- "அனைத்து இன மக்களும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். இலங்கையில் இனி இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை' என கடந்த வியாழக்கிழமை (நவ.21) நடைபெற்ற முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக பேசியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த செப்டம்பர் 21-இல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கையில் 70 ஆண்டுகளாக கோலோச்சி வந்த ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச, சஜித் பிரேமதாச ஆகியோரது கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி அநுரகுமார வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
- கரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியையடுத்து, இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபட்ச ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இந்தப் போராட்டத்தில் அநுரகுமாரவின் ஜனதா விமுக்தி பெரமுன கட்சி உள்பட 21 குழுக்கள் அடங்கிய என்பிபி முக்கிய பங்கு வகித்தது.
- இந்தப் போராட்டத்தின் பலனாக, 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெறும் 4.45 லட்சம் வாக்குகள் (3.84%) மட்டுமே பெற்ற அநுரகுமார 2024 தேர்தலில் 57.40 லட்சம் வாக்குகள் (42.31%) பெற்று அதிபரானார். அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச 42 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், அநுரகுமார 15 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.
- இந்தப் பின்னணியில், கடந்த நவ. 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 இடங்களில் 159 இடங்களை என்பிபி கூட்டணி கைப்பற்றி பெரும் சாதனை படைத்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகமான பின்னர், மூன்றில் இரண்டு பங்கு இடங்களை ஒரு கூட்டணி கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். மகிந்த ராஜபட்சவின் கட்சி 2010-இல் நடைபெற்ற தேர்தலில் 144 இடங்களைத்தான் வென்றது. அதைவிட அதிக இடங்களில் என்பிபி கூட்டணி இப்போது வென்றுள்ளது.
- இந்தத் தேர்தலில் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்கூட என்பிபி கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 28 இடங்களில் 12 இடங்களை என்பிபி கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. மட்டக்களப்பு தவிர ஏனைய எல்லா மாவட்டங்களிலும் என்பிபி முத்திரை பதித்திருக்கிறது.
- யாழ்ப்பாணத்தில் உள்ள 6 இடங்களில் 3-இல் என்பிபி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு தமிழர்களின் கட்சி அல்லாத தேசிய கட்சி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
- மலையகத் தமிழர்களான கலைச்செல்வி, அம்பிகா சாமுவேல் ஆகியோர் என்பிபி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மலையகத் தமிழ்ப் பெண்கள் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
- முஸ்லிம்கள் அதிகம் வாழும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் என்பிபி-க்கு மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்துள்ளனர்.
- இலங்கை தமிழரசுக் கட்சி தனியாகப் போட்டியிட்டதும், வடக்கு மற்றும் கிழக்கில் 28 தொகுதிகளில் 2,000 பேர் போட்டியிட்டதும் தமிழர்களின் கட்சிகள் தோற்றதற்கும் தேசிய கட்சி வெற்றி பெற்றதற்கும் காரணமாக கூறப்படுகிறது.
- எனினும், அதிபர் தேர்தலில் தமிழர் பகுதிகளில் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இரண்டு மாதங்களுக்குள் அதிபர் அநுரகுமார தமிழர்கள் மத்தியில் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
- யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான பசையூரில் கடந்த நவ. 10-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிபர் அநுரகுமார பங்கேற்றார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் பொதுக்கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
- அதில் அநுரகுமார பேசுகையில், "தொல்லியல் துறை, வனத் துறையால் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்ட நிலங்கள் தமிழர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும், மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்படும், 30 ஆண்டுகால போரால் பேரழிவுதான் ஏற்பட்டது, அதுபோன்ற போர் மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம், பல்வேறு இனங்களுக்கு இடையே நம்பிக்கையையும் இணக்கத்தையும் ஏற்படுத்துவோம், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிப்போம், இலங்கை தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்திய (தமிழக) மீனவர்கள் நமது எல்லையில் மீன் பிடிப்பதை அனுமதிக்கமாட்டோம்' என்று வாக்குறுதிகள் அளித்தது, இலங்கைத் தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவருகிறது.
- தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை அநுரகுமாரவின் ஜனதா விமுக்தி பெரமுன கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்தது. இலங்கை அரசுக்கு எதிராக 1971 மற்றும் 1987-இல் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட அந்தக் கட்சி 1994-இல் ஆயுதத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது வரலாறு.
- அதேபோன்று, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கடந்த காலங்களில் கொண்டிருந்தாலும், அதை மாற்றிக் கொண்டு தமிழர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்துவரும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களது வாழ்வில் ஒளிபிறக்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நன்றி: தினமணி (27 – 11 – 2024)