- மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு சட்டத்துக்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது? இது குறித்து முன்மாதிரித் தீர்ப்புகள் என்ன கூறுகின்றன?
- இதுவரையில்: உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதோடு, போராடும் விவசாயிகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு ஒன்றையும் நியமித்தது (அக்குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்ட புபீந்தர் சிங் மன் தாமாகவே விலகிக்கொண்டுவிட்டார்).
- உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிலரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, இடைக்காலத் தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகளால் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்திவைப்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
- சட்டமியற்றும் அவையால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்காலத் தடைவிதிப்பது வழக்கமில்லை என்று அட்டர்னி ஜெனரல் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், சட்டங்களின் செல்லும் தன்மையைத் தீர்மானிக்கும் தமது உரிமையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்த தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் எவ்வாறு நியாயப்படுத்தியுள்ளது?
- ‘இயற்றப்பட்ட சட்டத்தின்படி மேற்கொள்ளப்படும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையையும் இடைநிறுத்தி வைக்கும் அதிகாரம் முழுமையாக இல்லை என்பதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது’ என்று உச்ச நீதிமன்றத்தின் அமர்வு தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
- சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்தல் என்பதற்கும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அல்லது அச்சட்டத்தின் கீழான எந்தவொரு நடவடிக்கைக்கும் தடைவிதித்தல் என்பதற்கும் இடையில் வேறுபாட்டை உருவாக்குவதே இதற்கான அர்த்தம் என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.
- எப்படியிருந்தாலும் இவற்றின் விளைவுகள் இரண்டுமே ஒன்றுதானே, நீதிமன்ற உத்தரவின் காரணமாகச் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் அரசு தடுக்கப்படுகிறதே என்று சிலர் விவாதிக்கக்கூடும்.
- மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் செப்டம்பர் 2020-ல் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு பிறப்பித்த உத்தரவையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
- 2020-21 கல்வியாண்டுக்கான கல்வி நிறுவனச் சேர்க்கைகளிலும் அரசுப் பணிகளுக்கான நியமனங்களிலும் தொடர்புடைய சட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்று அந்த அமர்வு உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு, அரசமைப்புச் சட்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- எனினும், மராத்தா இடஒதுக்கீடு வழக்கில், இயற்றப்பட்ட ஒரு சட்டமானது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகக் காணப்பட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மாறாக அமைந்தாலோ இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம் என்றுதான் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
- இந்திரா சஹானி வழக்கில் (1992) நிர்ணயிக்கப்பட்ட உச்ச அளவான 50%-ஐ மீறும் வகையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அந்த அமர்வு, உச்ச வரம்பை மீறியதை நியாயப்படுத்தும் வகையில் மஹாராஷ்டிர அரசு எந்தவொரு அசாதாரணச் சூழலையும் காரணமாகக் காட்டவில்லை என்றும் கூறியது.
- தற்போது, வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இடைக்காலத் தடையானது விவசாயிகளின் காயப்பட்ட உணர்வுகளைச் சாந்தப்படுத்தி அவர்களைச் சமாதானப் பேச்சுக்கு அழைத்துவர உதவுவதற்கானது என்றே உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இயற்றப்பட்ட சட்டத்தை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன?
- இயற்றப்பட்ட சட்டங்களின் செல்லும் தன்மையை அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்கத் தீர்மானிக்கும் விரிவான கட்டமைப்பின் கீழ், உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் எந்தவொரு சட்டத்தையும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
- இயற்றப்பட்ட ஒரு சட்டமானது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகவோ, (அல்லது அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவுக்கும் மாறானதாகவோ) அல்லது எந்தவொரு அடிப்படை உரிமையையும் மீறுவதாகவோ அல்லது ஒரே பொருள் குறித்த விஷயத்தில் மத்திய சட்டத்துக்குப் பொருந்தாமையின் காரணமாகச் செல்லும் தன்மையை இழந்ததாகவோ அல்லது சட்டமியற்றுவதற்கு அதிகாரமில்லாத துறைகளில் இயற்றப்பட்ட சட்டமாகவோ இருந்தால், நீதிமன்றம் அதைச் செல்லாததாக அறிவிக்கும்.
- எனினும், சட்டமியற்றும் அவைகளால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்காலத் தடைவிதிப்பதோ அல்லது இடைநீக்கம் செய்வதோ அரசமைப்புச் சட்ட நீதிமன்றங்களாலும் சட்ட வல்லுநர்களாலும் விரும்பப்படுவதில்லை.
- அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லும் தன்மையற்றது என்பது வெளிப்படையாகத் தெரிவது அல்லது சட்டமியற்றுவதற்கான அதிகாரம் இல்லாதது (அதாவது, தொடர்புடைய சட்டமியற்றும் அமைப்பு குறிப்பிட்ட ஒரு பொருள் குறித்துச் சட்டமியற்றுவதற்கான வரம்பெல்லையைப் பெற்றிருக்காத நிலை) என்பது போன்ற கட்டாயமான காரணங்களின்றி ஒரு சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படக் கூடாது என்பதே பொதுவான வாதம்.
ஒரு சட்டத்தையோ அல்லது அதை நடைமுறைப் படுத்துவதையோ நீதிமன்றம் இடைநிறுத்துவது ஏன் அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது?
- சட்டமியற்றும் அவையால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை இடைநீக்கம் செய்வது அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதே முதன்மையான காரணம். சட்டத்தின் செல்லும் தன்மை குறித்த ஒரு பிரச்சினையின் ஆரம்ப நிலையில், சட்டமியற்றும் அவையின் நிலைப்பாடு குறித்துத் தமது கருத்துகளைத் தெரிவிப்பதைச் சற்றே தாமதப்படுத்த வேண்டும் என்றே நீதிமன்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- சட்டத்தின் செல்லும் தன்மையானது, பொதுவாக இறுதித் தீர்ப்பின்போது முடிவுசெய்யப்பட வேண்டுமேயன்றி ஆரம்ப நிலையில் அல்ல. இரண்டாவது காரணம், எந்தவொரு சட்டமியற்றும் அவையாலும் இயற்றப்பட்ட ஒவ்வொரு சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு இணக்கமானது, செல்லும் தன்மை கொண்டது என்னும் அனுமானமாகும்.
- அவ்வாறு இல்லை என்று கூறுபவர்களே அதை நிரூபிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். எனவே, ஒரு சட்டத்தை இடைநீக்கம் செய்யக் கோரும் மனுக்களை விசாரிக்கும் நிலையில், விரிவான தீர்ப்பு கூறுவதற்கு முன்னால் நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இடைக்கால நிலையில் நீதித் துறையின் குறுக்கீட்டுக்கு எதிராகக் குறிப்பிடப்படும் முன்மாதிரித் தீர்ப்புகள் என்னென்ன?
- சில சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றங்கள் இடைக்காலத் தடைவிதித்திருக்கின்றன என்றாலும் உச்ச நீதிமன்றம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
- நகராட்சி வரியை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை 1984-ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. (சிலிகுரி நகராட்சி மற்றும் பிறர் எதிர். அமலேந்து தாஸ் மற்றும் பிறர்) மற்றும்
- 2013-ல், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் (விளம்பரங்களுக்கான தடை மற்றும் வணிகம், வியாபாரம், தயாரிப்பு, அளிப்பு, விநியோகம் ஆகியவற்றுக்கான ஒழுங்குமுறைகள்) சட்டம் 2013-ன் சில பிரிவுகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் உச்ச நீதிமன்றம் நீக்கியது.
- (ஹெல்த் பார் மில்லியன்ஸ் அறக்கட்டளை எதிர். ஒன்றிய அரசு) இரண்டாவது வழக்கில், ‘குறிப்பிட்ட அந்தச் சட்டம் அல்லது விதிமுறைகளானவை வெளிப்படையாக அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருத்தல்; வழக்கு முடியும்வரை அதே நிலை நீடிப்பதே சரியானது, இயற்றப்படுகிற சட்டம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குக் காரணமாவது போன்ற நிலைகள்; இடைக்காலத் தடை விதிப்பது நியாயமானது எனக் கொள்ளத்தக்க பொதுநலன்கள் ஆகியவற்றில் நீதிமன்றம் முழுமையாகத் திருப்தியடைந்தாலன்றி இடைக்காலத் தடை விதிக்கும் உத்தரவுகளால் சட்டப் பிரிவுகளை அபத்தமாக்கிவிடக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
- ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்படாத தனியார் நிதி நிறுவனங்கள் பொது வைப்புகளை ஏற்றுக்கொள்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 45எஸ்-ஸின் செல்லும் தன்மையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், அந்தப் பிரிவுக்குச் சில உயர் நீதிமன்றங்கள் விதித்த இடைக்காலத் தடையை விமர்சித்தது.
- ‘இயற்றப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இடைக்காலத் தடை கோரும் ஒரு விண்ணப்பத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பொருளாதாரச் சீர்திருத்தம் அல்லது மாற்றத்தின்போதும்கூட, அந்தச் சட்டப் பிரிவானது வெளிப்படையாகவே நியாயமற்றதாகவோ அல்லது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாகவோ தோன்றுகிறதா என்று நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- அவை பொருந்தும்பட்சத்தில், நீதிமன்றங்கள் நீதித் துறைக் கட்டுப்பாடுகளின் வழியாக அவற்றை இடைநிறுத்தி வைக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் கூறியது. (பவேஷ் டி.பரீஷ் மற்றும் பிறர் எதிர். ஒன்றிய அரசு, 2000).
நன்றி: இந்து தமிழ் திசை (19 - 01 - 2021)