TNPSC Thervupettagam

நவ​தா​ராளமய​மாகும் சூழலியல் சட்டங்கள்

September 17 , 2024 120 days 255 0

நவ​தா​ராளமய​மாகும் சூழலியல் சட்டங்கள்

  • மத்திய அரசின் சுற்றுச்​சூழல் அமைச்​சகம், காற்று, நீர் மாசு தடுப்புச் சட்டங்​களில் பல திருத்​தங்களை முன்வைத்து சட்ட வரைவுகளைக் கருத்துக் கேட்புக்காக வெளியிட்​டுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்​களைப் பறிக்கும் இந்தத் திருத்​தங்கள் நவதாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்​படுத்தும் வகையில் வரையப்​பட்​டுள்ளன.

தளர்த்​தப்​படும் கட்டுப்​பாடுகள்:

  • எந்த ஒரு தொழிற்​சாலையும் செயல்​பாட்டுக்கு வருவதற்கு முன்பாக மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்பதே தற்போதைய நடைமுறை. இந்த அனுமதிகள் பல்வேறு ஆய்வுகள், சட்டவி​திகளை உள்ளடக்​கியதாக இருக்​கும்.
  • மத்திய சுற்றுச்​சூழல் அமைச்​சகம், சுற்றுச்​சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் மூலமும், மாநில அரசுகள் காற்று (மாசுபாடு தடுப்பு - கட்டுப்​பாடு) சட்டம் 1981, நீர் (மாசுபாடு - கட்டுப்​பாடு) சட்டம் 1974 ஆகிய இரண்டு சட்டங்கள் மூலமும், தொழிற்​சாலைகளுக்கான முன்அனு​ம​திகளை வழங்கு​கின்றன.
  • குறிப்பாக, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியம், தொழிற்​சாலையை நிறுவுவதற்கான இசைவு ஆணை, இயக்கு​வதற்கான இசைவு ஆணை, இசைவு ஆணைகளைப் புதுப்​பிப்பது, ரத்துசெய்வது, மறுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்​கிறது. இந்த அதிகாரங்​களைக் கொண்டுதான் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களை மாநில அரசு மூடியது. அதேபோல காவிரி டெல்டா வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்​கப்​பட்​டதற்கும் இந்தச் சட்டங்களே காரணமாக அமைந்தன.
  • மாநில அரசுகளின் இந்த அதிகாரங்​களைப் பறிக்​கின்ற வகையில் தற்போதைய சட்ட வரைவுகள் கொண்டு​வரப்​பட்​டுள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் சுற்றுச்​சூழல் அனுமதி ஆணையிலேயே மாநில அரசின் அனுமதி​களும் இடம்பெற வைக்க இந்தத் திருத்​தங்கள் முயல்​கின்றன. மேலும், மாநில அரசின் அனுமதிகளை வழங்குவது - மறுப்​ப​தற்கு உண்டான அதிகாரங்​களையும் மத்திய அரசே முடிவுசெய்யும் எனத் திருத்​தங்கள் கூறுகின்றன.
  • மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைத் தேர்ந்​தெடுக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில் மற்றுமொரு சட்ட வரைவையும் மத்திய சுற்றுச்​சூழல் அமைச்சகம் வெளியிட்​டுள்ளது. இந்த வரைவில், மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைத் தேர்ந்​தெடுக்கும் குழுவில், மத்திய சுற்றுச்​சூழல் அமைச்சக அதிகாரி இடம்பெறுவார் எனக் கூறப்​பட்​டுள்ளது. இதன் மூலம், மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் பணிகளை மறைமுக​மாகக் கட்டுப்​படுத்த மத்திய அரசு முயல்​கிறது.
  • வெள்ளை நிற வகைப்பாடு கொண்ட தொழில் நடவடிக்கைகள் அனைத்​தையும் நிறுவுவதற்கான இசைவு ஆணை பெறுவ​திலிருந்து முற்றிலும் விலக்​களிக்கும் திருத்​தமும் உள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 36 வகையான தொழிற்​சாலைகளை வெள்ளை நிறத் தொழிற்​சாலைகளாக வகைப்​படுத்​தி​யுள்ளது. இவற்றுக்கு இனி மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி தேவை இருக்​காது.

‘தேவை’க்கு ஏற்ப மாற்றம்:

  • மாநில அரசுகளின் சுற்றுச்​சூழலியல் சட்ட அதிகாரங்களை ஏன் மத்திய அரசு பறிக்க முயல்​கிறது? 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த உடன், டி.எஸ்​.ஆர்​.சுப்​ரமணியன் தலைமை​யில், இந்தியச் சூழலியல் சட்டங்களை ஆய்வுசெய்ய உயர்மட்டக் குழு அமைக்​கப்​பட்டது. சுற்றுச்​சூழல் பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம், காற்று (மாசுபாடு தடுப்பு - கட்டுப்​பாடு) சட்டம், நீர் (மாசுபாடு - கட்டுப்​பாடு) சட்டம், இந்திய வனச் சட்டம் ஆகிய ஆறு சூழலியல் சட்டங்களை ‘தற்போதைய தேவை’க்கு (நவதா​ராளமயம்) ஏற்ப ஆய்வுசெய்வதே குழுவின் நோக்க​மாகக் கூறப்​பட்டது.
  • தேசியச் சுற்றுச்​சூழல் மேலாண்மை ஆணையம் என்கிற புதிய அமைப்பை உருவாக்க இக்குழு பரிந்துரை செய்தது. அதாவது, வன அனுமதி, சுற்றுச்​சூழல் அனுமதி, மாசுக் கட்டுப்பாடு அனுமதி, கடலோர ஒழுங்​காற்று அனுமதி ஆகிய அனுமதி​களைப் பெறத் தனித்​தனியாக உள்ள தற்போதைய நடைமுறையை மாற்றி, ஒற்றை அமைப்பு மூலம் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறியது. சுருக்கமாக ‘ஒரே நாடு, ஒரே அனுமதி’ முறை. இதன் மூலம் ‘சுதந்திர வர்த்​தகம்’ சுதந்​திர​மாகச் செயல்​படும் என்பது இதன் பின் உள்ள அரசியல். 2015ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக் குழுவால் இந்தப் பரிந்​துரைகள் நிராகரிக்​கப்​பட்டன.
  • ஆனால், பாரதிய ஜனதா அரசு, சுப்பிரமணியன் குழுவின் பரிந்​துரையை மறைமுக​மாகத் தொடர்ந்து நடைமுறைப்​படுத்தி வருகிறது. குறிப்பாக, 2020இல் சுற்றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டுச் சட்டவி​தி​களில் பல மாற்றங்​களைக் கூறியது. மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த விதிகள் நடைமுறைப்​படுத்​தப்படவில்லை. ஆனால், தனித்​தனித் திருத்​தங்களாக இன்றுவரை சுற்றுச்​சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மாற்றப்​பட்டு வருகின்றன.
  • இந்தத் திருத்​தங்கள் சுற்றுச்​சூழல் பாதுகாப்பில் மக்களின் கருத்துக் கூறும் உரிமையை மறுக்​கின்றன. தேசிய அளவில் முக்கி​யத்துவமான திட்டங்​களுக்கு மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று தற்போது மாற்றப்​பட்​டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் மூலம் பழங்குடிகளிடம் கருத்துக் கேட்கும் உரிமை மறுக்​கப்​பட்டது.

அதிகரிக்கும் ஆபத்து:

  • தடையற்ற வர்த்தகச் செயல்​பாடுகள் இருக்கும் வண்ணம் அரசுகளின் செயல்​பாடுகள் இருக்க வேண்டும் என நவதாராளமயக் கொள்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, பெருநிறு​வனங்கள் தங்களுக்குத் தேவையான கனிமங்​களைச் சுரண்டு​வதை​யும், உற்பத்​தியைப் பெருக்கு​வதை​யும், சூழலியல் பார்வையில் கட்டுப்​படுத்தக் கூடாது என மறைமுகமாக அறிவுறுத்து​கிறது.
  • காலநிலை மாற்றப் பாதிப்பு​களில் இருந்து நம்மைத் தற்காத்​துக்​கொள்ள சுற்றுச்​சூழல் அமைப்பு​களைப் பாதுகாக்க வேண்டும் என சர்வதேச நாடுகளுக்கு இடையிலான காலநிலை மாற்றக் குழு கூறுகிறது. இதனைச் சூழலியல் பாதுகாப்புச் சட்டங்​களைக் கொண்டுதான் நிறைவேற்ற முடியும்.
  • நாட்டின் இயற்கை வளப் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் சென்று சேர்கின்ற வகையில், அரசின் செயல்​பாடுகள் இருக்க வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 39 (b) கூறுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள 1 சதவீத மக்கள், 40 சதவீத வளங்களைக் கட்டுப்​படுத்து​கின்றனர் என (World Inequality Lab, March, 2024) ஓர் ஆய்வு கூறுகிறது. மத்திய அரசின் புதிய சட்ட வரைவுகள் இந்த நிலையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories