TNPSC Thervupettagam

நம் காடுகள் யாருக்கானவை?

October 1 , 2024 98 days 187 0

நம் காடுகள் யாருக்கானவை?

  • சமீபத்தில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஓர் அறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்​பி​யுள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 54 புலி சரணால​யங்​களைக் கொண்ட 19 மாநில அரசுகளுக்கு அனுப்​பப்​பட்​டிருக்கும் இந்தக் கடிதத்​தில், ‘புலிகள் சரணாலயப் பகுதி​களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்​சியைத் துரிதப்​படுத்த வேண்டும்’ என அறிவுறுத்​தப்​பட்​டுள்ளது. சுமார் 591 வன கிராமங்​களில் வாழும் 64,801 குடும்​பங்​களின் வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாக்கி​யுள்ளது, ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல்.
  • அடிப்​படை​யில், இது வன உரிமைச் சட்டம் 2006, வனவிலங்​குகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது என்று வல்லுநர்கள் அழுத்​த​மாகத் தெரிவிக்​கிறார்கள். சமீபத்தில் ஈரோடு மாவட்டம், சத்தி​யமங்​கலத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கலந்தாலோ​சனைக் கூட்டத்தில் தமிழ்​நாட்டில் உள்ள புலிகள் சரணாலயப் பகுதிகளான தாளவாடி, ஆசனூர், கடம்பூர், ஆனைமலை, முதுமலை உள்ளிட்ட பகுதி​களி​லிருந்து பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்து​களைப் பகிர்ந்​து​கொண்​டார்கள்.
  • “நாங்கள் தொடர்ந்து அந்த வனப் பகுதியில் வாழ்வதற்கே விரும்​பு​கிறோம், எந்தச் சூழ்நிலை​யிலும் நாங்கள் வெளியேறத் தயாராக இல்லை...” என்கிற அவர்களின் உறுதியான நிலைப்​பாட்டைக் கேட்ட​போது, மக்களின் விருப்​பத்​துக்கும் அரசின் அணுகு​முறைக்கும் உள்ள வித்தி​யாசம் பேரதிர்ச்சி தருவதாக இருக்​கிறது.

நடைமுறைச் சிக்கல்கள்:

  • 2006ஆம் ஆண்டு கொண்டு​வரப்பட்ட வன உரிமைச் சட்டம், வனப் பகுதியில் ஒரு நிலத்தினை வேறு பயன்பாட்டுக்கு மாற்று​வதற்கு முன் சம்பந்​தப்பட்ட கிராம சபையின், அதாவது வன உரிமைச் சட்டத்தின் மூலம் அமைக்​கப்​படும் கிராம சபையின் ஒப்பு​தலைக் கண்டிப்​பாகப் பெற வேண்டும் என்கிற அளவுக்கு வலுவாக இருக்​கிறது.
  • ஆனால், காலம் காலமாகச் சட்டங்கள் சொல்வது ஒன்றாக​வும், நம் பொதுநிர்​வாகம் அதனைச் செயல்​படுத்தும் முறை வேறொன்​றாகவும் இருப்பது இந்தியா​வுக்குப் புதிது அல்ல. வன உரிமைச் சட்டமும் அதற்கு விதிவிலக்​கல்ல. வனங்களில் இயல்பாக வாழ்ந்​து​கொண்​டிருக்கும் பழங்குடி மக்களுக்கு இந்தச் சட்டத்தின் சாராம்​சத்தை எடுத்​துச்​சொல்வது சவாலாகவே இருக்கிறது.

மக்களையும் உள்ளடக்​கியதுதான் வனம்:

  • பொதுவாகச் சமவெளி​களிலும் நகரங்​களிலும் வாழ்பவர்​களுக்குக் காடு என்பது விலங்​குகள் மட்டுமே வாழும் ஒரு பகுதி என்கிற தட்டையான புரிதல் இருப்​பதைப் பார்க்க முடிகிறது. வளர்ப்புப் பிராணி​களோடு மட்டுமே தொடர்​புடைய​வர்​களுக்குக் காட்டு வாழ்வை, அதன் சூழலை முழுமை​யாகப் புரிந்​து​கொள்வது எப்போதும் சவாலாகவே இருக்​கிறது.
  • சமவெளிப் பகுதி​களில் வாழும் மக்களின் இந்தக் குறுகிய புரிதலோடு காட்டு வாழ்க்கை முறையை அணுகுவது தவறான முடிவுகளை நோக்கியே இட்டுச்​செல்​லும். அப்படித்தான் பல வேளைகளில் அரசின் அணுகு​முறை​யும், நீதிமன்​றத்தின் சில உத்தர​வு​களும் பூர்வகுடி மக்களுக்கு எதிராக இருப்பதாக வல்லுநர்கள் விமர்​சிக்​கிறார்கள். தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மேற்கண்ட அறிவிப்பும் அந்த வகையில் விமர்​சன​மாகவே பார்க்​கப்​படு​கிறது.
  • காடு என்பது - வரலாற்று ரீதியாக​வும், ஆராய்ச்சி ரீதியாகவும் - விலங்​குகள் உள்ளிட்ட பல்லு​யிரோடு அங்கு தலைமுறை தலைமுறையாக வாழும் பூர்வகுடிகளையும் உள்ளடக்​கியதே. அந்தப் புரிதலின் அடிப்​படையில் கொண்டு​வரப்பட்ட சட்டம்தான் வன உரிமைச் சட்டம் 2006. உலகமய​மாக்​கப்பட்ட பொருளா​தாரச் சூழலில் காடுகள் பலரின் கழுகுப் பார்வை​களில் படுவதும் அதன் இயற்கை ஆதாரங்கள் பாதிக்​கப்​படு​வதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்​கிறது.

ஒடிஷா பழங்குடிகள் நடத்திய பாடம்:

  • ஒடிஷா மாநிலம் நியமகிரி மலையை அப்பகுதி மக்கள் தங்களின் தெய்வ​மாகவே கருதுகிறார்கள். தமிழ்​நாட்டில் உள்ள புனித தோமையர் மலை, திருவண்ணாமலை போன்ற பல மலைகள் ஆன்மிகத் தலங்களாகப் பார்க்​கப்​படும் நிலையில், அதற்குச் சற்றும் குறைவில்லாத பழங்குடி மக்களின் தெய்வ​மாகப் பார்க்​கப்படும் மலைதான் நியமகிரி மலை.
  • பழங்குடிகளுக்கு வேண்டு​மானால், அது கடவுளாகத் தெரிந்​திருக்​கலாம். ஆனால், வேதாந்தா நிறுவனத்​துக்கு, அந்த மலைக்கு உள்ளே இருந்த பாக்சைட்தான் தெரிந்தது. பாக்சைட்டை எடுப்​ப​தற்காக மத்திய அரசிட​மிருந்​தும், ஒடிஷா அரசிட​மிருந்தும் ஒப்பு​தலைப் பெற்று மலையை வெட்டத் தொடங்​கியது அந்நிறு​வனம்.
  • அதனைத் தடுத்து நிறுத்த முயன்ற பழங்குடி மக்கள் விரட்​டியடிக்​கப்​பட்​டார்கள். தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த மலை கண்ணுக்கு முன்னே வெட்டப்​படு​வதைப் பொறுக்க முடியாமல், போராட்​டத்தைத் தீவிரப்​படுத்​தினார்கள் பழங்குடிக் கிராம மக்கள். ஒரு கட்டத்தில் வன உரிமைச் சட்டம், அதன் கிராமசபை அதிகாரங்​களைப் பற்றி அவர்கள் அறிந்​து​கொண்டனர்.
  • காட்டுப் பகுதியில் உள்ள நிலங்கள் வேறு ஒரு பயன்பாட்டுக்கு மாற்றப்​படு​வதற்கு முன்பு, கிராமசபையின் ஒப்பு​தலைக் கட்டாயம் பெற வேண்டும் எனத் தெளிவாகச் சொல்கிறது வன உரிமைச் சட்டம். அதன்படி மலையைச் சுற்றி​யிருந்த அனைத்துக் கிராமங்​களிலும் கிராமசபைகள் கூட்டப்​பட்டு, ‘நியமகிரி மலை முறையாகப் பாதுகாக்​கப்பட வேண்டும், வேறு ஒரு பயன்பாட்டுக்கு அதை எடுக்கக் கூடாது. நிச்சயமாக பாக்சைட் ஆலைக்கு அனுமதி இல்லை’ என ஒருமன​தாகத் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டது. உச்ச நீதிமன்றம் சென்றது வழக்கு. வேதாந்தாவை வெளியேற்றியது நீதிமன்றம்.
  • இடுப்பில் அரைத் துண்டோடு போராடிய பழங்குடி மக்கள், முக்கியப் பன்னாட்டு நிறுவனமான வேதாந்​தாவைச் சட்டத்தின் துணைகொண்டு வென்றனர். ஜனநாயகத்தில் உள்ள வாய்ப்புகளை நம்பிக்கையோடு பலரும் பார்த்த தருணம் அது. சாதாரண மக்களுக்​கும், குறிப்​பாகக் காடுகளில் வாழ்ந்​து​கொண்​டிருந்த பழங்குடி மக்களுக்கும் இந்திய ஜனநாயகத்தில் ஓர் இடம் நிச்சயம் இருக்​கிறது என்பதை உலகம் உணர்ந்​து​கொண்ட தருணமும்கூட!

ஒப்புதல் அவசியம்:

  • புலிகள் பாதுகாப்புச் சரணால​யங்களாக அறிவிக்​கப்பட்ட பகுதி​களில் வனவிலங்​கு​களோடு சேர்ந்து பூர்வகுடிகள் வாழ்வதற்கான சூழல் இருந்தால் அவர்கள் வாழ அனுமதிக்​கப்பட வேண்டும் என்றும், ஒருவேளை வெளியேற்ற வேண்டும் என்று கருதினால், அம்மக்​களின் முழுச் சம்மதத்​தோடுதான் வெளியேற்​றப்பட வேண்டும் என்றும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. இதனை நடைமுறைப்​படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு.
  • புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை​யில், காடு என்பதைப் பூர்வகுடிகளோடு இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் வெளியேற்​றப்பட வேண்டும் என்கிற நோக்கில் பார்க்கக் கூடாது என்பதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் வலியுறுத்துவது.
  • வயநாடு நிலச்​சரிவு பாதிப்​பின்போது மாதவ் காட்கில் குழுவின் அறிக்கை குறித்துப் பரவலாகப் பேசப்​பட்டது. மேற்கு மலைத் தொடர் பாதுகாக்​கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் அமைக்​கப்பட்ட முக்கியமான ஆய்வுக் குழு அது. உயிர்ப் பன்மயம் சிறப்பாக உள்ள உலகின் அரிய மலையான மேற்கு மலைத் தொடரைப் பாதுகாக்க உள்ளூர் நிர்வாக முறைகளை, பஞ்சாயத்துகளை, கிராம சபைகளை வலுப்​படுத்த வேண்டும் என காட்கில் அறிக்கை வலியுறுத்​தியது. இதன் பின்னே மிகப்​பெரிய சமூக அரசியல் சூழல் இருப்​பதைப் பார்க்க வேண்டும்.
  • காட்டுப் பகுதி​களில் மகிழ்ச்​சி​யோடு, தன் குடும்பத்​தினரோடு வாழ வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு பூர்வகுடியும் பாதுகாப்பாக வாழ வேண்டும். அதற்கான சூழலை அரசும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிப்​படுத்த வேண்டும். அதுவே ஒரு முதிர்ச்​சியான ஜனநாயக நாட்டின் பண்பாக இருக்க முடியும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories