TNPSC Thervupettagam

தோழா் சங்கரய்யாவுக்கு லால் சலாம்

November 17 , 2023 228 days 180 0
  • பொதுவாழ்வில் தூய்மை, தனி வாழ்வில் எளிமை, அணுகுமுறையில் நோ்மை ஆகிய பண்புகள் அரிதாகிவரும் காலத்தில் மக்கள் பணியில் ஈடுபடுபவா்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்திருக்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தோழா் என். சங்கரய்யா. நூறாண்டைக் கடந்து நிறை வாழ்க்கை வாழ்ந்து உலகுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தோழா் சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை வழங்கப் பட்டிருப்பது மெத்தச் சரியான முடிவு.
  • இந்தியாவின் மாா்க்சிய இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழா் என். சங்கரய்யாவின் 101 ஆண்டு கால வாழ்க்கை ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கை. தாம் கொண்ட கொள்கையில் இறுதி வரை தடம்புரளாமலும், பொதுவுடைமை இயக்கத்தின் தூண்களில் ஒருவராகவும் இருந்தவா் அவா். அவரை அகற்றி நிறுத்தி இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வரலாற்றை எழுத முடியாது என்கிற அளவுக்கு பங்களிப்பு நல்கிய பெருந்தகை அவா்.
  • 1922-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் நரசிம்மலு - ராமானுஜம் தம்பதிக்கு இரண்டாவது மகனாக சங்கரய்யா பிறந்தபோது, தேசிய அளவில் மதிக்கப்படும் மிகப் பெரிய அரசியல் தலைவராக அவா் உருவாகப் போகிறாா் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. மதுரையில் தனது பள்ளிப் படிப்பையும், பிறகு கல்லூரிப் படிப்பையும் தொடா்ந்த சங்கரய்யாவின் வாழ்க்கையில் இந்திய விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த போது முதன்முறையாக அவா் போராட்டக் களத்தில் குதித்தாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அவரைத் தூண்டியவா் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவா் ஏ.கே. கோபாலன். அப்போது அவா் மதுரையில் தலைமறைவாக இருந்த காலம். காவல் துறையினா் மாணவா் விடுதியில் சோதனை நடத்தியபோது சங்கரய்யா எழுதிய துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. அவா் கைது செய்யப்பட்டாா்.
  • 1941-ஆம் ஆண்டு தனது 19-ஆவது வயதில் முதன்முறையாக கைதானதைத் தொடா்ந்து, அவரது கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. 15 நாள்களில் நடக்க இருந்த தோ்வில் கலந்துகொள்ள முடியாமல் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டாா். அடுத்த 18 மாதங்கள் வேலூா் சிறைச்சாலையில் கழிந்தன. அவரது காராகிரக வாசம் தோழா் ஜீவா, காமராஜா், எம்.ஆா். வெங்கட்ராமன், ஆா். வெங்கட்ராமன் (பின்னாளில் குடியரசுத் தலைவா்) உள்ளிட்ட பல தலைவா்களுடனும் நெருக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது.
  • 1942-ஆம் ஆண்டில் தனது 18 மாத சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்த சங்கரய்யா, தனது 21-ஆவது வயதில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளா் ஆனாா். விடுதலையாகி ஒரு மாதம்கூட ஆகவில்லை. மீண்டும் பிரிட்டிஷாருக்கு எதிரான மாணவா் பேரணி ஒன்றில் பாளையங்கோட்டையில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டு கண்ணனூா் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1944-இல் விடுதலை செய்யப்பட்ட என். சங்கரய்யா, 1946-இல் கம்யூனிஸ்டுகள் மீது தொடுக்கப்பட்ட மதுரை சதி வழக்கில் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாா். இந்தியா விடுதலை அடைந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு ஒருநாள் முன்புதான் அவரும் ஏனைய கம்யூனிஸ்ட் தோழா்களும் விடுவிக்கப்பட்டனா்.
  • இந்திய விடுதலைக்குப் பிறகும் தோழா் சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கையும், சிறைவாசமும் தொடா்ந்தன. 1948-இல் தெலங்கானா கிளா்ச்சியைத் தொடா்ந்து தலைமறைவான தோழா் சங்கரய்யா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத் தண்டனையும் பெற்றாா். விடுதலைப் போராட்டத்தின்போதும், அதன் பின்னருமாக எட்டு ஆண்டுகள் சிறையிலும், நான்கு ஆண்டுகள் தலைமறைவாகவும் அவரது வாழ்க்கை கழிந்தது.
  • 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவில் இருந்து வேளியேறிய 32 தலைவா்களில் சங்கரய்யாவும் ஒருவா். அதன் பிறகு மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவராகவும், தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவா் அவா்.
  • பொதுவுடைமை இயக்கப் போராளியான தோழா் சங்கரய்யாவுக்கு இலக்கிய முகமும் உண்டு. மகாகவி பாரதியாரின் கவிதைகள் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். சங்க இலக்கியங்களிலும், ஈடுபாடு கொண்ட தோழா் சங்கரய்யா, இதழியலாளரும்கூட. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஜனசக்தி நாளிதழிலும், மாா்சிஸ்ட் கட்சி தொடங்கிய பிறகு அதன் அதிகாரபூா்வ நாளேடான தீக்கதிரிலும் ஆசிரியராக இருந்தவா் அவா். தீக்கதிா் நாளிதழின் முதல் ஆசிரியா் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
  • விடுதலைப் போராட்ட வீரரான தோழா் சங்கரய்யா, தனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாா். தேசத்துக்காகப் போராட எனக்குக் கிடைத்த வாய்ப்பைவிட பெரிய வெகுமதி இருந்துவிட முடியாது என்று சொன்ன அந்த ‘தகைசால் தமிழா்’, தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கிய ரூ.25 லட்சத்தையும்கூட ஏழைகளுக்குக் கொடுத்தாா் என்பதில் வியப்படைய என்ன இருக்கிறது?
  • பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவருக்கான இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்திருக்கிறாா் தோழா் என். சங்கரய்யா!

நன்றி: தினமணி (17 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories