TNPSC Thervupettagam

தொழில் பூங்கா திட்டத்தால் கோவையில் புத்துயிர் பெறும் தங்க நகை தொழில்!

November 18 , 2024 8 hrs 0 min 14 0

தொழில் பூங்கா திட்டத்தால் கோவையில் புத்துயிர் பெறும் தங்க நகை தொழில்!

  • கோவை: தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. 25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இத்தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
  • கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா,லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், சமீபத்தில் கோவையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்க நகை தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
  • இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விற்பனை பிரிவுகளில் தினமும் 200 கிலோ எடையிலான தங்கம் வர்த்தகம் நடைபெறுகிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பு இத்தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கோவை, பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்க நகை வர்த்தகம் தொடர்பான பணிகளுக்கு கோவை வந்து செல்கின்றனர்.
  • இவ்வாறு வருவோருக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பிடம் என அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும். கோவை குறிச்சியில் அமைக்கப்படும் தங்க நகை தொழில் பூங்கா திட்டத்தால், இத்தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெறும். தினசரி வர்த்தகம் 250 கிலோவாக உயரும். வேலைவாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும்.
  • கோவைக்கு தினமும் வர்த்தகம் செய்ய வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பூங்கா செயல்பட தொடங்கிய பின் வளாகத்தில் வாங்குவோர், விற்போர் கண்காட்சி நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் தேசிய அளவில் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் பலர் கோவைக்கு அதிக எண்ணிக்கையில் வந்து தங்க வணிகம் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories