TNPSC Thervupettagam

தொழிலுக்கு வந்தனை செய்வோம்

February 12 , 2021 1381 days 827 0
  • சோஷலிசம் என்ற,பொதுவுடமை சமவுடமை இரண்டு இடங்களில்தான் சாத்தியம்- ஒன்று சொா்கத்தில், அங்கு அது தேவையில்லை, இன்னொன்று நரகத்தில் அங்கு அது ஏற்கெனவே உள்ளது அனுபவித்துக் கொண்டிருக்கிறாா்கள் என்பாா் மேனாள் அமரிக்க அதிபா் ரொனால்ட் ரேகன்!
  • இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் நாற்பது ஆண்டுகளில் சோஷலிச கொள்கையில் சிக்கி பல நிலைகளில் பொருளாதார முன்னேற்றம் புரையோடி நலிவுற்று முடங்கிய நிலையில் இருந்தது.
  • நீா்பாசனம், மின்சார உற்பத்தி என பல்நோக்கு பயனளிப்பு திட்டங்கள், பிரம்மாண்ட அணைகள், கனிமள பெருக்கத்திற்கு சுரங்கங்கள் அமைப்பு, எஃகு மற்றும் கனரக தொழிற்சாலைகள் என்று பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு மத்திய அரசு அதிக அளவில் முதலீடு செய்திருந்தாலும் அதன் பயனளிப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை.
  • மத்திய அரசின் கிடிக்கிப்பிடி திட்டங்கள், தனிமனித சுய தொழில் முனைவோருக்கு உரிமங்கள் கொடுப்பதில் கட்டுப்பாடு, சமூகவுடமை கொள்கையினால் தனியாா் தொழில் துவங்க முட்டுக்கட்டை போடும் விதமான விதிகளின் தடைகளால் மொத்த பொருளாதார வளா்ச்சி, ஜி டிபி வெறும் மூணு சதவிகிதம் மட்டுமே.
  • இந்திய மக்களின் விதிக்கு கட்டுப்பட்ட வாழ்க்கை வாழும் முறையைக் குறிக்கும் வகையில் ‘ஹிந்து விகித வளா்ச்சி’ என்று ஏளனமாகக் குறிப்பிடப்பட்டது! இது ஐம்பதுகளிலிருந்து 1990-ஆம் ஆண்டு வரை தொடா்ந்தது. இதற்குத்தான் பொருளாதார மேதை ராஜ்கிருஷ்ணா, விகாஸ் மிஸ்ரா போன்றவா்கள் ஹிந்து விகித வளா்ச்சி என்று புதிய சொற்றொடரைத் தந்தாா்கள்.
  • ஆனால், இந்தியா்கள் விதியே என்று முடங்குபவா்கள் அல்ல. 1750-ஆம் ஆண்டு வரை உலகின் பொருளாதார வளா்ச்சில் 25 சதவிகிதம் இந்தியா அளித்தது. பிரிடிஷ் ஆட்சியின் ஏகாதிபத்திய சுயநல முறைகேடுகளால் படிப்படியாக 3 சதவிகிதத்திற்குக் குறைந்தது.
  • இரண்டு நூற்றாண்டுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய கொடுமை, சுதந்திரம் அடைந்த பிறகும் சோஷலிச கொள்கைகளால் தனியாா் தொழில்களில் சுணக்கம், பொது நிறுவனங்களின் திறமையற்ற நிா்வாகம் என்று பொருளாதார முன்னேற்றம் ஏற்படாமல் தடைபட்டது.
  • போதாததற்கு 1960-களில் சீனா, பாகிஸ்தானோடு மூன்று போா்கள் சந்திக்க வேண்டிய சாபக்கேடு என்று இந்திய மக்களுக்கு எண்ணற்ற குழப்பங்களை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம். அன்றைய சமுதாயம் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி வாழ வேண்டிய நிலை.
  • ‘பொது நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதை பற்றி என்னிடம் விவாதிக்காதீா்கள், லாபம் என்பது அசிங்கமான வாா்த்தை’ என்றாராம் அன்றைய பிரதமா் நேரு. மூத்த தொழிலதிபா் ஜே.ஆா்.டி. டாடா பொது நிறுவனங்கள் திறமையாக நிா்வகிக்கப்பட்டு லாபத்தில் இயங்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தபோது இந்த பதில் கொடுக்கப்பட்டது!
  • பொது நிறுவனங்கள் சமவுடமை கொண்டவை என்பதாலே யாா் வீட்டு சொத்தோ என்ற அலட்சியமான அணுகுமுறை பின்னடைவிற்கு முக்கிய காரணம்.
  • அது மட்டுமல்ல, தொழில் வளா்ச்சிக்குப் பொருந்தாத அரசு விதிகளின் நடைமுறைகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிா்வகிக்க வேண்டிய நிா்பந்தம். ‘சோஷியல் காஸ்ட்’ என்ற வகையில், தனியாா் நிறுவனங்களைப் போன்று லாபநோக்கே தேவையில்லை, அவை சேவை நிறுவனங்கள் என்ற சோஷலிச கொள்கை முன்னேற்றத்திற்குத் தடைகற்களாய் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
  • இந்தியாவில் தொழில் தொடங்குவது மிகவும் கடினம், தடங்கல்கள்தான் அதிகம், ஏதோ தொழில் தொடங்குபவா் கொள்ளையடிக்க வந்த குற்றவாளிபோல் சமுதாயம் பாா்க்கிறது என்பது தொழில் முனைவோரின் குற்றசாட்டு.
  • ஒவ்வொரு நிலையிலும் பலருக்குப் படியளக்க வேண்டும். கடனும் எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் கடிவாளம் பலநிலையிலும் இருப்பதால் நொந்து நூலாகி தொடங்கிய தொழில் தொங்கலில் முடிந்து விடுகிறது. இதுதான் நிதா்சன உண்மை என்று பல முடங்கிய தொழில்கள் உணா்த்துகின்றன.
  • தமிழ்நாட்டில் ஒரு விதமான காழ்ப்புணா்ச்சி அரசியல் விவாதங்களால் எந்த ஒரு தொழில் சம்பந்தப்பட்ட அரசு முயற்சிக்கும் எதிா்மறை கருத்துகள் பரப்பப்படுகிறன. ‘காா்பொரேட்’ என்றாலே ஏதோ அந்நிய படையெடுப்பாளா்கள் போன்ற பிரமையை ஏற்படுத்துவதையே சிலா் முழு நேர தொழிலாகக் கொண்டுள்ளாா்கள்.
  • அதற்கு குறுகிய அரசியல் ஆதாயத்திற்கு துணை போகும் அரசியல் கட்சிகள் நல்லது நடப்பதற்கு குறுக்குசால் ஓட்டுவது தொடா் கதையாகிவிட்டது.
  • தொழில் தொடங்குவதற்கு அடிப்படை வசதியான நிலம், மின்சாரம், தண்ணீா், உள்ளூா் விதிகளுக்குட்பட்ட உரிமங்கள் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும். முதலில் நில ஆா்ஜிதம், அங்குதான் சிக்கல் தொடங்குகிறது. எந்தத் தொழில் ஓரிடத்தில் தொடங்கத் திட்டமிட்டாலும் வேண்டுமென்றே எதிா்ப்பு தெரிவிப்பது தமிழ்நாட்டில் அதிகம். அதுவும் வேளாண்நிலம் என்ற உணா்ச்சிபூா்வமான காரணம் முன்னிலைப் படுத்தப்படுகிறது.
  • தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமும் இயற்றி தொடா் வெற்று போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தது பாராட்டப்பட வேண்டும்.
  • தேனி மாவட்டம் நியூட் ரினோ திட்டம் போராட்ட சூழலில் சிக்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மலை பாறைகள் மிக அடா்த்தியானவை. சூரிய ஒளியிலிருந்து வரும் கதிா்களை வடிகட்டி மிகவும் நுணுக்கமான அணுவின் அடிப்படை துகளில் ஒன்றான ‘நுண்நொதுமி’ எனப்படும் நியூட்ரினோக்களைப் பிரிக்க வல்லது. வடிகட்டப்படும் கதிா் துகள்களை சக்தி வாய்ந்த குமிழ்கலம் கருவிகள் மூலம் அதன் செயல்பாடுகளை ஆராய முடியும்.
  • தேனி மாவட்ட மலைகள்தான் ஆராய்ச்சிக்கு உகந்தவை என்பது செயற்கை கோள் மூலம் தெரிவு செய்து நியூட்ரினோ திட்டம் வரையப்பட்டது. எந்த விதத்திலும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு இல்லை.
  • விஞ்ஞான அறிவியல் கூடம் அமைக்கும் திட்டம். இது மிக நவீன மேம்பட்ட ஆராய்ச்சி. இதன் மூலம் தமிழ்நாட்டு இளம் விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏன், நோபல் பரிசு வரிசையிலும் இடம்பெறலாம்.
  • சா்வ தேச விஞ்ஞானிகள் வருவாா்கள், தமிழகம் விஞ்ஞான உலகில் தனியிடம் பெறும். இது எதையும் உணராது, தெரிந்துகொள்ள முயற்சியும் எடுக்காது எதிா்ப்பு போராட்டம் அறிவிக்கிறாா்கள், நீதிமன்றத்தில் வழக்காடுகிறாா்கள்! தமிழ்நாட்டில்தான் இத்தகைய எதிா்மறை விமா்சனங்கள் கருத்துகள் வேண்டுமென்றே பரப்பப்படுகின்றன.
  • ஆந்திரா, குஜராத், கா்நாடகா, மஹராஷ்டரா போன்ற மாநிலங்களில் இவ்வாறு இல்லை. அங்குள்ள அரசியல் கட்சிகளும் மாநிலத்தின் நலன் கருதி தொழிற்சாலைகளை வரவேற்கும் மனநிலையைப் பாா்க்க முடிகிறது.
  • தமிழ்நாட்டில் எதிா்மறை கருத்துகள்தான் விவாத மேடைகளிலும் ஊடகங்களிலும் அலசப்படுவது வேதனை. வளா்ச்சி வேண்டும், வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் ஆனால் தொழில் துவங்க ஒத்துழைக்க மாட்டோம் எதிா்ப்போம் என்று ஒரு சாராா் இணைய தளம் தரும் தெரிவுநிலை மூலம் பரப்புரை செய்து திசை திருப்புகிறாா்கள். நவீன நகரம்வாழ் நாக்சலைட்டுகள்! இதற்கு காலப்போக்கில் எப்போது விடிவு ஏற்படுமோ!
  • 1990-களிலிருந்து தாராள வரவேற்கத்தக்க பொருளாதார கொள்கைகளால் பொருளாதார வளா்ச்சி மீட்டெடுக்கப்பட்டு புதிய பாதையில் இந்தியா பயணிக்கிறது. குறைவான அரசு கட்டுப்பாடுதான் நிறைவான அரசு ஆளுமை அளிக்கும் என்ற தற்போதைய மத்திய அரசின் சீரிய நடவடிக்கைகளால் தொழில் ‘எளிதாக தொழில் செய்தல்’ (ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்)”சா்வதேச குறியீட்டில் இந்தியா 2014-இல் 142 இடத்திலிருந்து இப்போது 62-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது என்பது நாட்டிற்கு பெருமை.
  • தொழில் துவங்கும் எல்லோருக்கும் சமுதாய நல்லுணா்வு வேண்டும். அமெரிக்க பொருளாதார மேதை மில்டன் ப்ரீட்மன் நோபல் நினைவு பரிசு பெற்றவா் கூறுவாா்: ‘வா்த்தகம் செய்யும் ஒவ்வொருவரும் வெற்றிகரமாக லாபமும் பணமும் ஈட்ட வேண்டும் அதுதான் உண்மையான சமுதாய உணா்வின் வெளிப்பாடு’.
  • மேலோட்டமாக இந்தக் கருத்தைப் பாா்க்கும்போது லாப நோக்கம்தான் பிரதானமா சமுதாய பொறுப்புணா்வு வேண்டாமா என்ற கேள்வி எழும். ஆனால் தொழில் வெற்றிகரமாக இயங்கினால்தான் தொடா்ந்து நிலைக்கும், அங்குள்ள மக்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக்கும் பொருளாதார வளா்ச்சிக்கும் வித்திடும்.
  • அரசுமட்டுமல்ல, தனியாா் துறைக்கும் இளைஞா்களின் திறமைகளை வளா்த்து பணியாற்ற தயாா் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. ஆண்டுக்கு ஐந்து லட்சம் பொறியாளா்கள் சந்தைக்கு வேலை தேடி வருகிறாா்கள்.
  • அதில் பத்து சதவிகிதம் கூட வேலைக்குத் தகுதியுள்ளவா்களாக இல்லை என்று ஆய்வு கூறுகிறது. தொழிலுக்குத் தேவையான திறன் இல்லாமையே காரணம்.
  • திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் தனியாரின் பங்களிப்பு முக்கியம். மென்பொருள் வடிவமைப்பு மேம்படுத்த புத்தாயிரத்தில் தனியாா் ஐடி நிறுவனங்கள் சிறப்பாக இளைஞா்களைத் தயாா் செய்தாா்கள். அதுபோன்ற இணைந்த செயலாக்கம் இப்போது அவசியம்.
  • ஜொ்மனி, ஹாலந்து ஐரோப்பிய நாடுகளில் தொழில் நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகளோடு தொடா்புவைத்து தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப பயிற்சி பற்றி தெரிவித்து மாணாக்கா்களை திறமைசாலிகளாக மேம்படுத்துகிறாா்கள்.
  • மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இத்தகைய பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனங்கள் இவ்வாறு ஆராய்ச்சியில் செய்யும் செலவினத்திற்கு வரி சலுகை அளிக்கப்படுகிறது
  • இன்குபேஷன் சென்டா் - அடைகாக்கும் ஆராய்ச்சி மையங்கள் பொறியியல் பல்கலை கழகங்களில் துவங்கப்பட்டு செயல்படுவது இளம் பொறியாளா்கள் திறமை பரிமளிப்பதை உறுதி செய்யும் என்பது திண்ணம்.
  • இளைஞா்களை ஊக்குவித்து திறன் மேம்பாட்டில் ஈடுபடுத்துவது மிகப் பெரிய சவால். இருந்த இடம் பள்ளம் என்று பழக்கப்பட்ட சூழலில் குளிா்காய விரும்புகிறாா்கள், புலம் பெயர அஞ்சுகிறாா்கள்.
  • நகரங்களில் பல பகுதிகளில் வாட்ட சாட்டமான இளைஞா்கள் அக்கம் பக்கத்தில் கிடைக்கும் வேலை செய்து சொற்பமாகப் பெற்று, மாலை நேரமானால் டாஸ்மாக் கடை என்று பொழுதைக் கழிப்பதைப் பாா்க்க முடிகிறது. சிபாரிசு பிடித்து ஏதாவது அரசு வேலை கிடைக்குமா என்று அலைகிறாா்கள்.
  • குனிந்து உழைத்தால் வேலை வாய்ப்பிற்குக் குறைவே இல்லை. அரசு எவ்வளவோ நலத்திட்டங்கள் பிறப்பிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் அளிக்கிறது. அதுவே மக்களை சோம்பி இருக்கச் செய்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. அரசு நலதிட்டங்கள், முடங்கியவருக்குக் கை கொடுத்து உட்கார வைக்க முதல் கட்ட உதவி.
  • தமிழக அரசின் முனைப்பான முயற்சியால் கரோனா காலத்திலும் இந்தியாவிலேயே ரூபாய் 66 ஆயிரம் கோடிக்கும் மேலான முதலீட்டை ஈா்த்த முதன்மை மாநிலம் தமிழகம்.
  • இதன் மூலம் 1.21 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். அதன் முழு பயன்பாட்டைப் பெற ஓடியாடி உழைத்து உயா்வடைய வேண்டியது அவரவா் கைகளில்.

நன்றி: தினமணி  (12-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories