மை, சிறுநீரகக் கோளாறு, கொழுப்புக் கல்லீரல் நோய், மூட்டுவலி, இதயநோய், புற்றுநோய் ஆகிய நாள்பட்ட நோய் நிலைகள் பாதித்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
  • சில பத்தாண்டுகளுக்கு முன் தொற்றாநோய்கள் முதியவர்களைப் பாதித்தன. தற்போது இருபாலினத்தவரையும், அனைத்து வயதினரையும் இந்த நோய்கள் பாதிக்கத் தொடங்கிவிட்டன. தொற்றா நோய்கள் 9 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளன.
  • தடுக்கக்கூடிய, தீர்வு காணக்கூடிய இந்த நோய்கள் மூலம் ஏற்படும் இறப்பு 62 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படுபவை. அதிவேக நகரமயமாக்கம், உடல் உழைப்பு இல்லாத - உட்கார்ந்து பார்க்கும் வேலை, குறைந்த உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம், தீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட துரித உணவு வகைகள் போன்றவையே இதற்கு அடிப்படைக் காரணம்.
  • இந்த நோய்கள் தங்களுக்கு இருப்பது குறித்துப் பலரும் அறியாமல், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் ஆபத்தான, நாள்பட்ட நோயாக மாறுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள், உடலியக்க அறிகுறிகளில் கவனம் செலுத்தினால் இதைத் தவிர்க்கலாம்.
  • உலகிலேயே, உடல் பருமனான குழந்தைகள் அதிகமாக உள்ள இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. 2017 கணக்குப்படி 1.44 கோடி குழந்தைகள் இப்படி உள்ளனர். குழந்தைகள் சிறு வயதிலேயே தொற்றா நோய்களுக்கு ஆளாவதற்கு உடல் பருமன் முக்கியக் காரணம். இந்நிலையில், பட்ஜெட்டுக்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2024-25இல் தீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
  • சர்க்கரை, உப்பு, செறிவடைந்த கொழுப்பு ஆகியவற்றை ஒருவர் உட்கொள்வதற்கான உச்சவரம்பை மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக நிர்ணயிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த உணவுப் பொருள்கள் திசைதிருப்பக்கூடிய ஊட்டச்சத்து சார்ந்த நம்பிக்கைகளைப் பரப்புகின்றன.
  • இவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டியது அவசரம் என ஆய்வறிக்கை கூறியுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் குறித்த விளம்பரங்களை முறைப்படுத்தி, ஆரோக்கியமற்ற உணவு வகைகளைச் சந்தைப்படுத்துவதற்குத் தீவிரக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
  • இந்த உணவுப் பொருள்களுக்குச் சுகாதார வரி என்னும் வகையில் கூடுதல் வரியை விதிப்பதன் மூலம் இந்த உணவு வகைகள் பெருமளவு உட்கொள்ளப்படுவதைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அது கூறியுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் அட்டைகளில் அந்த உணவுப் பொருள்கள் ஏற்படுத்த சாத்தியமுள்ள உடல்நலப் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
  • 18 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கு இந்த உணவுப் பொருள்கள் சென்றடைவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். மக்களும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தீவிர உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories