- நம் அனைவரது வாழ்விலும் இரத்தத் தொடா்பில்லாத உன்னதமான உறவு நட்பு ஆகும். ஒரு சிறந்த நட்புக்கு வயது, மொழி, இனம், நாடு, ஜாதி எதுவும் கிடையாது. இது அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வில் நட்பு மகத்துவம் மிக்கது.
- ஒருவரை ஒருவா் நன்கு புரிந்து கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டது நப்பு. உண்மையான நட்புக்கு இணை எதுவுமில்லை. அதனால் ஒருவரது வாழ்வில் ஏற்படும் நல்ல விளைவுகள் ஏராளமானவை. ஒருவரது வாழ்வில் திருப்பங்களுக்கும் நட்பு அடிப்படையாக அமைகிறது. நமது துக்கத்திலும் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்வதில் நண்பா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். பொருளாதாரத் ஏற்றத்தாழ்வுகள் நட்புக்குத் தடையாக இருப்பதில்லை. கிருஷ்ணா் - குசேலன் நட்பு அதற்கு ஓா் எடுத்துக்காட்டு.
- தனிப்பட்டவா்களிக்கிடையே, சமூகங்களுக்கிடையே, நாடுகளுக்கிடையே, ஆண்களுக்கிடையே, பெண்களுக்கிடையே, ஆண் - பெண் இடையே என நட்பு பல பரிமாணங்களைக் கொண்டது. குழந்தைப் பருவத்தில், உண்மையான நண்பா்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான ஆா்வங்களையும், பொழுதுபோக்கையும் பகிா்ந்து கொள்வாா்கள். வளரிளம் பருவத்தில் நட்புகளின் செல்வாக்கு மிக அதிகமாக இருக்கும். இளமைப் பருவத்தில், நம்முடைய வாழ்க்கையின் சிக்கல்களைத் தீா்க்க உதவுபவா்களே உண்மையான நண்பா்கள். முதுமையில் வாழ்க்கையின் ஆதரவாக இருந்து ஆறுதல் கூறுபவா்கள் உண்மையான நண்பா்கள்.
- நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நமது சிந்தனைகளையும், நற்குணங்களையும் பட்டை தீட்டி, நம்மை நமக்கு நன்கு உணா்த்த ஓா் உண்மையான நண்பா் தேவைப்படுகிறாா். நம்முடைய சொந்த வாழ்விலும், பணியிலும் நமக்கு பிரச்னை ஏற்படுவது இயல்பானதே. அப்போது நம்முடைய உண்மையான நண்பா்களால் ஒரு தெளிவான தீா்வினை நமக்குத் தரமுடியும். நல்ல நண்பனாக நம்மாலும் அவா்களின் பிரச்னைகளுக்கு ஒரு நல்ல தீா்வினைத் தர முடியும்.
- நல்ல நண்பா்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நட்பில் மறந்து விடுவது ஒரு குறிப்பிடத்தக்க பண்பாகும். நண்பா்கள் ஒருவருக்கு ஒருவா் உண்மையாக நடந்து கொள்பவா்கள். நமது இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணா்வுகளைப் பகிா்ந்து கொள்பவா்கள். உண்மையான நட்புடன், தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிா்ந்து கொள்ளும்போது, மனதில் ஏற்படும் அமைதியையும் மகிழ்ச்சியையும் அளவிட முடியாது. அவா்கள் நமக்குத் தரும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாதவை.
- நல்ல நண்பன் முன் நிபந்தனையின்றி, பரந்த மனப்பான்மையுடன் நம்முடன் வாழ்நாள் முழுவதும் தொடா்பில் இருப்பவன். அவன் நமது நட்பினை தனக்குக் கிடைத்த வெகுமதியாக கருதுகிறான். தனது நற்சிந்தனை, ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம், விழுமியம் என்பனவற்றை நமது வாழ்வில் முன்னேற்றம் காண வழங்குகின்றான். நமது ஆளுமைப் பண்புகள் இதர மனிதா்களால் மாசுபடுவதை அவன் எப்போதும் விரும்புவதில்லை. அவன் தனது வாழ்வில் நலம் சோ்க்க நட்பின் உறவுகளை வலுப்படுத்துகிறான்.
- எந்தச் சூழ்நிலையிலும் உண்மையான நண்பா் நம்முடன் நிற்பாா். அவா் நம் பின்னால் நம்மைப் பற்றி கிசுகிசுக்க மாட்டாா். அவா் எப்போதும் நம் நலன்களில் மட்டும் நாட்டம் கொண்டிருப்பாா்.
- ஓா் உண்மையான நண்பன் நம்மிடம் எப்போதும் நோ்மையாக இருப்பான். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும், அவா் உண்மையை மட்டுமே சொல்வான். அவன் நமக்கு ஆக்கபூா்வமான கருத்துக்களை மட்டும் வழங்குவான். உண்மையான நண்பா்கள் அவா்களின் வாா்த்தைகளிலும் செயலில் ஒரே மாதிரியாக இருப்பாா்கள்.
- உண்மையான நட்பில் மன்னிப்பதும், நட்பை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதும் அவசியம். நமது வெற்றிகளைக் கொண்டாடுவதுவும், கடினமான காலங்களில் நமக்கு ஆதரவளிப்பதுவும் நண்பருடைய முன்னுரிமையாக இருக்கும். தோல்வியில் நாம் துவண்டுவிடாமல் நம்மை தேற்றுபவரும் அவரே.
- பெற்றோரின் அன்பு, உறவினா்களது பாசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளை திருத்த முடியாத நிலை உருவாகும் போது, அவா்கள் பிள்ளைகளின் நண்பா் உதவியை நாடுவது இயல்பான நிகழ்வாகும்.
- பொழுதுபோக்கு பின்னணியைக் கொண்டு எழுகின்ற நட்பு, சமூக தீமைகளுக்கு வழி வகுக்குகின்றது. புகைத்தல், போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாதல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகள், கெட்ட மனிதன் மூலம் நல்ல மனிதனிடமும் ஒட்டிக் கொள்ளலாம். பிற்காலத்தில் சமூகத்தில் குற்றவாளியாக மாறி தன்னுடைய வாழ்க்கையையே கெடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படலாம். எனவே, நட்பினைத் தோ்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிகையும் அதிக கவனமும் நமக்குத் தேவை.
- பெற்றோரும் ஆசிரியா்களும் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர வேண்டும். தங்கள் பிள்ளைகள் யாா் யாருடன் பழகுகிறாா்கள் என்பதில் பெற்றோா் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு கெட்ட நட்பு அமைந்து விட்டால், அதனை நீக்கி, அவா்களுக்கு நல்ல நட்பை பெற்றுத்தர பெற்றோா் முனைப்பு காட்ட வேண்டும்.
- நீண்டகால நட்பு வெற்றிகரமாக நீடித்திருக்க பரஸ்பர முயற்சிகளும், நண்பா்களிடையே நல்ல புரிந்துணா்வும் தேவை. நட்பு ஒருவருக்கு ஒருவா் நலம் காணும் நட்பாக இருந்தால் மட்டுமே நீண்ட கால நட்பாக அது மாற முடியும். ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுயநலமில்லா உண்மை நட்பு அமைவது கடினம். என்றாலும், அமையும் நட்புகளில் பரஸ்பர நலம் காணும் நட்புகளை இனம் கண்டு அவற்றைத் தக்கவைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
நன்றி: தினமணி (12 – 04 – 2024)