- நெடுங்காலமாக ஒரே பாதையில் ஓடிவரும் நதி திடீரென தனது போக்கை மாற்றிக் கொள்ளும் சம்பவம் எப்போதாவது நிகழ்வதுண்டு. நதியின் பாதை மாறுவதன் பின்னணியில் இரண்டு காரணிகள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டு ‘நேசர்’ ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரையாக அண்மையில் வெளிவந்துள்ளது.
- இந்த ஆய்வின் துணை கொண்டு நதி எந்தப் பாதையில் திரும்பும் என முன்கூட்டியே கணித்துவிடலாம் என ப்ளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலையின் புவியியல் நிபுணர் டக்ளஸ் எட்மண்ட் தலைமையிலான ஆய்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- நதியின் போக்கு திடீர் என திசை மாற நிலநடுக்கம், ஆற்றின் குறுக்கே நீர்ப் போக்கு தடைபடுதல், திடீர் என நீர் அளவு கூடுதல் போன்றவையே முதன்மையான காரணங்கள். ஆனால், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எல்லா நேரமும் போக்குத் திசை மாறாது. சில ஆண்டுகள் வறட்சியாக இருக்கும்.
- அமைதியாக நதி ஓடும். சில ஆண்டுகளில் கூடுதல் மழை பொழியும், அப்போது நதி கரைபுரண்டு இரண்டு பக்கமும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும். இவை ஆற்றின் இயல்பு இயக்கம். அதுவே, “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்” என்கிற குறளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் வரத்து கூடினால் திசை மாற்றம் ஏற்படும்.
திடீர் திசை திருப்பம்:
- காலப்போக்கில் நதி அடித்து வரும் வண்டல் மண் படிந்து ஆற்றின் ஆழம் குறையும். இதன் தொடர்சியாக நதியின் நீர் மட்டம் வெள்ளப்பெருக்கு சமவெளியின் உயரத்தைவிடக் கூடுதலாக மிகை உயர்ச்சி அடையும். இந்தச் சூழலில் கூடுதல் நீர் வெள்ளப்பெருக்கு சமவெளியிலிருந்து கசிந்து புதிய தாழ் நிலங்களை நோக்கி உருண்டு ஓடும். அதன் தொடர்ச்சியாக நதி புதிய திசையில் செல்லும் என்பது ஒருசாராரின் கருத்து. வேறு சிலர் நதியின் பாதைக்கு அருகே நிலம் சரிந்து தற்போதைய நிலையைவிடச் செங்குத்தானதாக மாறும்போது புதிய பாதை உருவாகும் என்கிற கருதுகோளை முன்வைத்தனர்.
- இந்த இரண்டில் எது முதன்மையான தூண்டுதலாக அமைகிறது என ஆய்வு செய்ய 170 நதி போக்கு திடீர் மாற்றங்களைக் கூர்ந்து ஆய்வு செய்தனர். ஆற்றின் பிறப்பிடத்திலிருந்து கடலில் கலக்கும் பகுதிவரை எங்கே திடீர் திசை திருப்பம் ஏற்படுகிறது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. ஆற்றோட்டத்தின் இடையில் ஏற்படுவதைவிட ஆற்றின் முகத்துவாரங்கள் அல்லது மலை முகப்புகளுக்கு அருகேதான் மூன்று மடங்கு கூடுதலாக ஏற்படுவது தெரிய வந்தது.
- இதில் நுட்பத் தகவல் கொண்ட 58 மாற்றங்களை உற்றுநோக்கியபோது மலை முகடுகளுக்கு அருகே வண்டல் படிந்து ஆற்றின் வெள்ளம் மிகை உயர்ச்சி அடைவதன் தொடர்ச்சியாகவும், முகத்துவாரங்களில் புதிய சாய்வு நிலம் ஏற்படுவதாலும் திசை மாற்றம் ஏற்படுவதைக் கண்டனர்.
- குறிப்பிட்ட நிலப் பகுதியில் திசை மாற்றம் எங்கே நடைபெறும் என முன்கூட்டியே இனம் காணும் நோக்கத்துடன் ஆய்வில் கிடைத்த தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் கணினி மாதிரியை உருவாக்கினர். கடந்த காலத்தில் ஏற்பட்ட பத்து திசை மாற்றங்கள் நடைபெற்ற ஆறுகளின் தரவுகளைக் கணினி மாதிரியில் உள்ளீடு செய்து சோதனை செய்தபோது ஒவ்வொரு திசை மாற்றத்தையும் அல்காரிதம் சரியாகப் படம்பிடித்தது. இந்தக் கணித மாதிரி கொண்டு உலகளவில் ஆறுகளின் வடிகால் பகுதியில் ஆபத்துப் பகுதிகளை இனம் காண முடியும் என்கின்றனர் ஆய்வார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)