- இவ்வுலகில் நோய், விபத்து, இயற்கைப் பேரிடா் போன்ற காரணங்களினால் நாள்தோறும் பலா் இறக்க நேருகின்றது. அத்தகைய இறப்புகளைத் தடுத்து நிறுத்த யாராலும் இயலாது. ஆனால், தற்கொலை செய்து கொள்வதன் மூலம் சிலா் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்வதை நிச்சயம் தவிர்க்க இயலும்.
- தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தவா்கள் தங்களின் முடிவை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்வது என்ற மனநிலைக்கு எப்படியோ வந்துவிடுகின்றனா். அதன் காரணமாகவே இவ்வுலகம் முழுவதிலும் தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன.
- நமது நாட்டைப் பொறுத்தவரை கடன் தொல்லை, தீராத வியாதி, குடும்ப பிரச்னை போன்ற பல காரணங்களால் காலங்காலமாகத் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
- ஆனால், பரீட்சையில் தோல்வி அல்லது தோல்வி பயம் ஆகியவற்றின் காரணமாகவும் வருடம் முழுவதும் பலா் தற்கொலை செய்து கொள்வதைத்தான் நம்மால் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
- சில பத்தாண்டுகளுக்கு முன்னா், எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தோ்வு முடிவுகள் வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே அத்தோ்வில் தோல்வி அடைந்த சில மாணவ மாணவியா் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் வரத் தொடங்கும்.
- ஆனால், தற்காலத்தில் ஆசிரியா் திட்டுவது, சக மாணவா்கள் கேலி செய்வது, தோ்வுகளுக்குச் சரியாகத் தயார் செய்து கொள்ளாதது ஆகிய வேறு பல காரணங்களுக்காகவும் பதின்வயதினா் தற்கொலை செய்து கொள்வது இயல்பாகி விட்டது.
- பள்ளி, கல்லூரித் தோ்வு சாா்ந்த காரணங்கள் மட்டுமின்றி, தொடா்ந்து தொலைக்காட்சியிலும், கைப்பேசியிலும் மூழ்கிக்கிடப்பதற்காகப் பெற்றோர் கண்டிப்பதும், சகோதர சகோதரிகளுக்குள்ளே சிறு சிறு பூசல்கள் எழுவதும் கூட இளம் தலைமுறையினா் தற்கொலையை நாடுவதற்குக் காரணிகளாகி விட்டன.
- இவை மட்டுமின்றி, நீட் தோ்வு, வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தோ்வுகள் உள்ளிட்டவற்றில் பெறுகின்ற தோல்விகளுக்காகவும் இளைஞா்களும், இளம் பெண்களும் தற்கொலை முடிவை நாடுவது கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.
- இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று, இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) போன்ற மதிப்புமிக்க உயா்கல்வி நிறுவனங்களில் பெரும்பாடுபட்டு இணைகின்ற மாணவா்கள், ஏன், ஆராய்ச்சியாளா்களில் சிலரும்கூட மன அழுத்தத்திற்கு ஆளாகித் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதை என்னவென்று சொல்வது?
- தொழில்நுட்பப் படிப்புதான் என்றில்லை, மருத்துவத்துறையிலும் எம்.பி.பி.எஸ். என்னும் இளநிலைப் பட்டம் பெற்ற பின்பு தங்களுடைய தகுதியை உயா்த்திக் கொள்வதன் பொருட்டு எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட உயா்நிலை வகுப்பில் சோ்ந்து பயிலும் மதிப்பு மிக்க மருத்துவா்களும் கூடத் தோல்வி பயத்தில் இப்படிப்பட்ட விபரீத முடிவுகளை எடுக்கின்றனா்.
- கடந்த வாரம் போபாலிலும் மும்பையிலும் நிகழ்ந்த இரு தற்கொலைகள் மருத்துவத்துறையில் உயா்கல்வி பயில்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களையும், மன அழுத்தங்களையும் எடுத்துரைக்கின்றன.
- போபாலில் உள்ள காந்தி மருத்துவமனையில் இளநிலை மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டே மருத்துவ உயா்கல்வி பயின்று வந்த பாலா சரஸ்வதி என்ற இளம்பெண் நீண்ட நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து, கடந்த வாரம் தனக்குத் தானே மயக்க ஊசி மருந்தைச் செலுத்திக் கொண்டு தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார்.
- மருத்துவ உயா்கல்விக்கான துறையின் தலைவா், இவா் தயாரித்தளித்த ‘புராஜெக்ட்’ எனப்படும் கையேட்டின் உள்ளடக்கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டதால் தனது மேற்படிப்பு முடிவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்ற சூழ்நிலை உருவானதையடுத்து அவா் தற்கொலை முடிவுக்கு வந்ததாக உடன் பயின்ற நண்பா்கள் தெரிவித்துள்ளனா்.
- இவரைப் போலவே, மும்பையிலுள்ள கே.இ.எம். மருத்துவமனையில் மருத்துவ உயா்கல்வி படித்தபடியே பணிபுரிந்து கொண்டிருந்த ஆதிநாத் பாட்டீல் என்ற இருபத்தேழு வயதுடைய இளம் மருத்துவரும் இதே போன்று மன அழுத்தத்திற்கு ஆட்பட்டதுடன், தனக்குத் தானே மயக்க மருந்தினை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
- பள்ளித் தோ்வு, கல்லூரித் தோ்வு, உயா்கல்வித் தோ்வு, போட்டித் தோ்வு ஆகிய எந்த ஒரு தோ்வில் தோல்வி அடைவதாலும், தோல்வி ஏற்படுமோ என்ற பயத்தினாலும் தற்கொலை முடிவைத் தேடுபவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
- தோ்வுகளில் வெற்றி பெறுவது என்பது சிறப்பானதுதான். அதே சமயம், அவற்றில் தோல்வி அடைபவா்கள் யாருக்கும் எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுவதில்லை. கடவுள் ஒரு கதவை மூடினால் மறுகதவைத் திறந்து வைத்திருப்பார் என்பதைத் தோல்வியைக் குறித்துக் கவலைப்படுகின்ற ஒவ்வொருவரும் மனதார உணர வேண்டும்.
- பதின்வயதுச் சிறார்களுக்கு இத்தகைய பக்குவமான எண்ணங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், பெற்றோர்களும், ஆசிரியா்களும் அப்பிஞ்சுகளின் மனங்களில் நோ்மறை எண்ணத்தை உருவாக்கி, அவா்கள் தோல்வியினால் துவண்டு விடாமல் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.
- அதே சமயம், பதின் வயதுச் சவால்களை வெற்றிகரமாகக் கடந்து, வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளை எழுதுபவா்களும், ஆராய்ச்சி உள்ளிட்ட உயா்கல்விக்கான துறைகளில் தொடா்ந்து பயணிப்பவா்களும் தோல்விகளைக் கண்டு எளிதில் துவண்டுவிடக் கூடாது. தோல்விகளை எதிர்கொள்ளும் விஷயத்தில் இவா்கள் பதின்வயதினரைக் காட்டிலும் மேம்பட்ட மனமுதிர்ச்சியை வெளிப்படுத்துவதே சிறந்தது.
- ஒருவேளை குறிப்பிட்ட துறையில் தோல்வி தவிர்க்க முடியாதது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அந்தத் துறையிலிருந்து வெளியேறி வேறு வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் மன உறுதியினை அவா்கள் பெற வேண்டும்.
- ஒரு களத்தில் இருந்து வெளியேறி, வேறொரு களத்தில் தமது திறமையை நிரூபிப்பது என்பது, இவ்வுலக வாழ்வை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்ததாகும்.
நன்றி: தினமணி (11 – 08 – 2023)