- ஓம் பிர்லா மீண்டும் மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 18-ஆவது மக்களவையின் தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட ஓம் பிர்லா, குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எண்ணிக்கை அதிகம் இருப்பதால் வியப்பளிக்கவில்லை.
- மக்களவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது, அவை கருத்தொற்றுமை அடிப்படையில் செயல்படும் என்கிற நம்பிக்கையை அளிக்கவில்லை. முந்தைய இரண்டு மக்களவையைப் போல் அல்லாமல், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணிக் கட்சிகளைப் போலவே எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதை ஆளும்கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.
- குரல் வாக்கெடுப்பு அல்லாமல், தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்க முடியும். மக்களவையின் 233 உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அவைத் தலைவராகி இருக்க முடியாது. இது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகள் அவையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அது முன்னோடியாக அமைந்திருக்கும்
- மக்களவை துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வழங்கும் மரபை பின்பற்ற வேண்டும் என்பது ஒருமித்த கருத்துக்கான எதிர்க்கட்சிகளின் நிபந்தனை. மக்களவை துணைத் தலைவர் தேர்தலின்போது, அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் முன் நிபந்தனைகளுடன் அவைத் தலைவர் தேர்தலுக்கு ஒருமித்த கருத்தை ஏற்க முடியாது என்றும் ஆளும்தரப்பு நிராகரித்துவிட்டது.
- தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு கூட்டணி நிர்ப்பந்தங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் அவைத் தலைவர் பதவியைக் கோரக்கூடும் என்கிற எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு பொய்த்தது. இதுவரை இல்லாத அளவில் பலமான கூட்டணி அமைந்திருக்கும் நிலையில், அவைத் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சிக்கு பாஜக விட்டுக் கொடுக்காது என்பது ஊரறிந்த உண்மை. அதை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் உணராமல் இல்லை.
- துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதில் பாஜகவுக்கு தர்மசங்கடம் உண்டு. தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஆளும் தரப்பு விரும்பலாம்.
- 1980 ஏழாவது மக்களவையில் திமுகவின் ஜி.லட்சுமணன், 1984 எட்டாவது மக்களவையில் அதிமுகவின் மு.தம்பிதுரை என்று அன்றைய காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்குத்தான் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
- 1969-இல் காங்கிரஸ் பிளவைத் தொடர்ந்து, நான்கு, ஐந்தாவது மக்களவைகளில் ஆளும் காங்கிரஸின் ஆதரவாளரான வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஜி.ஸ்வெல் அவையின் துணைத் தலைவரானார். 1989 வி.பி.சிங்கின் கூட்டணி ஆட்சியில் முதல்முறையாக எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த சிவராஜ் பாட்டீலுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைந்த நரசிம்ம ராவ் ஆட்சியிலும், ஐக்கிய முன்னணி ஆட்சியிலும் எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும், வாஜ்பாய் தலைமையில் அமைந்த 12, 13-ஆவது மக்களவைகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸும் துணைத் தலைவர் பதவியை வகித்தன.
- 2004-இல் எதிர்க்கட்சியான அகாலி தளத்தைச் சேர்ந்த சரன்ஜித் சிங், 14-ஆவது மக்களவையிலும், பாஜகவைச் சேர்ந்த கரியா முண்டா 15-ஆவது மக்களவையிலும் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகளில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கருத்தொற்றுமை அடிப்படையில்தான் கூட்டணி ஆட்சிகள் அமைந்த 9,10, 11, 12,13,14, 15-ஆம் மக்களவைகளில் துணைத் தலைவர் பதவி முக்கிய எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டது.
- 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் 16-ஆவது மக்களவை அமைந்தபோது, நட்புக் கட்சியான அதிமுகவின் மு.தம்பிதுரை துணைத் தலைவரானார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒருவருக்குத் துணைத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை என்கிற விமர்சனம் அதன் மூலம் எதிர்கொள்ளப்பட்டது
- இதற்கு முந்தைய 17-ஆவது மக்களவையில் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே ஐந்து ஆண்டு பதவிக்காலம் தொடர்ந்தது. இந்தப் பின்னணி வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த முறை துணைத் தலைவர் பதவி ஆளும்கட்சி சார்ந்த கட்சிக்கு வழங்கப்படுமா அல்லது எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுகிறது.
- நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் மிகவும் முக்கியமானவை. அனைத்துக் கட்சிகளுக்கும் வாய்ப்பு அளித்து, பாரபட்சம் இல்லாமல் அவையை நடத்தும் பொறுப்பு அவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருப்பவருக்கு உண்டு. நாடாளுமன்றம் என்பது ஆளும்கட்சி தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டும் அமைந்தது அல்ல; ஆளும்கட்சி கொண்டுவரும் அனைத்து மசோதாக்கள் குறித்தும், ஆளும்கட்சியின் அன்றாடச் செயல்பாடுகள் குறித்தும் தங்களது விமர்சனம், கண்டனத்தை வெளிப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் கடமை.அவைத் தலைவர் போட்டியின்றி கருத்தொற்றுமையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
நன்றி: தினமணி (27 – 06 – 2024)