TNPSC Thervupettagam

நம் கிராமங்களின் உடல்-மனநலம் எப்படி இருக்கிறது?

August 30 , 2019 1898 days 1058 0
  • பெரும்பாலான யோகா அமைப்புகளும் யோகா குருக்களும் நகர்ப்புறங்களையும், உயர் - நடுத்தர வர்க்கங்களையும் குறிவைத்து இயங்கும் சூழலில் வேதாத்ரி மகரிஷியின் ‘உலக சமுதாய சேவா சங்கம்’ சப்தமில்லாமல் கிராமங்களிலும் எளிய மக்களிடமும் யோகாவைக் கொண்டுசேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து, ஆயிரம் கிராமங்களை நோக்கிச் செல்லும் இலக்குடன் முன்னகர்கிறது அதன் பணி.
  • இந்தியா போன்ற நாடுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகள் பொதுவாகவே உரிய கவனத்துடன் அணுகப்படுவதில்லை என்பது போக அதிலும் விளிம்புநிலையில் இருப்பவர்கள் கிராமப்புற மக்களும் ஏழை எளியோரும். அதிலும் விவசாயத்தின் தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு, நிரந்தரமற்ற வருமானத்தால் முடங்கும் கிராமங்களில் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் இன்று எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகள் பொதுத் தளத்தில் எவர் கவனத்துக்கும் வராதவை. எங்கே பொருளாதார வறுமையும் ஆன்மிக வறுமையும் சூழ்கிறதோ அங்கே மதுவும் குடிநோயும் உட்புகுந்துகொள்வது உலக இயல்பு. நம் நாட்டிலோ அரசே குடியைத் தூக்கிச் சுமக்கிறது. விளைவாக, இன்றைய கிராமப்புறங்கள் கடும் அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் ‘உலக சமுதாய சேவா சங்க’த்தின் கிராமத் தத்தெடுப்புப் பணி முக்கியத்துவம் பெறுகிறது.
கிராமங்கள் தத்தெடுப்பு
  • 2012-ல் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கலான சேவா சங்கம், இதுவரையில் 168 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறது. இப்படித் தத்தெடுக்கப்படும் கிராமங்களில் முகாம் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சௌகரியப்படும் நேரங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு, ஒருகட்டத்துக்குப் பின், இப்படிப் பயிற்சி பெறுபவர்களிலேயே திறன் மிக்கவர்களை ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழி தொடர்ந்து பயிற்சி அளிக்கச்செய்து, அந்தக் கிராம மக்கள் வசமே முகாமை ஒப்படைத்துவிடுவதே இத்திட்டத்தின் செயல்பாடு. எளிய உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காயகல்பப் பயிற்சி, தவம், அகத்தாய்வு என அளிக்கப்படும் இந்தப் பயிற்சிகள் எவற்றிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது கடவுள் வழிபாட்டு முறையோ, வார்த்தைகளையோ இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று பல்வேறு மதத்தினரும் கூட்டம் கூட்டமாக இம்முகாம்களில் பங்கேற்பதைப் பார்க்க முடிகிறது.
வாழ்க வளமுடன்
  • தமிழ்நாட்டில் யோகாவை உடல் - மன வளப் பயிற்சியாக சாமானிய மக்களிடம் பரவலாகக் கொண்டுசென்ற முன்னோடிகளில் ஒருவர் வேதாத்ரி மகரிஷி. ‘வாழ்க வளமுடன்’ என்ற அவருடைய வாழ்த்து, ஒருகாலகட்டத்தில் தமிழ்நாடு முழுக்கப் பிரசித்தி பெற்ற வாழ்த்துகளில் ஒன்றானது. யோகப் பயிற்சிக் குடைக்குள் குடும்பங்கள் குடும்பங்களாக அடித்தட்டு மக்களைக் கொண்டுவந்தவர் அவர். அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய பணியைத் தொடர முன்னெடுக்க விழைந்த நாங்கள், அவருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக கிராம மக்களுக்கான சேவையையே கருதினோம் என்கின்றனர் இந்தப் பணியில் தங்களை இணைத்துக்கொண்டிருக்கும் சங்கத்தினர்.
  • பெரும்பாலும் 500 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமத்தைத் தத்தெடுக்கிறார்கள். முதலில் கிராம மக்களிடம் பேசுகிறார்கள். துவக்க விழா நடத்தி, அவர்களது செயல்திட்டங்களைக் கிராம மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். ஆண்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு ஆண், பெண்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு பெண் என்று இரு பயிற்சியாளர்களை அங்கே நியமிக்கிறார்கள். ஆறு மாதங்கள் தொடங்கி ஒரு வருட காலகட்டத்துக்குள் பயிற்சி அளித்து முடித்திடுவது இவர்களுடைய இலக்காக இருக்கிறது. இப்படிப் பயிற்சி அளித்து முடிக்கும்போது, கிராமத்தினர் உடல்-மன நல ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு சட்டம் - ஒழுங்கு நடைமுறையிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் இந்தச் சங்கத்தினர்.
கிராமப்புறத்தின் பிரச்சினைகள்
  • சங்கத்தின் தலைமை நிர்வாகி பி.முருகானந்தத்திடம் திட்டத்தின் பணிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். “கிராம சேவா சங்கம் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலைமையில் இதுவரை 168 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறது. இதில் 148 கிராமங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நாம் வெளியிலிருந்து பார்ப்பது போன்ற ஆரோக்கியச் சூழலில் இன்றைக்கு நம்முடைய பெரும்பாலான கிராமங்கள் இல்லை. கிராமங்களைத் தத்தெடுத்த உடனே, மருத்துவர்கள் குழு மூலம் மருத்துவப் பரிசோதனை முகாம்களை நடத்துவோம். ரத்தசோகை, உடற்பருமனில் தொடங்கி நீரிழிவுநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய் என்று எத்தனை விதமான ஆரோக்கியக் குறைபாடுகள் அந்த கிராமத்தைச் சூழ்ந்திருக்கின்றன என்பதை இந்தப் பரிசோதனை முகாம்கள் வெளிப்படுத்திவிடும். பெரும்பாலானோருக்கு இப்படியான பாதிப்புகள் அவர்களுக்கு இருப்பதே அப்போதுதான் தெரியவரும். பெரும்பாலும் வாழ்க்கைச் சூழலும் உணவுப் பழக்கமுமே இவற்றுக்கான பின்னணியில் இருப்பவை. கிராம மக்களிடம் இதுகுறித்து விரிவாகப் பேசுவோம். யோகப் பயிற்சியானது எப்படியெல்லாம் உதவும் என்பதை அவர்களுக்கு விளக்குவோம். பயிற்சிக்கு வரத் தொடங்கிய ஓரிரு வாரங்களில் நல்ல மாற்றங்களை அவர்களே உணர்வார்கள். இந்த மாற்றம் உடல் அளவில் மட்டும் அல்லாது, குடும்ப அளவிலும் சந்தோஷமாக மாறுவதும், சமூக ஒன்றிணைப்புக்கான பாலமாக மாறுவதும்தான் இதிலுள்ள பெரும் விளைவுகள்” என்கிறார் முருகானந்தம்.
  • பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் நன்கொடையைக் கொண்டே இந்தப் பணியை நடத்துவதாகச் சொல்கிறார்கள். வெறும் யோகப் பயிற்சியோடு மட்டுமல்லாமல், அந்தந்தக் கிராமங்களில் மக்களின் விருப்பங்கள், ஈடுபாடுகளுக்கு ஏற்ப தையல் பயிற்சி, தையல் இயந்திரங்கள் வழங்குதல் என்று கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டுக்கான பயிற்சியாகவும் விரிகிறது. இந்தக் கிராமங்கள் அத்தனையிலும் குறைந்தபட்சம் ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல்’ எனும் இலக்குடன் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது.
  • கிராமப்புற மேம்பாடு என்பது எவ்வளவு விரிந்த பொருளுடைய தளம் என்பதையும் எந்தெந்த வகையில் எல்லாம் கிராமப்புற மேம்பாட்டுக்கு ஒவ்வொரு அமைப்பும் உதவ முடியும் என்பதற்குமே இது ஒரு உதாரணம் ஆகிறது. உள்ளபடி நம்முடைய கிராமங்களின் உடல் - மன ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? அரசுசார் அமைப்புகளும், அரசு சாராத அமைப்புகளும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயமும் இது!

நன்றி: இந்து தமிழ் திசை(30-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories