TNPSC Thervupettagam

நட்புறவுக்கான இருவழிப் பாதை

June 21 , 2023 571 days 378 0
  • பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணம், சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதாக மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே இதுநாள் வரை இருந்துவந்த தயக்கம் அகன்று வெளிப்படையான நட்புறவாக மாறியிருப்பதன் அடையாளமாக அதை உலகம் பார்க்கிறது.
  • சாதாரண விஜயத்துக்கும், அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆண்டுதோறும் நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர்கள் போவதும், அமெரிக்க அதிபரைச் சந்திப்பதும் போன்றதல்ல அரசுமுறைப் பயணம். இதற்கு முன்னால் இந்திய பிரதமர்களில் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே (2009) அந்த கெளரவம் வழங்கப்பட்டது.
  • ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். சிவப்புக் கம்பள வரவேற்பு, வெள்ளை மாளிகை விருந்திற்கு வரும்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை, அமெரிக்க அதிபரின் பென்சில்வேனியா விருந்தினர் மாளிகையான "பிளேர் ஹெளஸ்'-இல் தனிப்பட்ட முறையில் அதிபருடன் சந்திப்பு என்பன அதன் சிறப்புகள். இதற்கு முன்னர் பிரதமர் மோடி மேற்கொண்ட 2014, 2016, 2017, 2019 அமெரிக்கப் பயணங்களிலிருந்து இப்போதைய அரசுமுறைப் பயணம் வேறுபடுகிறது, முக்கியத்துவம் பெறுகிறது.
  • 2005-இல் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி நுழைவு அனுமதி மறுத்த அமெரிக்கா, இப்போது சிவப்புக் கம்பள அரசுமுறைப் பயணத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதுடன், இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பையும் வழங்கியிருப்பது, எந்த அளவுக்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்கா முக்கியத்துவம் தருகிறது என்பதன் வெளிப்பாடு.
  • பரஸ்பர அவநம்பிக்கையும், சந்தேகமும் நிறைந்த இந்திய - அமெரிக்க உறவில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவைத்தான் சாரும். அவர் கட்டமைத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும், தாராளமயமாக்கல் கொள்கைகளும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்த்தன. இந்தியாவை ஒரு முக்கியமான சந்தையாக அமெரிக்கா பார்க்கத் தொடங்கியது.
  • அதிபர் பில் கிளிண்டனின் இந்திய விஜயம் (2000), வாஜ்பாய் அரசின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சற்று தளர்த்த உதவியது. 2008-இல் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்ட அணு எரிசக்தி கூட்டுறவு ஒப்பந்தம்தான், இருநாட்டு உறவுக்குமான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.
  • அப்போது டாக்டர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த முயற்சி, இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் முழுமை பெற்றிருக்கிறது எனலாம். இந்த இடைவெளியில் அமெரிக்கா நான்கு அதிபர்களை சந்தித்துவிட்டது.
  • ஜோ பைடன் அதிபரான பிறகு, வெள்ளை மாளிகையின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது உலகத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னர் பிரான்ஸ், தென்கொரியா அதிபர்களுக்கு மட்டுமே அந்த கெளரவம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு அரசுமுறைப் பயண அழைப்பு வழங்கியது முதல், ஜூன் 22 வெள்ளை மாளிகை விருந்தில் கலந்துகொள்ள விழைபவர்களை சமாளிக்க முடியாமல் திணறுவதாக அதிபர் பைடனே தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு மோடியின் அரசுமுறைப் பயணம் அமெரிக்காவில் கவனம் ஈர்த்திருக்கிறது.
  • 191 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 15.66 லட்சம் கோடி) இந்திய - அமெரிக்க வர்த்தகத்தின் அளவு என்றால், இரு நாடுகளிலும் நிறுவனங்கள் செய்திருக்கும் முதலீடுகள் தலா 40 பில்லியன் டாலரிலும் (சுமார் ரூ. 3.27 லட்சம் கோடி) அதிகம். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 49 லட்சம் என்றால், 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள்.
  • இவையெல்லாம் மட்டுமல்ல, இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதற்கான காரணம், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியாவின் நட்புறவு அவசியம். இந்தியாவை அகற்றி நிறுத்திவிட்டு எந்தவொரு சர்வதேச பிரச்னையையும் உலகம் எதிர்கொள்ள முடியாது என்பதை அமெரிக்க நிர்வாகம் புரிந்து கொண்டிருக்கிறது.
  • சீனாவும் ரஷியாவும் கைகோக்கும் நிலையில், ஜனநாயக நாடான இந்தியாவும் அமெரிக்காவும் பழைய மனநிலையிலிருந்து வெளியே வந்து இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின்போது, அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியும், ராணுவப் பின்புலமும் உறுதிப்படுத்தப்பட்டதால்தான் சீனாவைத் துணிவுடன் நம்மால் எதிர்கொள்ள முடிந்தது. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், ரஷியா நடுநிலை வகிக்குமே தவிர, உதவ முன்வராது. அதனால், அமெரிக்க நட்புறவு என்பது இந்தியாவுக்கு தவிர்க்க முடியாததாகிறது.
  • 2008-இல் டாக்டர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டிய இந்திய - அமெரிக்க உறவுக்கான இருவழிப் பாதையை, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் மூலம் திறந்து வைக்கிறார்!

நன்றி: தினமணி (21  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories