நமது சமூக சிக்கல்களுக்கு பிராயச்சித்தம் உயர்கல்வியே!
- அடுத்த சில நாட்களில் நாட்டின் குடியரசு தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தியாவை ஜனநாயக நாடு எனவும், குடியரசு நாடு எனவும் அழைக்கிறோம். இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்று இதுவரை யோசித்ததுண்டா? மன்னர்களாலும் அந்நியர்களாலும் பல நூறு ஆண்டுகளாக ஆளப்பட்டு வந்தவர்கள் இந்திய மக்கள். இத்தகைய நாடும், நாட்டு மக்களும் அரசியல் விடுதலை அடைந்து தங்களை தாங்களே ஆளும் அதிகாரம் பெற்றபோது இந்தியா ஜனநாயக நாடாக உருவெடுத்தது.
- சுதந்திரம் அடைந்த இந்தியாவில் எந்த அடிப்படையில் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்வு செய்து மக்களாட்சியை நிலைநாட்டுவது? இதற்கு விடையாகத்தான் பல நாடுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக்கூறுகளையும் உலகின் தலைசிறந்த அரசியல் தத்துவங்களையும் அகமும் புறமுமாகக் கற்றறிந்த மேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர், என்.கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கே.எம்.முன்ஷி, சையத் முகமது சாதுல்லா, என்.மாதவ்ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் அடங்கிய குழுவால் இந்தியாவுக்கான அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.
மக்களாகிய நாம்:
- அரசமைப்பு சட்டம் 1950-ல் ஜன.26-ம் தேதி நடைமுறைக்கு வந்ததும் இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது. ஆகவேதான், “இந்திய மக்களாகிய நாம், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து இந்தியாவை ஓர் இறையாண்மைமிக்க சமத்துவ சமயசார்பற்ற ஜனநாயகக் குடியரசாகக் கட்டமைத்திட...” என்கிற சொற்களோடு இந்திய அரசமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
- வேறெந்த நாட்டின் அரசமைப்பும், “மக்களாகிய நாம்” என்கிற பிரகடனத்துடன் ஆரம்பமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், இந்திய மக்களின் விடுதலைக்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டது இந்திய அரசமைப்பு அமல்படுத்தப்பட்ட நாளில்தான் என்றே சொல்ல வேண்டும்.
- நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு கருத்துருக்கள் இந்திய அரசமைப்பின் தூண்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய உயரிய மதிப்பீடுகளை இந்திய மக்கள் வரித்துக்கொள்ள சமூக சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு மக்களுக்குக் கல்வி அத்தியாவசியமாகிறது.
- இந்திய மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்து, தேசத்தையும் அரசமைப்பையும் சேர்த்துப் பாதுகாத்திடக் கல்வி எனும் திறவுகோல் அவர்களது கைவசப்பட வேண்டும் என்பதை டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இங்கு மக்கள் என்கிற சொல் சமூக அடுக்கில் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களைக் குறிப்பதாகவே டாக்டர் அம்பேத்கர் பிரயோகித்தார்.
தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்:
- “இந்து சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வந்தவர் என்பதால் கல்வியின் மதிப்பை நான் நன்கறிவேன். கீழ்நிலையில் இருப்பவர்களின் கைகளைத் தூக்கிவிடுவது அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென பெரும் பிழையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
- இந்தியாவில் அடித்தட்டில் இருப்பவர்களை ஆதரிப்பது அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் அளித்து மேட்டுக்குடியினருக்குச் சேவை செய்திட அவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு அல்ல. அடித்தட்டு மக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி பிறருக்கு அவர்களை அடிமையாக்கும் தாழ்வுமனப்பான்மையை அவர்களிடத்திலிருந்து அகற்றிட வேண்டும்.
- அவர்களது வாழ்க்கை அவர்களுக்கும் நாட்டுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிற விழிப்புநிலையை ஏற்படுத்திட அவர்களுக்கு உயர்கல்வி அவசியமாகிறது. தற்போதுவரை நிலைபெற்றிருக்கக்கூடிய சமூக கட்டமைப்பானது இத்தகு உரிமையை அம்மக்களிடமிருந்து ஈவிரக்கமின்றி கொள்ளையடித்து வைத்திருக்கிறது.
- நமது சமூக சிக்கல்களுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டுமானால் என்னைப் பொருத்தவரை உயர்கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே நமது நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரே வழி” என்று டாக்டர் அம்பேத்கர் முழங்கினார்.
- இதன் பொருட்டு, இந்திய அரசமைப்பின் 45வது பிரிவின்கீழ் 6 முதல் 14 வயது வரையிலான இந்தியக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி வழங்கிட வழிகாட்டுதல் கொள்கை இயற்றப்பட்டது. சொல்லப்போனால், அரசமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் இதனை நிறைவேற்றிட அரசமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 60 ஆண்டுகளுக்கு பிறகே கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- இந்நிலையில், 100 சதவீதம் அடிப்படை கல்வி என்கிற இலக்கை எட்டவே இன்னும் நாடு முயன்று கொண்டிருக்கிறது. உண்மையில், அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பதோடு இந்திய அரசமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு முடிந்துவிடவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், “கல்வி உரிமை மறுக்கப்படுவது என்பது முழு அநீதிக்கான சூழலை ஏற்படுத்துவதற்கு ஒப்பாகும்” மாறாக, “நமது சமூக சிக்கல்களுக்கு பிராயச்சித்தம் உயர்கல்வியே!”.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2025)