TNPSC Thervupettagam

நனவானது மண்டேலாவின் கனவு!

August 31 , 2020 1607 days 819 0
  • சோதனை காலத்திலும் சில சாதனைகள் நிகழத்தான் செய்கின்றன. உலகம் போலியோவிலிருந்து அநேகமாக விடுபட்டுவிட்ட மகிழ்ச்சியான செய்தியை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
  • 1988-இல் யுனிசெஃப், ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தொடங்கிய போலியோ பாதிப்புக்கு எதிரான போராட்டம் தனது இலக்கை அநேகமாக அடைந்துவிட்ட சாதனையை மனித இனம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது.
  • ஒருபுறம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று ஒட்டுமொத்த உலகத்தையும் தடுமாறச் செய்துகொண்டிருக்கும் நிலையில், இதேபோன்ற இன்னொரு தீநுண்மி ஏறத்தாழ முடிவுக்கு வந்திருக்கிறது.
  • ஆப்பிரிக்காவிலுள்ள 47 நாடுகளும் போலியோவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருக்கின்றன என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் கடந்தவார அறிவிப்பு, கொவைட் 19 தீநுண்மித் தொற்று சவாலை எதிர்கொள்ளும் துணிவைத் தந்திருக்கிறது.
  • ஆகஸ்ட் 20, 2020 அன்று ஆப்பிரிக்க கண்டம் போலியோவிலிருந்து முற்றிலுமாக விமோசனம் அடைந்திருக்கும் நேரத்தில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபா் நெல்சன் மண்டேலாவை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.
  • 30 ஆண்டுகளுக்கு முன்பு போலியோவை எட்டி உதைத்து அகற்றுவோம்என்கிற நெல்சன் மண்டேலாவின் அறைகூவல் இப்போது நனவாகியிருக்கிறது. போலியோவுக்கு எதிராக நெல்சன் மண்டேலா குரலெழுப்பியபோது ஆண்டுதோறும் ஆப்பிரிக்காவில் சுமார் 75,000 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு வந்தனா் என்பதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

முற்றிலுமாக விமோசனம்

  • ஆப்பிரிக்காவில் போலியோவை முற்றிலுமாக ஒழித்தது அசாதாரணமான சாதனை. இதற்காக சுகாதார ஊழியா்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. அடா்ந்த ஆப்பிரிக்க வனப்பகுதியில் நுழைந்து சொட்டு மருந்து கொடுக்கச் சென்ற பல தன்னார்வத் தொண்டா்களும், சுகாதாரப் பணியாளா்களும் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
  • பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய போலியோ பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆப்பிரிக்காவிலும் அந்த தீநுண்மிக்கு விடை கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ரோட்டரி சங்கம் மூன்றும் இணைந்து 1988-இல் போலியோவுக்கு எதிரான போரைத் தொடங்கியபோது உலக அளவில் 3.5 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் போலியோவால் பாதிக்கப்பட்டு வந்தனா்.
  • ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதாவது ஒரு வகையில், ஏதாவது ஒரு பகுதியில் போலியோ தீநுண்மி மனித இனத்தை அச்சுறுத்தி வந்தவண்ணம் இருந்திருக்கிறது. சா்வதேச அளவிலான பெருமுயற்சியும், அதிக அளவிலான நிதியாதாரமும் போலியோவை எதிர்கொள்ளத் தேவைப்பட்டன. ஏறத்தாழ 19 பில்லியன் டாலா் (சுமார் ரூ.1.39 லட்சம் கோடி) நிதியாதாரத்தை ரோட்டரி சங்கமும், யுனிசெஃப்பும், உலக சுகாதார நிறுவனமும் திரட்டி போலியோவுக்கு எதிரான முயற்சியில் களமிறங்கின.
  • வளா்ச்சி அடைந்த பல நாடுகளேகூட அப்போது போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தன. 1979-லேயே அமெரிக்கா போலியோவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தது.
  • ஆனால், ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் போலியோவிலிருந்து விமோசனம் அடைய 2002 வரை தேவைப்பட்டது. இந்தியாவும், கிழக்காசிய நாடுகளும் போலியோவுக்கு விடை தர 2014 வரை போராடின.
  • 2009-இல் உலகில் 60% போலியோ பாதிப்பு காணப்பட்ட நாடாக இந்தியா இருந்தது. கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் 2014-இல் நம்மால் முற்றிலுமாக போலியோவை ஒழிக்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • ஏனைய நாடுகளைவிட இந்தியா எதிர்கொண்ட போராட்டம்தான் மிகவும் கடுமையானது.
  • அண்டை நாடான பாகிஸ்தானில் போலியோ கட்டுப்படுத்தப்படாமல் இருந்ததுதான் அதற்குக் காரணம். இப்போதுவரை பாகிஸ்தான் முற்றிலுமாக போலியோ பாதிப்பிலிருந்து விடுபடவில்லை.
  • பாகிஸ்தானின் மத குருமார்கள் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கி இஸ்லாமிய இனப் பெருக்கத்தை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் தடுக்க நினைக்கின்றன என்றும், எய்ட்ஸ் நோயை பாகிஸ்தானில் பரப்புவதற்காக நடத்தப்படும் சதி என்றும் உருவாக்கிய வதந்திகளை மக்கள் நம்பியதால் போலியோ ஒழிப்பு முயற்சி எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
  • உலகில் இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரண்டு நாடுகளில் மட்டும்தான் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் இருக்கிறது. ஏனைய நாடுகளைப் போல இந்த இரு நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டால் விரைவிலேயே போலியோ இல்லாத உலகம் சாத்தியப்படும். 1980-இல் அம்மை நோய்க்கு விடைகொடுத்தது போல உலகம் போலியோவுக்கும் விடை கொடுத்துவிட முடியும்.
  • 1955-இல் ஜோனஸ் சால்க் என்கிற விஞ்ஞானி போலியோவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் தடுப்பூசி போட்ட ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சிறிது காலம் அது நிறுத்திவைக்கப்பட்டது. தொடா்ந்து மனித சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
  • இப்போது அந்தத் தடுப்பூசியின் உதவியால் உலகம் போலியோவிலிருந்து விடுபட்டிருக்கிறது.
  • அதேபோல கொவைட் 19 தீநுண்மிக்கும் விரைவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்; இந்தக் கொள்ளை நோயிலிருந்தும் உலகம் விடுபடும் என்கிற நம்பிக்கையை போலியோவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி ஏற்படுத்துகிறது!

நன்றி:  தினமணி (31-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories