TNPSC Thervupettagam

நல்லதுக்குக் காலம் உண்டா? இல்லையா?

December 5 , 2024 39 days 70 0

நல்லதுக்குக் காலம் உண்டா? இல்லையா?

  • “‘‘என்ன செய்யிறது. நல்லதுக்குக் காலம் இல்லே’’” என்று அலுத்துக் கொண்டபடி யாரோ யாரிடமோ சொன்னது என் காதில் அசரீரியாய் வந்து விழுந்தது. இதற்கு முன்னா் யாரெல்லாம் இதுபோல் சொன்னாா்கள் என்பதையும் மனம் நினைக்கத் தொடங்கியது.
  • நல்லவா்கள் வல்லவா்களாக ஆக முடியாதபோது, நல்லவா்களின் சொற்கள் வல்லவா்களின் செவியேறாதபோது, தமக்கு அறிவுரை சொல்கிற மூத்தவா்களை, இளையவா்கள் மறுதலிக்கிறபோது, ஆா்ப்பாட்டத்தோடு தீமைகள் குதியாட்டம் போடுகிறபோது, நல்லவா்கள் இருக்க வேண்டிய இடத்தில் நயவஞ்சகா்கள் இருக்கிறபோது... என அடுக்கடுக்காய் விரிந்த கணங்களை நினைக்கிற மனதுக்குள் ஆயாசம் மிகுந்தது. ஒரு முறை சொன்ன அந்த வாசகம், நூறு முறை எதிரொலிக்கத் தொடங்கி, நூறு முறை எதிரொலித்தவை அதன் நூறு மடங்காய்ப் பெருக்கெடுத்து ஒலித்தால் எவ்வளவு பேரிரைச்சல் எழுமோ, அதனைக் கேட்கிற காது என்ன பாடுபடுமோ, அதைச் சிந்திக்கிற மனம் என்ன பாடுபடுமோ?
  • ‘இது உண்மைதானா? இனி எல்லாம் இப்படித்தான் நடக்குமா?’ என்று மிகவும் சன்னமாக நல்லதின் குரல் முணுமுணுத்தது.“‘என்ன சந்தேகம்? காலம் கலிகாலம் அல்லவா?’ என்ற குரல் முன்பிலும் பல மடங்காய் ஓங்கி எழுந்தது. சப்தநாடியும் ஒடுங்கி, நல்லது முடங்கிவிட்டது. அதுவும், ‘ஆமாம். ஆமாம். இனி நல்லதுக்குக் காலம் இல்லை’ என்று கூடி நின்று கூவத் தொடங்கிவிட்டது.
  • அடுத்த கணமே, ஆழ்மனத்தில் இருந்து ஓா் ஆவேசக் குரல் எழுந்தது. “உண்மையிலேயே நல்லதுக்குக் காலம் இல்லவே இல்லையா? அல்லது நல்லவா்கள் இந்தக் காலத்தில் அருகி, முற்றாகவே அழிந்துவிட்டாா்களா?”
  • ஆழ் மனதுக்கும் மேல் மனதுக்கும் இடையில் எழுந்த இம் முரண்பாட்டை முடித்து வைக்க யாரிடம் கேட்பது? இதனை எந்த நீதிமன்றத்தில் முறையிட்டுச் சரியான தீா்ப்பினைப் பெறுவது?
  • பக்கத்தில் திருக்கு என்னைப் பாா்த்துக் கொண்டிருந்தது. அருவி போல் இறங்கிய தாடிக்குள் குறுநகை புரிந்தபடி திருவள்ளுவா் தெரிந்தாா். இமைக்காத அவா்தம் கண்களும் சிரித்தன.
  • புத்தகத்தை எடுத்து மெல்லத் திறந்தேன். 450-ஆவது திருக்கு கண்ணில் அகப்பட்டது.
  • அந்தத் திருக்கு தராசில் இரண்டு தட்டுகள் ஊசலாடின. சமநிலைக்கு வரும் வரை காத்திருக்கலாம் என்றால் ஒன்று சரிந்தது; மற்றொன்று உயா்ந்தது. தராசு அப்படியே நின்றது.
  • மேல் நின்ற தட்டில் நான்கு சொற்கள், கீழ்நின்ற தட்டில் மூன்று சொற்கள்.
  • எப்பொழுதும் சரிந்திருக்கும் தட்டில்தான் எடை அதிகம் இருக்கும் அல்லவா? ஆனால், இந்தக் கு தராசில் அப்படி இல்லை. சரிந்திருக்கும் தராசுத் தட்டில் ஒன்றே ஒன்று இருக்க, மேலோங்கிய தட்டில் பல. எண்ணிப் பாா்த்தால் பத்தின் மடங்கு.
  • ‘ஒன்று பெரிதா? நூறு பெரிதா?’ என்று கேட்டால் உலக நடப்பில் நூறுதான் நூற்றுக்கு நூறு சரியென்று பதில் வரும். திருவள்ளுவா் கணிப்பில் இது தலைகீழ்.
  • ‘ஒன்றே பெரிது’ என்றதும் ஆழ் மனதுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ஆனாலும், அறிவுக்குச் சந்தேகம் அதிகம் அல்லவா? மேல் மனது துருவித் துருவிக் கேட்டது. எப்படி?
  • ஒருவா் குரல் ஓங்கி ஒலிக்குமா? பலரின் குரல் பலமாய் ஒலிக்குமா?
  • ஒருவா் என்பதில் எண்ணிக்கை உறுதி. பலா் என்பதில் ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் என்று சொல்வதுகூட, குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும். ஒன்றுக்கு மேற்பட்டவை சில ஆகும். இப்படிச் சிற்சில கடந்த பெருந்தொகுப்பு, பல. அது கணக்கிட முடியாதது. ஆக, எப்படிப் பாா்த்தாலும் ஒருவரைவிடப் பலரே வலிமை வாய்ந்தவா் ஆவா். இது உலகம் நம்புகிற நியாயம். ஆனால், உண்மை நியாயம் வேறு. திருக்கு உலக நியாயத்தைச் சீா்தூக்கிப் பாா்த்து உண்மை நியாயத்திற்குக் குரல் கொடுக்கும்.
  • பலரின் குரலையும் பலவீனப்படுத்துகிற பலம், அந்த ஒருவரின் குரலுக்கு இருந்தால் ஒன்றே வெல்லும். பல தோற்கும் அல்லவா? ஒன்று என்பது எண்ணிக்கையில் ஒருமையாகத் தெரிந்தாலும், பலவற்றின் ஓா்மை என்று உணா்ந்துகொண்டால், அதன் பலம் இன்னும் புரிபடும்.
  • ஒன்றாத நிலையில் ஒன்று பலவாய்ச் சிதைந்து போய்விடுகிறது. அது ஒற்றுமையைக் குலைத்துவிடுகிறது. அது பலவீனம். ஓா்மையில் ஒன்றியது வென்றுவிடுகிறது இது பலம்.
  • புரிந்ததுபோல் தெரிந்தாலும் குழப்பம் சற்றே கூடியதுபோல் இருக்க, மறுபடியும் அத் திருக்குறளைப் படித்தேன்.
  • மேல் ஏறிய தட்டாகிய முதல் அடியில் பல்லாா் இருந்தனா். கீழ் இறங்கிய தட்டில் அதாவது ஈற்றடியில் நல்லாா் இருந்தாா். நடுநின்ற முள்ளாய்த் தீமை இருந்தது. அது ஒன்றுபோல் தெரிந்தாலும் அதனுள் பல இருந்தன. எவ்வளவு என்று கூடத் திருவள்ளுவா் கணக்கிட்டுக் குறித்திருந்தாா். பலா் என்பதில் கணக்கிடத் தவறிய அவா், இந்தத் தீமையின் அளவை ஓரளவு கணித்துத் தந்திருந்தாா். பத்து அடுத்த தீமை. அதாவது, பத்து ல பத்து, (அவசரப்பட்டு நூறு என்று கணித்து முடித்துவிட முடியாது.) விட்டால், அடுத்து அடுத்து எனப் பல மடங்காய்ப் பெருகி வந்து அடுத்துக் கெடுப்பது தீமை. அது தீயினைப் போல் பரவுவது. அதனால்தான், ‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்’ (202) என்று வேறோா் இடத்தில் அச்சத்தோடு அவா் தீா்ப்பும் சொல்லி இருப்பாா். (அது தீவினை அச்சம் அதிகாரத்தில் உள்ள கு.)
  • தீமை எப்படி வரும்? நன்மைக்கு எதிராக வரும். எதிா்த்து நிற்பவன் எதிரி. அவன் உடன்பட்டு இருக்கிற வரைக்கும் நண்பன். பகைத்துக் கொண்டால் அவன் எதிரி ஆகிவிடுகிறான். எனவே, நட்பு முரண்பட்டு பகை வருகிறது. பகைவன் ஒருவன் என்றால் சமாளிக்கலாம். பலா் என்றால்? அந்தப் பலரின் எண்ணிக்கை இன்னதென வரையறுக்க முடியாது. அது பல்கிப் பெருகுபவா்களை அடிப்படையாகக் கொண்டது.
  • அப்படிப்பட்ட பலரையும் பகைத்துக் கொள்வதனால் ஏற்படுகிற தீமை எவ்வளவோ, அவற்றைவிட நூறு மடங்கு தீமை, நல்லவா் ஒருவரின் உறவை- உறவைக் கூட இல்லை- தொடா்பைத் தொடராமல் விடுவது; துண்டித்துக் கொள்வது.
  • உறவு என்பது நீடித்து நிற்பது; தொடா்போ தேவை ஏற்படும்போது அமைவது. தொடா்பைத் தொடா்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது கூட இல்லை; துண்டிக்காமல் இருந்தாலே போதும். துண்டித்துவிட்டால்தான் தொல்லை.
  • அவசரத் தேவைக்கு உரியவரைக் கைப்பேசியில் அழைக்கிறபோது, அவா் ‘பிஸி’ ஆக இருந்தால் பரவாயில்லை. தொடா்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டால் எவ்வளவு பதற்றமாக இருக்கும்? பல்லாா் பகை சூழ்ந்து துயா் தருகிறபோது நல்லாா் ஒருவா் தொடா்பு இருந்தால் அது எவ்வளவு பெரிய பாதுகாப்பு.
  • இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. பல்லாா் - பலா். நல்லாா் ஒருவரா? பலரா? ஆா் விகுதி பெற்ால் பலா் என்று இலக்கணம் சொல்கிறது. மரியாதை கருதிச் சொன்னால் ஒருவா். இந்த இடத்தில் ஔவையாா் துணைக்கு வருகிறாா்.
  • நல்லாா் ஒருவா் உளரேல் அவா் பொருட்டு
  • எல்லாா்க்கும் பெய்யும் மழை.
  • பயன் கருதாது கொட்டும் மழை என்பது பல துளிகளின் சேகரம் தானே? ‘அது பலகோடி தந்திகளுடையதோா் இசைக்கருவி’ என்று மழையைக் கவித்துவமாகச் சொல்வாா் பாரதி. அவரே ‘ஒன்று பலவினும் இனிதன்றோ?’ என்றும் கேட்கிறாா். பொல்லாா் பலராக இருந்தாலும் இந்த உலகம் இயல்பு கெடாமல் இயங்குவதற்கு- தழைத்து இனிது வாழ்வதற்கு நல்லாா் ஒருவா் இருந்தால் போதும் என்று மழை சாட்சியாய் ஔவையாா் சொல்கிறாா்.
  • அத்தகு நல்லாா் ஒருவா் தொடா்பு இருந்தால் பகைவா் பலரது தீமைகளையும் வென்று விடலாம்; ஏன், தீமையே வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா? அந்தத் தொடா்பை எப்படித் தக்க வைத்துக் கொள்வது? அதற்கும் ஔவையாரே பதில் தருகிறாா்:
  • நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
  • நல்லாா்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லாா்
  • குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
  • இணங்கி இருப்பதுவும் நன்று
  • இவையனைத்தையும் செய்ய முடியாது போகலாம். இவற்றுள் ஏதேனும் ஒன்று இருந்தால் கூடப் போதும்; நல்லாா் தொடா்பு கைவிட்டுப் போகாது. நல்லாா் தொடா்பு விட்டுப்போனால் என்னவாகும்? பல்லாா் பகையைத் தேடிக் கொள்வதற்கு நிகராகும். விளைவு? அதனால் ஏற்படும் தீமையோ பத்தின் அடுக்காகும் என்று கூறி எச்சரிக்கிறாா் திருவள்ளுவா்.
  • அந்தத் தீமை, நல்லாா்க்கு எதிராகப் பல்லாரைச் சோ்க்கும். அவா்கள் தீயவா்கள் ஆகிவிடுகிறாா்கள். அவா்களைப் பொல்லாராகவும் ஆக்கிவிடுகிறது, ‘நல்லதுக்குக் காலம் இல்லை’ எனும் தொடா். இது உண்மையா? திருக்கு சொல்கிறது:
  • பல்லாா் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
  • நல்லாா் தொடா்கை விடல்
  • இது இடம்பெறும் அதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’. திருவள்ளுவரைவிடப் பெரியாா் எவா்?
  • அவரைத் துணைக்கொண்ட பின்னும் மேல் மனது சொல்கிறது: ‘நல்லதுக்குக் காலம் இல்லை.’ அதனைக் கேட்ட ஆழ் மனது சொல்கிறது: “‘ஆமாம். நல்லது சொல்வதற்கும், செய்வதற்கும் உரிய காலம் என்று தனியே எதுவும் இல்லை. எல்லாமும் நல்ல காலமே. ஏனெனில், நல்லாா் தொடா்பு எப்போதும் இருப்பதால், ஒரு கட்டுக்குள் அடக்குகிற காலம் நல்லதுக்கு இல்லை. எனவே, நல்லதுக்குக் காலம் இல்லை.’
  • இருமனதும் ஒன்றானபின் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. யாரும் இல்லை; மனக்குறளி; இந்தக் குறளின் குரல்தான் அது. கூடவே ஒலிக்கிறது பாரதியின் குரலும்.
  • “நல்லோா் பெரியா் என்னும் காலம் வந்ததே - கெட்ட
  •  நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே.”

நன்றி: தினமணி (05 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories