TNPSC Thervupettagam

நம் அருகே இருக்கும் இயற்கைத் தலங்கள்

December 23 , 2023 209 days 150 0
  • சுற்றுலா என்றவுடன் நாம் வசிக்கும் இடத்தைவிட்டு வெகு தொலைவில் அமைந்திருக்கும் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதும், அப்பகுதியைக் கண்டுகளித்துத் திரும்புவதும்தான் என்கிற பொதுவான எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆனால், எத்தனை பேர் நாம் வாழும் இடங்களுக்கு மிக அருகில் உள்ள அல்லது நம்மைச் சுற்றியுள்ள இடங்களை முழுமையாகக் கண்டு ரசித்து வியந்திருக்கிறோம்?! சமவெளியில் உள்ளவர்கள் மலைப்பாங்கான இடங்களைக் காண விரும்பிச் செல்வதும், அங்குள்ளவர்கள் சமவெளியின் கடலையும் அலைகளையும் கண்டு மலைப்பதும் இயல்பாக இருக்கிறது. ஆனால், இதெல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்கிற கதைதான். தொலைவைக் கடந்துசெல்லுதல் என்பதில் உள்ள கடினங்கள் வாழ்க்கையில் புதிய பகுதிகளைச் சென்று காணவேண்டும் என்கிற கனவைப் பலருக்கும் பொய்த்துப்போக வைத்துவிடுகிறது. அதிகத் தொலைவும் அதைக் கடந்து சென்று வருவதற்கான செலவினங்களும் மனத்தின் ஆசைகளுக்கு வேலியமைத்துவிடுகின்றன.

உயிர்பெறும் நீர்நிலைகள்

  • முதலில் நாம் வாழ்கின்ற இடத்தில் உள்ள இயற்கையை விரும்பவும் நேசிக்கவும் பழகிக்கொள்வதே அறிவார்ந்த தன்மை. என்றைக்குமே நாம் வாழும் பகுதிகள்தாம் நமக்கு நிரந்தரமானவை. தொலைதூர இடங்களை விட்டுத் திரும்பும்போது வெறும் நினைவுகளை மட்டுமே நாம் கொண்டுவந்தாக வேண்டும். அதே நேரம் நாம் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை முழுமையாக அனுபவித்துக் காண முடியும். அவற்றை ஆழமாக ரசித்து உணர முடியும். தற்சமயம் மழைக்காலத்தில் ஏரிகளும் குளங்களும் நீர் நிரம்பி வருகின்றன. மரஞ்செடி கொடிகளெல்லாம் பசுமையுடுத்தி அழகாகக் காட்சியளிக்கின்றன. குளிர்ந்த தட்பவெப்ப நிலை மனத்திற்கும் இதமளிக்கிறது. இச்சூழலில் நாம் வாழும் இடங்களுக்கு அருகிலுள்ள ஏரிகள், குளங்கள், வயற்காடுகள், தோட்டங்கள், கிணறுகள்... என்று எத்தனையெத்தனை இயற்கை எழில் மிகுந்த பகுதிகள் பரந்து விரிந்து புவியைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக் கின்றன! ஆனால், அவையெல்லாம் நமது கண்ணெதிரே கண்டுகொள்ளப்படாமல் ரசிக்க ஆளில்லாமல் கிடக்கின்றன.
  • ஆனால், அத்தகைய நீர்நிலைகளுக்காகவே ஆண்டின் பிறப் பருவநிலைகளைக் கடந்து காத்துக் கிடக்கும் நீர்விரும்பிகளான பறப்பன, ஊர்வன, நடப்பன என்று பல வகை உயிரினங்களும் தங்களுக்கான இயல்பினை இழக்காமல் புது நீர் பெருக்கில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொரு நீர்நிலையையும் வந்தடையும் எண்ணற்ற பறவைகள், பூச்சிகள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சி வகைகள் ஏராளம். மனித இனத்தில் மட்டும்தான் குழந்தைகளும் இளைஞர்களும் இணையதளங்களில் மூழ்கி இயற்கையிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறோம். அவர்களை இயற்கையை நோக்கித் திருப்பும் பழக்கத்தை ஏற்படுத்துவதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் முனைப்பாகச் செயல்பட்டாகவேண்டும். முதலில் குடும்பங்களிலிருந்து இது தொடங்கப் பட வேண்டும்.

இயற்கையை அவதானிப்போம்

  • வார இறுதி நாள்களில் திட்டமிட்டு சில மணி நேரத்தை இதற்குச் செலவிட்டாலே போதுமானது. நேரத்தையும் பணத்தையும் அதிகளவில் செலவு செய்து, எங்கோ இருக்கும் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று, உண்ணாமல் கொள்ளாமல் அரக்கப்பறக்கச் சென்று வருவதால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, இத்தகைய சிறு தொலைவுப் பயணங்கள் மனத்திற்குப் பெருமகிழ்ச்சியை அளிப்பதோடு இயற்கையின் மீது இயல்பாக இருக்கவேண்டிய பற்றையும் அறிவையும் அதிகரிக்கும். குடும்பமாகவும் நட்புகளுடனும் செல்வதால் உறவுகளும் பலப்படும்; கைபேசிகளுக்கு அடிமையாகும் போக்கு வெகுவாகக் குறையத் தொடங்கும். எங்கோ, யாரோ எடுத்த மிகைப்படுத்தப்பட்டப் படங்களுக்கு விருப்பக்குறிகள் இடுவதற்காக விரயமாகும் நேரத்தை, நேரடியாக நாம் சென்று பார்ப்பதால் மிச்சப்படுத்தி அறிவை விசாலப்படுத்தலாம். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பறவைகள், பூச்சிகள், தாவரங்களை அடையாளம் காணவும், குறித்து வைக்கவும் முயலலாம். எந்த நாளில், எந்தப் பருவத்தில், எந்த நிலையில் அவற்றைப் பார்த்தோம் என்பதையும் குறித்துவைக்கலாம்.

விவசாயத்தை நெருங்குவோம்

  • பொதுவாக பெருநகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்துமே கிராமப்புறங்களாகவோ அவற்றோடு இணைந்த பகுதிகளாகவோதான் இருக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறையாவது பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள இடங்களுக்கு மாணாக்கர்களை அழைத்துச் செல்லலாம். முடிந்தவரை இதைச்சாத்தியப்படுத்த முயல வேண்டும். விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்றைய பாடப்புத்தகங்களில் தேர்விற்காகப் படித்து எழுதினாலும், நேரடியாக அந்த இடங்களைக் காணும்போதுதான் மாணவப் பருவத்தினரின் சிந்தனைகளில் உண்மையான தாக்கம் ஏற்படும். விவசாயப் பணிகளின்மீதும் நாட்டம் ஏற்படும். தங்களது லட்சியத் தேடல்களுள் விவசாயம் எனும் முதன்மை பணியும் இடம்பெற வழிவகுக்கும்.

காணாமல் போன அடையாளங்கள்

  • பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை மழைக் காலத்தில் ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டால் துள்ளிக் குதித்து நீச்சலடித்து விளையாடும் சிறுவர் பட்டாளங்களின் சத்தம் சுற்றுவட்டாரத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு கரையிலிருந்து மறுக்கரையை நீந்தியே கடக்கும் இளைஞர்கள் கூட்டம், கதைப் பேசிப்பேசி துணித்துவைக்கும் பெண்கள், ஆடுமாடுகளைக் குளிப்பாட்டும் சத்தம் ஒருபுறம்... எனக் குளத்துக் கரைகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆற்றில் பெருவெள்ளம் வருகிறதென்றால் ஊரே திரண்டு ஆற்றின் இரண்டு கரைகளிலும் நின்று குதூகலத்தோடு வேடிக்கைப் பார்த்து மகிழ்வர். விவசாயப் பெருமக்கள் அந்த ஆண்டின் விளைச்சல் நிலைமையை வெள்ளப் பெருக்கை வைத்தே கணித்து மகிழ்வர். ஊருக்கு நடுவில் செல்லும் ஆற்று வெள்ளத்தால் அவ்வூர் இரண்டாகிக் கிடக்கும்.
  • ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்ல பெருங்கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு தற்காலிகப் பாலம் அமைக்க முயலுவர். பள்ளிக்கூடங்களின் அமைவிடம் ஆற்றின் ஒருபக்கம் அமைந் திருந்தால், அதன் மறுபக்கத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இராது. ஆற்றுநீர் வற்றும்வரை அவர்களுக்குத் தொடர் விடுமுறைதான். ஆனால், இன்றைய நாள்களில் அத்தகைய நீர்நிலைகளையும் இயற்கையின் எழிலையும் நேரில் பார்க்கவும் ரசிக்கவும் மனமின்றி சமூக ஊடகங்களின் செயற்கைக்குள் மூழ்கி கிடக்கும் இளையத் தலைமுறையினரின் மனோபாவம் சுற்றுச்சூழல் புரிதலுக்கும் பாதுகாப்புக்கும் உலைவைக்கக்கூடியது என்பதை நினைவில் கொண்டாக வேண்டும். இந்நிலையை மாற்றி இயற்கையின் மீது பற்றுக்கொள்ளச் செய்ய வேண்டுமானால் நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை சிறுவயது முதலே உற்றுக் கவனிக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தியாக வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12– 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories