TNPSC Thervupettagam

தொழில்முனைவோர் ஏன் தேவை

August 3 , 2023 398 days 421 0
  • பண்டைய காலந்தொட்டு, இந்திய நாட்டை வெளிநாட்டவர்கள் விரும்பியதற்கான முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று, வர்த்தகம் புரிவதற்கு ஏற்ற இடம்; மற்றொன்று, குறைந்த ஊதியத்தில் அதிக நபர்கள் வேலைக்கு கிடைத்தார்கள். இவை இரண்டும் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தன.
  • பிரிட்டிஷாரிடம் 300 ஆண்டுகள்அடிமைகளாக வாழ்ந்த இந்தியர்கள், மேலைநாட்டவருக்கு உழைக்கவும், அவர்கள் தயாரிக்கும் பொருள்களை நுகரவும் தயாராக இருந்தார்களே தவிர, அதை ஏன் நமது நாட்டில் தயாரிக்கக் கூடாது என்று எண்ணவில்லை. அது குறித்து எண்ணியோர் எவரையும் வெளிநாட்டினர் விட்டுவைக்கவில்லை.
  • இந்த நிலைமை இன்றைக்கும் தொடர்கிறது. இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் பயில்வதை மிகப் பெரும் கௌரவமாகக் கருதுகின்றனர். அங்கு பணிபுரிவதை அதிர்ஷ்ட தேவதை தந்த வரமாகக் கருதி மகிழ்கின்றனர்.
  • மேலும், உலகின் பிரசித்திபெற்ற பெரும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்திய இளைஞர்கள்தான் பணியில் உள்ளனர். அவர்கள், அதைப் போன்ற பெரும் நிறுவனங்களை இந்தியாவில் அமைக்க எண்ணுவதில்லை; அதில் நாட்டம் காட்டுவதும் இல்லை.
  • இந்தியர்களை மேலும் கவர்வதற்காக, கனடா, ஸ்விட்சர்லாந்து நாடுகளில் இந்தியர்களுக்கான விசா முறையை எளிமைப்படுத்தியுள்ளனர். அதன்மூலம் , அதிகமான மாணவர்கள் அங்கு பயில வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
  • இத்துடன் மட்டுமன்றி, சென்னையில் உள்ளஐ.ஐ.டி. நிறுவனம், வெளிநாட்டில் புதிய தொழில்முனைவோருக்கான வழிகாட்டி மையத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு இளைஞர்களை இளம் தொழில்புரியும் அதிபர்களாக உருவாக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியப் பெரும் தொழில் அதிபர்களோ, வெளிநாடுகளுக்குத் தங்கள் தொழில்களை இடம்பெயர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இந்தியரின் திறன்கள், மற்றைய நாட்டினரது தொழில், உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்ப துறைகளை மேம்படையச் செய்து வருகின்றன. ஆனால், நம் நாட்டில் நம் அரிய வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, நாட்டின் தேசிய வருமானமோ, தனிநபர் வருமானமோ போதுமானஅளவுக்கு உயர வில்லை.
  • இந்நிலையில், சமீபத்தில் ஐ.நா. மற்றும் நீதி ஆயோக் இணைந்து 12 வெவ்வேறு விதமான அளவுகோல்களைக் கணக்கில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை ஆய்வு செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஜந்தாண்டுகளில், 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் வருமானம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் எதுவும் ஆராயப்படவில்லை. வேலைவாய்ப்புகள் பெருகுவதால் மட்டுமே நீடித்த நிலையான ஒட்டுமொத்த வளர்ச்சி நாட்டில் ஏற்பட முடியும்.
  • ஒரு நாடு தன்னிறைவு அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்புக் குறியீடுகளைக் கொண்டும், அந்த நாட்டின் தேசிய தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்ய முடியும்.
  • இன்றைய உலக மக்கள்தொகை 800 கோடி. இதில், வறுமையில் இருப்போர் 19 சதவீதத்தினர். இது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. 81 நாட்டினர் தங்கள் வளத்தை முறையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளாக மாறியுள்ளனர் எனஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
  • அமெரிக்கா வளர்ச்சியடைந்த வல்லரசு நாடு. இதன் நாணயமான டாலர் உலக வர்த்தகத்தில் மைய நாணயமாக உள்ளது. இங்கு வறுமை உண்டு. ஆனால் 1 சதவீதம் மட்டுமே. வேலையில்லாதோர் உள்ளனர். அவர்கள் 4 சதவீதம். அவர்களும் அரசின் கண்காணிப்பில், ஆதரவில் உள்ளனர்.
  • இங்கு மக்கள்தொகை 33 கோடி. மக்கள் அவர்களின் பணிகளுக்காக அரசையோ, அரசு சார்ந்த நிறுவனங்களையோ, தனியாரையோ மட்டும் சார்ந்து இருப்பது இல்லை. தங்களுக்குள்ள ஆர்வத்துக்கு ஏற்ப, சுயமாகத் தொழில் புரிகின்றனர். அங்குள்ள தொழில்முனைவோர் குறியீடு எண் 83.6 சதவீதமாக உள்ளது. பல துறைகளிலும் தொழில்முனைவோர் ஈடுபாடு கொண்டு கனி, தாதுப் பொருள்கள், உலோகப் பொருள்கள், எரிவாயு வளங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றனர்.
  • இதனால், அமெரிக்காவின் தேசிய வருமானம் 25.34 டிரில்லியன் டாலராக உயர்ந்து நிற்கிறது. தனிநபர் வருமானம் 78,422 டாலருடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தைபெருமளவில் உயர்த்திக் காட்டுகிறது.
  • 27 லட்சம் மக்கள்தொகை கொண்ட கத்தார், எண்ணெய் வளம்-எரிசக்தி வாயு மூலம் பொருளாதார வளர்ச்சியில் தன்னிகரற்ற தன்மையை எட்டிப் பிடித்துள்ளது. இங்கு வறுமையில் எவருமில்லை. வேலையின்றி உள்ளோர் 0.1 சதவீதத்தினர் மட்டுமே. தொழில்முனைவோர் ஏராளம். தனிநபர் வருமானம் உச்சநிலையில் அதாவது 1,13,675 டாலர். மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கிறது.
  • சீனாவின் மொத்த நிலப்பரப்பில் கால் பங்கில் மட்டுமே விவசாயம் செய்து வருகிறது. உணவுத் தேவைக்கு பிற நாடுகளை நம்பியுள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய கச்சாப் பொருள்கள் கூட அவர்களிடம் கிடையாது. நாட்டின் மொத்த உற்பத்தியையும் தேசிய வருமானத்தையும் தனிநபர் வருமானத்தையும் பெருக்க நாட்டில் உள்ள இயற்கை, மனித, மற்றும் செயற்கை வளங்களையே பயன்படுத்துகின்றனர். இந்தியாவைப் போல் அல்லாமல், மக்கள் பெருக்கத்தை பெரும் வளமாகப் பார்க்கிறது சீனா.
  • இதனால் சீன நாட்டின் தேசிய வருமானம் 19.91 டிரில்லியன் டாலர். தனிநபர் நபர் வருமானம் 12,437 டாலர். தொழில்முனைவோர் குறியீடு எண் 41 சதவீதமாக உள்ளது. அவர்களின் தாரக மந்திரம் "உள் நாட்டில் உற்பத்தி - வெளிநாடுகளில் விற்பனை' என்பதாகும். இங்கு வறுமையில் உள்ளோர் 1.34 சதவீதம் பேர்; வேலையற்றோர் 5.2 விழுக்காடு.
  • உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு லக்ஸம்பர்க். அங்குள்ள மக்கள்தொகை 6,34,000. அங்கு மிகப் பெரிய வளர்ச்சி எப்படி சாத்தியமானது? காரணம், பெரும் வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த பணிகள் அனைத்தும் தனியார் ஆளுகையில் தொழில்முனைவோரிடம் உள்ளது. நிதித் துறையில் இருந்து கிடைக்கும் வருவாய் போதுமானஅளவில் உள்ளது. அதுவே, அந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவில் நிர்ணயம் செய்கிறது.
  • குறைந்த தொழில் வளம், விவசாயத்துக்குப் போதிய நிலம் இல்லாமல் 80 சதவீத உணவை இறக்குமதி செய்யும் பெர்முடா, தனியாரின், தொழில்முனைவோரின் நிதிசார்ந்த பணிகளில் ஈடுபாடு கொண்டு உலகின் இரண்டாவது பணக்கார நாடாக இருக்கிறது. இதுபோன்று இருக்கும் முதல் பத்து பணக்கார நாடுகளில் வறுமையில் இருப்போர், வேலையற்றோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
  • இந்திய நாட்டின் வளங்களைக் கொண்டு மதிப்பிடுகையில் என்றைக்கோ வளர்ந்த நாடாக ஆகியிருக்க வேண்டிய இந்தியா, ஏன் இன்னும் வளர்ந்து வரும் நாடாகவே உள்ளது என்பது பல பொருளாதார மேதைகளின் கேள்வியாக உள்ளது.
  • ஜ.எம்.எஃப். ஆய்வுஅறிக்கை பொருளாதார ரீதியில் 39 நாடுகளும் எண்ணெய் வளத்தால் 37 நாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். இந்தியாவை அதன் நான்கு தரவரிசைப் பட்டியலில் (கீழ், நடுத்தரம், உயர் நடுத்தரம், அதிக வருமானம்) இரண்டாவது பிரிவான கீழ், நடுத்தர பொருளாதாரம் உள்ள நாடாக அறிவித்துள்ளது.
  • உலக அளவில் நாடுகள் வாரியான தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை 22 நாடுகள் 50,000 முதல் 1 லட்சம் டாலர் வரையும் 29 நாடுகள் 25,000 முதல் 50,000 டாலர் வரையும் 37 நாடுகள் 10000 முதல் 25000 டாலர் வரையும் 44 நாடுகள் 5,000 முதல் 10,000 டாலர் வரையும் 22 நாடுகள் 3,000 முதல் 5,000 டாலர் வரையும் 61 நாடுகள் 3,000 க்கும் குறைவானடாலர் வரையும் ஈட்டுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியா இறுதி வரிசையில் உள்ளது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக தொடர்ந்து 21 ஆண்டுகள் இருந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என எனப் பொருளாதார மேதைகள் மதிப்பிட்டுள்ளனர்.
  • 142 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஏழை, நடுத்தரம், வசதியுடையோர் என மூன்று பிரிவினர் உள்ளனர். இதில் ஏழைகள் நான்கில் ஓர் பங்கினர். வசதியுடையோர் 2 சதவீதத்தினருக்கும் குறைவானவர்கள். வசதியானோர் அதிகம் இருப்பின் அவர்களால் நாடு வளம் அடைய முடியும். அவர்களிலும் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
  • இந்திய மக்கள்தொகையில் 68 சதவீதத்தினர் (96.56 கோடி பேர்) வேலைபுரிய வேண்டியவர்கள். இவர்களில் ஏழரை கோடி பேர் வேலையின்றி உள்ளனர். பணிகளில் இருப்போரில் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஈடுபடுகின்றனரே தவிர குவிந்து கிடக்கும் வளங்களைக் கொண்டு ஒருவரால் பலரும் பலன் பெறும் வண்ணம் தொழில்முனைவோராகத் தயங்குகின்றனர்.
  • வெளிநாடுகளில் பணி செய்ய ஆர்வம் காட்டுவோர் , இங்கு வணிகம் செய்து உயர்வதில் நாட்டம் காட்ட மறுக்கின்றனர். இன்று இந்திய இளைஞர்கள் அயல் நாடுகளில் பணிபுரிந்து அவர்களைச் செல்வச் செழிப்புள்ளவர்களாக்கி வருகின்றனர்.
  • தொழில் புரட்சியானது அண்மைக்காலமாக தனியார்வசம் கைமாறி வருகிறது. வங்கிகளின் சேவைகள் அமெரிக்க டாலரையும் வெளிநாட்டு முதலீடுகளையும் சார்ந்து பணவீக்கத்தில் சுழன்று வருகின்றன. மனித ஆற்றலைச் சரிவரப் பயன்படுத்தவில்லை. இயந்திரங்களும், செயற்கை அறிவு சார்ந்த நுணுக்கங்களும் புக ஆரம்பித்துள்ளன.
  • நாட்டின் வளங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கானமுயற்சிகளை எடுத்தோர் முன்னேறியுள்ளனர். அதை எவ்வாறு எடுத்தார்கள் என்பதை குளோபல் தொழில்முனைவோர் குறியீடு மூலம் அறிய முடியும். 75 முதல் 85 சதவீதம் வரை குறியீடு பெற்ற நாடுகள் அனைத்தும் வளர்ச்சி பெற்ற நாடுகளாக உள்ளன. அங்கே வறுமையைக் குறைக்கவும் வேலைவாய்ப்பைப் பெருக்கவும் தொழில்முனைவோரின் பங்கு அதிகம் உள்ளது.
  • இந்தியாவில் சுய தொழில் செய்யும் தொழில்முனைவோர் பெருகினால் நாட்டின் வளங்கள் பயன்பாட்டுக்கு வரும். வேலைவாய்ப்பு உருவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருகும். இதனால், நாட்டின் தேசிய வருமானம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு பெருகி, வருமானம் அதிகரிக்கும்போது பற்றாக்குறை நீங்கி பொருளாதார முன்னேற்றம் பெறும். அதைப் பின்பற்றும் சந்ததியினர் நம் நாட்டை எளிதில் வல்லரசு நாடாக ஆக்குவர்.
  • இளைஞர்களிடம் தொழில்முனைவோருக்கான தயக்கங்கள் நீங்கி, அவர்கள் உழைக்க முன் வந்துவிட்டால் மாமலையும் கடுகுதான்.

நன்றி: தினமணி (03 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories