TNPSC Thervupettagam

நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு

January 11 , 2024 313 days 273 0
  • பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப் பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நீதித் துறை மீதான நம்பிக்கையை வலுவடையச் செய்திருக்கிறது. 2022இல் குஜராத் கலவரத்தின்போது, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்; அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை 2004இல் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
  • 2008இல் இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆகஸ்ட் 2022இல் இந்த 11 பேரையும் குஜராத் அரசு தனது தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது. இதை எதிர்த்து பில்கிஸ் பானுவும் வேறு சிலரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் 2024 ஜனவரி 8 அன்று தீர்ப்பு அளிக்கப் பட்டது.
  • 11 குற்றவாளிகளையும் விடுவித்தது செல்லாது என்று கூறிய நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் பூயான் அமர்வு, அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மும்பை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருப்பதால் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மகாராஷ்டிர அரசுக்குத்தான் உள்ளது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
  • இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா, குஜராத் அரசின் 1992ஆம் ஆண்டின் தண்டனைக் குறைப்புக் கொள்கையின் அடிப்படையில் தன்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கில் 2022 மே 13இல் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் குஜராத் அரசு ஷாவின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. அதைப் பயன்படுத்தியே குஜராத் அரசு 11 குற்றவாளிகளையும் விடுவித்தது.
  • ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் சில உண்மைகளை மறைத்ததன் மூலமாகவே ஷா தன்னை விடுவிப்பதற்கான தீர்ப்பைப் பெற்றிருக்கிறார் என்றும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக குஜராத் அரசு செயல்பட்டிருப்பதாகவும் புதிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டத்தின் ஆட்சி எந்நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தனிநபர் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டே தழைக்க முடியும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
  • பில்கிஸ் பானுவுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் நியாயம் வழங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆயுள் சிறைக் கைதிகளின் தண்டனையைக் குறைப்பதற்கான அதிகாரத்தை அரசுகள் மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.
  • குற்றத்தின் தன்மை, குற்றவாளியை விடுவிப்பதால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், சமூகத்துக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து, விடுவிக்கப்படும் குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அரசியல் லாப நோக்கங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories