- தோழர் வே.ஆனைமுத்து, பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் பிறந்தவர். 8ஆம் வகுப்பு வரை இலப்பைக்குடிக்காட்டில் பயின்றார். அங்கு பணியாற்றிய வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியர், பெரியார் கொள்கைகளை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
- 1946 முதலே திராவிடர் கழகக் கூட்டங்களில் ஆனைமுத்து கலந்துகொண்டார். 1949 ஜனவரி 14, 15ஆம் நாள்களில் சென்னையில் மிகப் பெரிய அளவில் திருக்குறள் மாநாட்டைத் தந்தை பெரியார் நடத்தினார். அம்மாநாட்டில் 10,000 பேர் கலந்துகொண்டனர். அதன் விளைவாகத் தோழர் ஆனைமுத்துவும் வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியரும் இணைந்து ‘குறள்மலர்’ என்ற கிழமை ஏட்டினை 1950இல் தொடங்கினர்.
- நான்கு ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்த ஆனைமுத்து, பெரியாருடன் நெருங்கியிருந்து இயக்கப் பணியாற்ற விரும்பி, 1956இல் அப்பணியை உதறிவிட்டு, திருச்சிராப்பள்ளியில் குடியேறினார். பெரியாரின் வேண்டுகோளை ஏற்று 10,000 தி.க. தொண்டர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவை 26.11.1957இல் தீயிட்டு எரித்தனர்; 3,000 பேர் சிறைப்பட்டனர். ஆனைமுத்துவும் தன் குடும்பத்தை மறந்து 19 வயது மனைவி, இரண்டு சிறு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டுத் தன்னுடைய 32ஆம் வயதில் அரசமைப்புச் சட்டத்தை எரித்து, 18 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்று, வேலூர் சிறைக்குச் சென்றார். சிறையில் இவருக்குப் புத்தகம் ‘பைண்டிங்’ செய்யும் வேலை கொடுக்கப்பட்டது. அப்போது பல நல்ல நூல்களைப் படித்துத் தன் அறிவைச் செழுமைப்படுத்திக்கொண்டார்.
தொடர் பெரியார் பணி:
- சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, ஊதியம் இல்லா முழு நேர ஊழியராகத் திராவிடர் கழகத்தை வளர்த்தெடுக்க ஆனைமுத்து அரும்பாடுபட்டார். தந்தை பெரியார் திருச்சியில் இருக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
- 1962இல் கரூரில் திராவிடர் கழக மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஆனைமுத்துவிடம் பெரியார் ஒப்படைத்தார். 1952 தேர்தலுக்குப் பிறகு சில முரண்பாடுகள் காரணமாக திராவிடர் கழகத்துக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினரை ஆதரவுச் சக்தியாக மாற்ற ஆனைமுத்து அப்போது விரும்பினார். 1964இல் கச்சனத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் கே.பாலதண்டாயுதம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “பொதுவுடைமைக் கட்சியினர் சாதி ஒழிப்புக்காக வேலைத்திட்டம் வகுக்காதது தவறு; பெரியாரும் சமதர்மப் பிரச்சாரத்தைத் தீவிரமாகச் செய்யாதது தவறு” என்று பேசினார்.
- திராவிடர் கழகத் தோழர்களுக்குப் பயிற்சி வகுப்பில் பாடம் நடத்தி நல்ல கொள்கைப் புரிதலை உண்டாக்க வேண்டும் என்று பெரியாரிடம் ஆனைமுத்து வேண்டுகோள் வைத்தார். 1965 முதல் நடைபெற்ற எல்லா பயிற்சி வகுப்புகளுக்கும் ஆனைமுத்துவையே பெரியார் பொறுப்பாளராக நியமித்துவந்தார்.
- 1970இல் திருச்சியில் ‘சிந்தனையாளர் கழகம்’ உருவாகிட ஆனைமுத்து காரணமாக இருந்தார்; அதன் செயலாளராகவும் செயல்பட்டார். பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் பெரும் தொகுப்பாக வெளியிட விரும்பி, பெரியாரிடம் ஒப்புதல் பெற்றார். தொகுத்ததிலிருந்து ஆங்காங்கே சில பக்கங்களைப் படித்துக் காண்பித்துப் பெரியாரிடம் கையொப்பம் பெற்றார். தன் தோழர்களின் உதவியுடன் 1970களில் - கணினியோ நகலகமோ இல்லாத அந்தச் சூழலில் - ஏறத்தாழ 20,000 பக்கங்களைக் கையாலேயே எழுதித் திருத்தம் செய்து, அந்தக் காலக்கட்டத்தில் இருந்த Letter Press என்று சொல்லக்கூடிய கையினால் அச்சுக் கோக்கும் இயந்திரத்தில் 400 பக்கங்கள் அச்சடித்து பெரியாரிடம் காண்பித்தார். பெரியார் மிகவும் மகிழ்ந்தார்.
- பெரியாரின் இறுதிக் காலச் சுற்றுப்பயணங்களில் ஆனைமுத்து தொடர்ந்து பங்குகொண்டார். 27.11.1973 அன்று சேலம் கோட்டைத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவருடைய உரையைக் கூர்ந்து கவனித்த பெரியார், தன் உரையின் தொடக்கத்திலேயே, “பேரறிஞர் ஆனைமுத்து அவர்களே” என்று விளித்தார்.
- 01.07.1974 அன்று திருச்சியில் ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ மூன்று பெரும் தொகுப்புகளை 2,170 பக்கங்களில் தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி வெளியிட்டார். திராவிடர் கழகத்தின் தலைவர் மணியம்மையார், பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி, திருவாரூர் தங்கராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தன் தோழர்களோடு இணைந்து 08.08.1976இல் பெரியார் சம உரிமைக் கழகம் என்ற அமைப்பை ஆனைமுத்து தொடங்கினார். பின்னர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மண்டல் நாயகர்:
- தோழர் ஆனைமுத்து, மா.பெ.பொ.க.வின் முதன்மையானவர்களாக விளங்கிய சீர்காழி மா.முத்துச்சாமி, சேலம் அ.சித்தையன் ஆகியோரின் துணையுடன் ஒன்றிய அரசின் பணிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு பெற்றிட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, வட இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியை நேரில் சந்தித்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடுவண் அரசின் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
- மொரார்ஜி தேசாய், பிரதமர் சரண் சிங், இந்திரா காந்தி, உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் உள்ளிட்டவர்களைச் சந்தித்தும் உரையாடியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தியும், ‘Whither Backward Class?’ (பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைதான் என்ன?) என்கிற ஆங்கில நூலை 720 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி, கொள்கைப் புரிதலை உண்டாக்கி, மண்டல் குழு அமையவும் அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவும் காரணமாக இருந்தார்.
- மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றை இணைத்ததில் ஆனைமுத்து முன்னோடி ஆவார். 01.10.1994 முதல் ‘Periyar Era’ என்ற பெயரில் ஆங்கில மாத இதழை நடத்தினார். பெரியாரின் கொள்கைகளைப் பிற மொழியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் எழுதினார்.
- 1974இல் வெளியிடப்பட்ட, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ தொகுப்பில் விடுபட்ட பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து, 20 தொகுப்புகளாக 9,300 பக்கங்களில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியைக் கொண்டு, 21.03.2010 அன்று வெளியிட்டார். ஆனைமுத்துவின் எழுத்துகள் அனைத்தும், ‘திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ என்ற தலைப்பில் 21 தொகுப்புகள் அடங்கிய நூலாக 2012இல் வெளியிடப்பட்டது.
- 1974 முதல் மறையும் வரை, தன்னுடைய ‘சிந்தனையாளன்’ ஏட்டில் பெரியாரியலுக்கு ஆனைமுத்து விளக்கம் அளித்துவந்தார். பெரியாருடைய கருத்துகளையும் கொள்கைகளையும் பெரியாரியம் எனத் தத்துவப்படுத்தி நிலைக்கச் செய்தவர் அவர். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பணி செய்வார். திராவிடர் இயக்கக் களப்பணியாளராக, ஆய்வாளராக 75 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த வே.ஆனைமுத்து, தன்னுடைய 96ஆம் வயதில் 06.04.2021 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
- ஜூன் 21: வே.ஆனைமுத்து நூற்றாண்டுத் தொடக்கம்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 06 – 2024)