TNPSC Thervupettagam

நம்பிக்கை அளித்த நட்சத்திரப் பெண்கள்

December 31 , 2023 379 days 324 0
  • தடைகளைத் தகர்த்து முன்னோக்கிச் செல்லும் பெண்களே மற்றவர்களுக்கு நம்பிக்கை தருகிற கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கிறார்கள். சாதிப்பதற்கான பாதையையும் அந்த முன்னோடிப் பெண்களே அடையாளம்காட்டுகிறார்கள். பல்வேறு துறைகளில் சாதித்ததோடு பெண்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து 2023இல் நம்பிக்கை அளித்த நட்சத்திரப் பெண்களில் சிலர் இவர்கள்:

விண்ணைத் தாண்டி

  • சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய வரலாற்று வெற்றியில் எம். வனிதா, கே. கல்பனா, ரிது கரிதால், வளர்மதி, டெஸ்ஸி தாமஸ், மௌமிதா தத்தா, டி.கே.அனுராதா, வி.ஆர்.லலிதாம்பிகா உள்ளிட்ட 54 வீராங்கனைகளின் பங்களிப்பு இருக்கிறது. எம். வனிதா, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி.
  • சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதைச் சந்திரயான் திட்டம் 2இல் இவர் வடிவமைத்த கேமராதான் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியது. ஆந்திரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே. கல்பனா, சந்திரயான் 3 திட்டத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றினார். சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜி செயல்பட்டுவருகிறார்.

நீதிக்கான ‘மல்யுத்தம்’  

  • இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் டெல்லி காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தனர். தங்கள் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
  • இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷண் நீக்கப்பட்டு அதன் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் நெருங்கிய நண்பர் சஞ்சய் குமார் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத்தந்த முதல் மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக், தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மைல்கல்

  • செவித்திறன் அற்ற வழக்கறிஞர் சாரா, சைகை மொழி நிபுணர் உதவியோடு வழக்காடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் செப்டம்பர் 22 அன்று நிகழ்ந்தது. வழக்கறிஞர் சௌதாமினியைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் செவித்திறன் குறைபாடு கொண்ட இரண்டாம் வழக்கறிஞராக சாரா அறியப்படுகிறார். உச்ச நீதிமன்ற நடைமுறைகளை அனைவரும் அணுகும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனத் தலைமை நீதிபதி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது செவித்திறன் குறைபாடு கொண்ட சாராவுக்கு வழக்காட வாய்ப்பளித்து, அதை நடைமுறைப்படுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

வெற்றி விளையாட்டு

  • செஸ் சாம்பியனான வைஷாலி, கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியப் பெண் என்கிற சாதனையைப் படைத்தார். இவருடைய தம்பி ஏற்கெனவே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றிருக்கும் நிலையில் ஒரே குடும்பத்தில் உடன்பிறப்புகள் இருவர் கிராண்ட்மாஸ்டர் ஆகியிருப்பது செஸ் வரலாற்றில் முதல் முறை. வைஷாலியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அவர் 2023ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சீனாவில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை 39 ஆண்டுகள் கழித்து வித்யா சமன் செய்தார்.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாகத் தங்கப் பதக்கம் வென்றது.
  • இளம் வீராங்கனைகள் டிடாஸ் சாது, ஷஃபாலி ஆகியோரும் மூத்த வீராங்கனைகள் ஜெமிமா, ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சிறப்பாக விளையாடினர்.
  • குண்டு எறிதலில் கிரண் பலியான் வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிர் குண்டு எறிதல் போட்டியில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த பதக்கம் இது.

ஆஸ்கர் அங்கீகாரம்

  • யானைகளைப் பராமரிக்கும் பொம்மன் - பெள்ளி இணையர் குறித்ததி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இப்படத்தை உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வெஸ் இயக்க, குனீத் மோங்கா தயாரித்தார்.

புதிய வரலாறு

  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்கீழ் ஸ்ரீரங்கம் பயிற்சிப் பள்ளியில் மூன்று பெண்கள் பயிற்சி முடித்துச் சான்றிதழ் பெற்று வரலாறு படைத்துள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றிவந்த நிலையை மாற்றியது,
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்திட்டம். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பாலினச் சமத்துவத்தையும் வலியுறுத்துவதாக அமைந்தது. பயிற்சி முடித்துச் சான்றிதழ் பெற்றிருக்கும் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூவரும் ஓராண்டுக்குக் கோயில்களில் களப்பணியாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories