TNPSC Thervupettagam

நவீனமயமாகும் அண்டை நாட்டு ராணுவம்

June 15 , 2023 576 days 416 0
  • ஒரு காலத்தில் குப்பைக்கழிவு ராணுவம் என்று வர்ணிக்கப்பட்ட சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) இன்று உலகின் மிகச்சிறந்த தொழில்முறையிலான தாக்குதல் படையாக மாறி வருகிறது.
  • "குறைவான ஆயுதம் குறைவான படைவீரர்கள்' என்ற கோட்பாடே சீன ராணுவத்தை மேம்படுத்தத் தடையாக இருந்து வந்தது. 1993-ஆம் ஆண்டு வரையிலும் கூட சீன ராணுவத்தின் நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டே வந்தன. சீன கம்யூனிச அரசின் நிறுவனரான மா சேதுங், உள்கட்சித் தலைமைக்கு சவால் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வாலும், மாறுபட்ட கொள்கை முரண்பாடுகளால் சிக்கல்கள் நேரிட்டுவிடக் கூடாது என்பதாலும் ராணுவம் மீது உறுதியான பிடியை வைத்திருந்தார்.
  • மாவோவுக்குப் பிறகு, சீன அரசின் ராணுவம் குறித்த பார்வையில் மாற்றம் வந்தது. டெங் ஜியோ பிங் அதிபராக இருந்தபோது, ராணுவத்தின் தொழில்முறை முன்னேற்றம் குறித்த அரசின் சந்தேகப் பார்வை குறைந்தது. ஆயினும் ராணுவம் மீதான பிடியை சீன கம்யூனிஸ்ட் கட்சி தளர்த்திக் கொள்ளவில்லை.
  • 1990-199-களில் நடந்த வளைகுடாப் போரும், 1995-1996-இல் நிகழ்ந்த தைவான் நீரிணை விவகாரமும் ராணுவத்தை தொழில்முறையில் மேம்படுத்தியாக வேண்டியதன் அவசியத்தை சீன அரசுக்கு உணர்த்தின. வளைகுடாப் போர் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள பிஎல்ஏ-வை ஆயத்தமாக்குவதற்காக, ஆயுதங்களின் செயல்திறனைப் பெருக்குதல், அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கையாளுதல் ஆகியவற்றின் தேவை உணரப்பட்டது. அப்போது உள்ளூர் போர்களை நவீனக் கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம் என்ற சிந்தனை காலாவதியானது.
  • அன்று முதல் சீன ராணுவத்தை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடங்கின. 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன அரசின் நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கப்பட்டது. அதிலும் 2011-ஆம் ஆண்டு வரை (ஓராண்டு தவிர) ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு இரட்டை இலக்க சதவீதத்தில் இருந்தது. அதன் விளைவாக பிஎல்ஏ விரைவில் நவீனமயமானது.
  • சீனாவின் பிஎல்ஏ தனக்கென ராணுவ வியூக நெறிமுறைகளை வடிவமைத்துள்ளது. அதுவே ராணுவத்தின் திட்டங்கள், கொள்கைகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. 1993-இல் பிஎல்ஏ-வின் தலைமைத் தளபதியாக இருந்த ஸாங் வானியான், அப்போதைய ராணுவ வியூகத்தை சுருக்கமாகக் குறிப்பிட்டபோது, "நமது வியூகம், நாம் யாருடன் போரிட வேண்டும், எங்கே போரிட வேண்டும், எவ்வாறு போரிட வேண்டும் ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக இருக்க வேண்டும்' என்றார்.
  • சீன மக்கள் குடியரசின் (பிஆர்சி) படைபலம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் அவையில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், பிஎல்ஏ-வின் வியூக முறைகளில் பெரும்பங்கைப் பெற்றிருப்பது செயலூக்கமுள்ள தற்காப்பு மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அந்த செயலூக்கமுள்ள தற்காப்புக் கோட்பாட்டின் பிரதான அம்சங்கள்: பிஎல்ஏ யாரையும் முதலில் தாக்காது. ஆனால் பிறர் தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் அனுமதிக்கப்படும். அதேபோல, தற்காப்புக்காக முன்னெச்சரிக்கைத் தாக்குதல்களையும் பிஎல்ஏ மேற்கொள்ளலாம்.
  • எல்லைகளில் தனது நிலைகள் ஸ்திரப்படுத்திக் கொள்வதும், அதை அண்டைநாடுகளுக்கு சமிக்ஞையாக வெளிப்படுத்துவதும் அவசியம். 3. எதிரி நாட்டுப் படைகளின் பலவீனங்களை மையப்படுத்தி, நேரமும் சூழலும் ஒத்து வருகையில் தாக்குதல்களை நடத்த பிஎல்ஏ அனுமதிக்கப்படும்.
  • இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் சீனாவின் ராணுவச் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
  • 1990-களுக்கு முன்னர் சீனாவின் ராணுவ பட்ஜெட், தைவானின் ராணுவ பட்ஜெட்டை விடக் குறைவாகவே இருந்தது. 1990-களின் பிற்பகுதியிலிருந்து, அதன் ராணுவ நிதி ஒதுக்கீடு அதகரித்தது. இன்று உலக நாடுகளில் ராணுவத்திற்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனா இருக்கிறது.
  • இப்பட்டியலில் ஜப்பான், பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டது சீனா. இன்றைய சீனாவின் ராணுவ பட்ஜெட், 17 இந்தோ-பசிபிக் நாடுகளின் ராணுவங்களுக்கு அளிக்கப்படும் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டை விட அதிகம்.
  • சீன அரசு 2023-ஆம் ஆண்டில் பிஎல்ஏ-வுக்கு அளித்துள்ள வருடாந்திர நிதி ஒதுக்கீட்டின் அளவு 224.79 பில்லியன் அமெரிக்க டாலர். ( சுமார் ரூ.18,43,278 கோடி). இது கடந்த நிதியாண்டைவிட 7.2 % அதிகம். கடந்த எட்டாண்டுகளாக இதே போன்று ஒற்றையிலக்க சதவீதத்தில் ராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரித்து வந்துள்ளது. கடைசியாக 2015-இல் 10.1 % என்ற இரட்டை இலக்கத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • அதே சமயம், அறிவிக்கப்பட்ட பட்ஜெட்தொகைக்கும், ராணுவத்தில் செலவழிக்கப்படும் தொகைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகவும், பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இருமடங்கு அதிகமாக ராணுவத்திற்குச் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
  • சீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவே. 2023-24 நிதியாண்டில் இந்திய அரசு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்திருப்பது 72.6 பில்லியன் டாலர் (ரூ. 5,95,320 கோடி) மட்டுமே.
  • அதிகப்படியான நிதி ஒதுக்கீடு காரணமாக, பிஎல்ஏ புதிய திறன்களையும், மேம்பாட்டையும் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த ஊடுருவும் தொழில்நுட்பம், துல்லியமான தாக்குதல்களை நிகழ்த்தும் திறன், நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை விமானம், கப்பலிலிருந்து தாக்கும் திறன், நெடிய போர்ப் பயண ஏற்பாடு ஆகியவற்றில் பிஎல்ஏ நிபுணத்துவம் பெற்று வருகிறது.
  • ஏற்கெனவே, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முதலீடு, ஆளில்லா விமானங்கள் (யுஏவி), திறன் வாய்ந்த கணினி வலைப்பின்னல் கட்டமைப்பு ஆகியவற்றின் வாயிலாக, உளவுத் தகவல்களை கிரகித்தல், ராணுவச் செயல்பாடுகளைத் திட்டமிடல், போர்க்களத்தில் சூழலுக்கேற்ப முடிவெடுத்தல் ஆகிய பணிகளில் பிஎல்ஏ தனது திறமைகளைப் பெருக்கிக் கொண்டுள்ளது.
  • இதில் சீனாவின் அண்மைக்கால முன்னேற்றமாக, விமானந்தாங்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைத்திருப்பதைக் குறிப்பிடலாம். பழைய சோவியத் ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட பயன்படுத்தப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல்களை புதுப்பித்து முதல் முதலாக "லியாஓனிங்' விமானந்தாங்கிக் கப்பலை 1999-களில் சீனா தயாரித்தது. 2017-இல், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட "ஷான்டோங்' விமானந்தாங்கிக் கப்பலை சீனா அறிமுகம் செய்தது.
  • 2022-இல் "பியூஜியன்' என்ற புதிய விமானந்தாங்கிக் கப்பலை சீனா தயாரித்திருக்கிறது. இந்தக் கப்பல், மின்காந்த சக்தியில் இயங்கும் தொழில்நுட்பத்தால் விமானங்களைக் கட்டுப்பட்டுத்தும் வகையில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தைவானின் அருகிலுள்ள சீன மாகாணமான பியூஜியனின் பெயரே இந்த விமானந்தாங்கிக் கப்பலுக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
  • வரும் ஆண்டுகளிலும் இதே வேகத்துடன் பிஎல்ஏ நவீனமயமாக்கம் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனினும் கீழ்க்கண்ட உள்நாட்டு அரசியல், வெளிநாட்டி நிகழ்வுகளின் தாக்கத்தால் இதில் மாற்றம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.
  • முதலாவதாக, தைவான் விவகாரம் பிஎல்ஏ-வின் நவீன மயமாக்கத்தில் பெரும்பங்கு வகித்து வந்துள்ளது. இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட்டுவிட்டால் பிஎல்ஏ-வின் முக்கியத்துவம் குறையலாம். எனினும், தைவான் விவாகரத்தில் உடனடித் தீர்வுக்கான வாய்ப்புகள் குறைவே. தைவான் மீதான சீனாவின் கட்டுப்பாடு நிலவுவது அமைதியான ஒப்பந்தத்தாலா, ராணுவ பலத்தாலா என்பதன் அடிப்படையிலேயே ராணுவத்தின் தேவை மதிப்பிடப்படும்.
  • இரண்டாவதாக, தைவான் நீரிணை விவகாரம் அல்லாத பிற விவகாரங்களும் ராணுவத்தின் தேவையை அதிகரிக்கின்றன. முப்படைகளின் முதல் நிலை, இரண்டாம் நிலைப் பிரிவுகளுக்கு ராணுவ நிதி ஒதுக்கீட்டை முன்னுரிமை அடிப்படையில் முறைப்படுத்துவது அவசியம். குறிப்பாக, இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் பிஎல்ஏ செலுத்தும் கவனம், கொரிய தீபகற்பத்தில் செலுத்துவதைவிட அதிகமாக உள்ளது.
  • இதற்குப் பொருத்தமாகவே தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், "முழுமையான தேசிய பாதுகாப்புக் கருத்து' என்ற கோட்பாட்டை முன்வைத்திருக்கிறார். நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பது, பலதரப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது கிட்டத்தட்ட 1980-களில் சோவியத் ரஷியாவின் ராணுவம் கொண்டிருந்த திட்டங்களைப் போன்றது. சோவியத் ராணுவத்தில் அப்போது முப்படைகளும் போர்களை நடத்த சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது.
  • இறுதியாக, எதிர்காலப் போர்முறைகளின் இயல்பே வருங்காலத்தில் ராணுவ நவீநமயமாக்கலைத் தீர்மானிக்கும். 2019-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட சீன ராணுவ நெறிமுறைகள், தகவல் போரில் வெல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தன. எனினும், பிஎல்ஏ-வின் வியூகம் தற்போது அறிவாற்றல் போரில் தன்னை மேம்படுத்திக் கொள்வதில் இருப்பதாகத் தெரிகிறது.
  • தொழில்நுட்பரீதியான மேம்பாட்டிற்கு பிஎல்ஏ தயாராகிறது. இதற்காக, சீனாவின் அறிவியல் - தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்புகளுடன் பிஎல்ஏ இணைந்து செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம், ஒலியை விட அதிவேகமாக இயங்கும் ராக்கெட் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் போன்றவற்றில் பிஎல்ஏ கூடுதலான கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

நன்றி: தினமணி (15 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories