TNPSC Thervupettagam

நாடகமே வாழ்க்கை...

June 12 , 2019 1985 days 1293 0
  • கலையுலகைப் பொருத்தவரை கடந்த திங்கள்கிழமை ஒரு கருப்பு தினம். இரண்டு மாபெரும் கலைஞர்களை இந்தியா இழந்திருக்கிறது. அந்த இரண்டு கலைஞர்களுமே சென்னையுடன் தொடர்புடையவர்கள் என்பதால் தமிழகத்தின் துக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது.
நாடக மேடை
  • திரைப்படமும், தொலைக்காட்சியும், இணையமும், யூ டியூப் சேனல்களும் பிரபலமாகிவிட்ட நிலையிலும் நாடக மேடையில் ஒருவரால் தனது திறமையின் அடிப்படையில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நிரூபித்ததுதான் கிரேஸி மோகன் என்கிற கலைஞரின் மிகப்பெரிய சாதனை. நாடக நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று மேடையிலும், திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் வெற்றி பவனி வந்தவர்  கிரேஸி மோகன்.
  • பொறியியல் பட்டதாரியான அவர் நாடக ஆசிரியரானது எதிர்பாராத திருப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் நாடகக் கதாசிரியராக மாறிய பிறகு, நாடக மேடைகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாக அவர் வலம் வந்தது எதிர்பாராதது அல்ல. அவரது நாடகங்களைத் துணுக்குத் தேரணங்கள் என்று விமர்சித்தவர்கள்கூட, அவரது வசனங்களைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகத்தில் தொடங்கி மாது மிரண்டால், சாக்லேட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது என்று தனது இறுதிக் காலம் வரை  பல்லாயிரம் முறை தனது நாடகங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தியிருக்கும் அவரது சாதனையை முறியடிக்க, இனியொரு  கிரேஸி மோகன் பிறந்து வந்தால் மட்டுமே முடியும்.
கிரேஸி மோகன்
  • நாடக உலகில் கோலோச்சியவர்கள் திரையுலகில் வெற்றியடைவது கடினம். 80 களுக்குப் பிறகு சினிமா என்பது மேடைத்தனத்தில் இருந்து விடுபட்டு திரை மொழியாக மாறிவிட்டது. 1983-இல் அவரது மேரேஜ் மேட் இன் சலூன் நாடகம் இயக்குநர் கே.பாலசந்தரால் பொய்க்கால் குதிரை என்று திரை வடிவம் பெற்றதன் மூலம் வசனகர்த்தாவாக கிரேஸி மோகன் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவருடைய வசனத்தில் மிளிர்ந்த  மகளிர் மட்டும், வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்ச தந்திரம், மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம், அபூர்வ சகோதரர்கள், அருணாசலம், காதலா காதலா, அவ்வை சண்முகி, சதி லீலாவதி, தெனாலி உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோகன் முக்கியமான காரணம் என்பதை அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும், ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
கிரீஷ் கார்னாட்
  • நகைச்சுவை நாயகன் கிரேஸி மோகன் என்றால், பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும்போது 1961-இல் கிரீஷ் கார்னாட் எழுதிய படைப்பு யயாதி. தனது 20-ஆவது வயதிலேயே யயாதி, துக்ளக் என்கிற இரண்டு நாடகங்களைப் படைத்துத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர்.
  • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கிரீஷ் கார்னாட், வேலை தேடி வந்த இடம் சென்னை. சென்னையிலுள்ள ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் 1963 முதல் 1970 வரை பணியாற்றிய பிறகு, தனது பணியைத் துறந்து சென்னையிலிருந்த மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார் அவர். நாடக உலகில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியது துக்ளக் என்கிற அவரது 13 காட்சி நாடகம்.
  • இன்றுவரை இந்திய நாடக வரலாற்றில், கிரீஷ் கார்னாட்டின் துக்ளக் நாடகம் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அவரது நாடகங்களான ஹயவதனாவும், நாகமண்டலாவும் கன்னடத்தின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. நாடகக் கலைஞராக இருந்த கிரீஷ் கார்னாட், தேசிய அளவில் பரவலாக அறியப்பட்டது திரையுலகில் அவர் அடியெடுத்துவைத்த பிறகுதான். வணிக நோக்கமற்ற கலைப் படங்கள் வெளிவரத் தொடங்கிய 70 களில் திரையுலகில் திரைக்கதை வசனகர்த்தாவாக சம்ஸ்காரா திரைப்படத்தின் மூலம் நுழைந்தார் கிரீஷ் கார்னாட்.
  • மன்தான் ஹிந்தி படத்தில் நடிகராகவும், வம்ச விருக்ஷா, காடு, உத்சவ் திரைப்படங்களில் இயக்குநராகவும் கிரீஷ் கார்னாட் மாற்று சினிமாவின் தனித்துவ ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
  • நடிகராகவும், இயக்குநராகவும் கிரீஷ் கார்னாட் அறியப்படுவதைவிட, இந்திய நாடக மேடையில் புரட்சியை ஏற்படுத்திய படைப்பாளியாகத்தான் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார். பதல் சர்க்கார், ஹபீத் தன்வீர், விஜய் டெண்டுல்கர், சி.என்.ஸ்ரீகண்ட நாயர், நாராயண பணிக்கர், மோகன் ராகேஷ் ஆகியோரைப்போல கிரீஷ் கார்னாட்டும் இந்திய நாடகத் துறையில் தனி முத்திரை பதித்தவர். அவரது திப்பு சுல்தானின் கனவு (தி ட்ரீம்ஸ் ஆப் தி திப்பு சுல்தான்) வரலாற்றுடனும், நிகழ்கால அரசியலுடனும் பின்னிப் பிணைந்த அற்புதமான நாடகம். வெளியுலகுடன் ஆங்கிலத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாலும் கடைசி வரை தனது தாய் மொழியான கன்னடத்தில்தான் தனது படைப்பிலக்கியப் பணிகளை மேற்கொண்டார் அவர் என்பது அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது.
விருதுகள்
  • ஞான பீட விருது, பத்ம பூஷண் விருது என்று தலைசிறந்த விருதுகளைப் பெற்ற கிரீஷ் கார்னாட்டின் மறைவும், தமிழக மக்களின் மனதில் நகைச்சுவை சிம்மாசனம் போட்டு அமர்ந்த கிரேஸி மோகனின் மறைவும் ஈடுசெய்ய முடியாத நாடக மேடை இழப்புகள்.  நாடகம் தான் அவர்கள் இருவருக்குமே வாழ்க்கையாக இருந்தது. வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று அவர்களது மரணம் தனது முடிவுரையை எழுதியிருக்கிறது.

நன்றி: தினமணி (12-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories