TNPSC Thervupettagam

நமது நகரங்கள் உறங்கா நகரங்களாகட்டும்!

June 11 , 2019 2041 days 1179 0
  • தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுத்துத் தமிழக அரசு அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்புக்குரிய விஷயம். கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், வங்கிகள், அலுவலகங்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் திறந்திருப்பதற்கு 2016-ல் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவந்தது. மாநிலங்கள் இந்தச் சட்டத்தைத் தங்கள் தேவைகளுக்கேற்பத் திருத்தி அமைத்துக்கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதியை வழங்கியது. தமிழ்நாடும் தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது.
வேலை நேரம்
  • இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை நுழைந்த பிறகு வேலை, வேலை நேரம் போன்றவற்றின் வரையறைகளை எல்லாம் அது மாற்றி அமைத்திருக்கிறது. எல்லா பெரிய நகரங்களும் பணி நேரத்தைப் பொறுத்தவரை உறங்கா நகரங்களாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. நள்ளிரவில் வேலைக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலையிலும், மதியம் வேலைக்குச் சென்றுவிட்டு நள்ளிரவிலும் வீடு திரும்புவோர் ஏராளம். இவர்களில் கணிசமானோர் திருமணமாகாத இளைஞர்கள். இரவு 11 மணி வாக்கில் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்ததால், நள்ளிரவு நேரத்தில் உணவு, சிற்றுண்டி, மருந்துகளுக்காகப் பலரும் அல்லாடிக்கொண்டிருந்தார்கள். கூடவே, வேலை முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகிவிடும்போது பலரும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்க முடிவதில்லை.
  • விடுமுறையின்போது மட்டுமே அவர்களால் கடைக்குச் சென்று வேண்டிய பொருட்களை வாங்க முடிகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவு அசாதாரணமான நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்புபவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும்.
  • இந்த உத்தரவின் உபவிளைவாக வேலைவாய்ப்புகள் கூடும் என்றும் எதிர்பார்க்கலாம். 24 மணி நேரமும் திறந்திருக்கக்கூடிய கடைகளில் கூடுதல் நேரத்துக்கேற்ப கூடுதல் ஊழியர்களை நியமித்தாக வேண்டும் என்பதால், பல குடும்பங்களின் பொருளாதாரத்துக்கு இந்த அறிவிப்பு நன்மை தரும்.
அம்சங்கள்
  • பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும் கவலைப்பட வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன. இதைப் போல முன்பு ஒருமுறை அறிவிப்பு வந்தபோது, காவல் துறையிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற காவல் துறையின் கவலை ஏற்புடையதுதான். இதை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.
  • அது மட்டுமல்ல; கூடுதல் நேரத்துக்கேற்பக் கடைகள், நவீனப் பேரங்காடிகள் போன்றவை பணியாளர்களைச் சுரண்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் அரசு கண்காணிக்க வேண்டும். அரசின் இந்த அறிவிப்பு உண்மையில் ஒரு வரப்பிரசாதம். பெருநகரங்களில் ஒருவர் எந்த நேரத்திலும் எதையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைக்கு இது நகர்த்திச் செல்லும். இதை ஆக்கபூர்வமாகப் பின்பற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories