TNPSC Thervupettagam

நவீன உலகில் எப்படி இருக்க வேண்டும் நூலகம்

April 22 , 2023 582 days 364 0
  • மத, இன அடையாளங்கள், பாகுபாடுகள் இன்றி அனைவராலும் பாவிக்கப்படும் இடங்களில் நூலகம் மிக முக்கியமானது. வெறுமனே புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட இடமல்ல அது; அறிவாயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்குதான் நூலகம். மேம்பட்ட சமுதாயத்தின் அடையாளமும் அதுதான்!
  • வரலாற்றில் வெவ்வேறு இனக்குழுக்களிடையே போர்கள் மூண்டபோது தீக்கிரையாக்கப் பட்டது மனிதர்களும் உடைமைகளும் மட்டுமல்ல, நூலகங்களும்தான். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டரியா நூலகம், நம் காலத்தில் யாழ்ப்பாண நூலகம் என எத்தனையோ நூலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’யாக நூல்கள் விளங்குவதுதான் இந்த அழிப்புக்கு முக்கியக் காரணம்.

அடுத்த கட்டத்தை நோக்கி...

  • இந்திய விடுதலைக்கு முன்னதாகவே சென்னை மாகாணத்தில் நூலகத்துக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இன்றுவரை நம் நாட்டுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. செயற்கை நுண்ணறிவின் மேம்பாட்டால், சாட்ஜிபிடி போன்ற நிரல்கள் விரவிவரும் இக்காலகட்டத்தில், வாசகர்களுக்குப் பயன்கூட்டுவதற்கான வழிகளைப் பற்றி நூலகங்கள் ஆராய வேண்டும். புத்தகங்களைக் கடனாகக் கொடுப்பது, வாசகர் வட்டம் போன்ற பாரம்பரிய நடைமுறைகளைக் கடந்து அடுத்த கட்டத்தை நோக்கி நூலகங்கள் நகர்வது அவசியமாகிறது.
  • எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிவிரைவில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நேற்றைக்குக் கற்றது இன்றைக்குப் பொருளற்றதாகிவிடுகிறது. உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள் முன்னுள்ள மாபெரும் சவால், பள்ளி - கல்லூரிகளில் பாடத்திட்டங்களை எப்படி அமைக்க வேண்டும் என்பதே. 15-20 ஆண்டுகள் பள்ளி - கல்லூரிகளில் படித்துவிட்டு வரும்மாணவர்களின் எதிர் காலத்துக்கு, குறிப்பாக வேலைவாய்ப்புக்கு என்ன செய்வது என்பது இன்றைக்குள்ள பெரும் சவால்.
  • வளர்ந்த நாடுகளில், அடிப்படைக் கல்வியைத் தாண்டி, அறிவினைப் பெருக்கி, புதியனவற்றைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப் படுகின்றன. கல்வி நிலையங்கள் மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய மற்ற அமைப்புகளும் முழுமையாக இதில் ஈடுபட்டுள்ளன.
  • நூலகங்களில் திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் இளைய சமுதாயத்தை எதிர்காலத்துக்குத் தயார்படுத்த முடியும். நூலகங்கள் வாசிப்பு மையமாக மட்டுமின்றி கலை, பண்பாடு, திறன் பயிற்சி மையமாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

வழிகாட்டும் தேசங்கள்

  • பல்வேறு தரப்பினர் - வயதினருக்கு ஏற்ப பலவிதமான நிகழ்வுகளை நூலகங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். எழுத்தாளர்களுடன் சந்திப்பு, புத்தகக் குழுக்கள், காட்சிப் படங்கள் திரையிடல்கள், எழுத்து, வாசிப்புப் பயில ரங்குகள் எனப் பல வகைகளில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்க வேண்டும்‌. நூலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
  • மக்கள், குறிப்பாகக் குழந்தைகள் அதிக நேரத்தைச் செலவிட ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட அறைகள், வசதியான இருக்கைகள், கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் நூலகங்கள் விளங்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் போன்றவற்றைவிட மக்களை அதிகம் சுண்டியிழுக்கும் வகையில் அவை இருக்க வேண்டும். அச்சுப் புத்தகங்கள் தவிர, நவீனத் தொழில்நுட்பங்களான டிஜிட்டல், காணொளி, ஒலிப் புத்தகங்கள் என நூலகங்களை மேம்படுத்த வேண்டும்.
  • மேலே சுட்டிக்காட்டப்பட்டவை, நூலக அமைப்புகளில் உலகில் முதன்மையாகத் திகழும் பின்லாந்து, நார்வே, டென்மார்க், கனடா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளாகும். அந்நாடுகளில் உள்ள நூலகங்களோடு நம்முடைய நூலகங்களை இணைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இதன் மூலம் அங்குள்ள அறிவு வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

செய்ய வேண்டியவை

  • நாள்தோறும் உண்பதுபோல, மனிதர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் இன்றியமையாதது. அனைத்து வயதினருக்கும் துறையினருக்கும் அவர்களது தேவைகளுக்குத் தக்கவாறு கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியம். உதாரணமாக, கிராமத்திலுள்ள ஒரு நூலகம் அப்பகுதியில் இருக்கின்ற விவசாயிகளுக்கு, இன்றைக்கு அத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையிலே கல்விச் சாலையாகவும், அதேபோல அந்தப் பகுதியிலேயே படிக்கின்ற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொள்ளத் தேவையானவற்றைக் கற்றுத்தரும் அறிவுப் பூங்காவாகவும் விளங்க வேண்டும். இதற்கு அந்தந்தப் பகுதியிலுள்ள பள்ளிகள் - கல்லூரிகளோடு நூலகங்கள் இணைந்து செயல்படுவது அவசியமாகிறது.
  • உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியும். கட்டமைப்புக்குத் தேவையான நிதி ஆதாரங்களை அவர்களிடமிருந்து பெற முடியும். மேலும் நூலகத்தின் செயல்பாட்டை மக்களிடையே விரிவாக்கவும் ஈர்க்கவும் அவர்கள் உதவி புரிவர். மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயராக இருந்தபோது, ஒரு பெருமழைக் காலத்தில், தொற்றுநோய் பரவாமல் இருக்க, இதுபோன்ற தொண்டு நிறுவனங்களை இணைத்து ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தினார். அரசும் தொண்டு நிறுவனங்களும் எங்ஙனம் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு அது ஓர் உதாரணம்.
  • ஒரு நூலகத்தில் எடுக்கப்படும் புத்தகம், இன்னொரு நூலகத்தில் திருப்பிக் கொடுப்பதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் மென்பொருள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நூலகத்துக்கான தரமான புத்தகங்கள் பல்வேறு தளங்களைச் சார்ந்த தக்காரை நியமித்துத் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் இணையதளம் வழியாக அறிவிக்கப்பட வேண்டும். அந்நூலகத்து உறுப்பினர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பப்பட வேண்டும். இதன் மூலம் தங்கள் பகுதியிலிருக்கும் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் புதிதாக வந்துள்ளன என்று வாசகர்கள் தெரிந்துகொள்ள முடியும். அதுபோல குறிப்பிட்ட புத்தகத்தை வாசகர்களும் நூலகத்துக்குப் பரிந்துரைக்கலாம்.
  • வாசிப்பு என்பதை நம்முடைய உயிர் மூச்சாக மாற்றும் வகையில் அனைவரும் இணைந்து செயல்படும் போது, அறிஞர்கள் நிறைந்த மாநிலமாகத் தமிழ்நாடு விரைவில் தழைத்தோங்கும்!

நன்றி: தி இந்து (22 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories