TNPSC Thervupettagam

நாடாளுமன்றம் என்பது கட்டிடம் மட்டுமா?

May 26 , 2023 549 days 370 0
  • நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் தேவைதான். இப்போதுள்ள கட்டிடம் 1927இல் கட்டப்பட்டது. இரு அவைகள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு எனத் திட்டமிட்டு அது கட்டப்படவில்லை. தற்போது டெல்லியில் பூகம்ப ஆபத்து அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு வசதிகொண்டதாகவும் தற்போதைய கட்டிடம் இல்லை. 2026இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், கடந்த 50 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம். அதற்கேற்ற இடவசதி தற்போதைய கட்டிடத்தில் இல்லை – இவை எல்லாமே உண்மைதான்.
  • நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் தேவை என்பதற்குச் சபாநாயகர்களாக இருந்த மீரா குமாரும் சுமித்ரா மகஜனும் சொன்ன காரணங்களும்கூட மறுக்க முடியாதவைதான். ஆனால், நாடாளுமன்றம் என்பது வெறும் கட்டிடமோ இட வசதியோ அல்ல. அது நமது ஜனநாயக ஆட்சிமுறையின் ஆன்மா; அதை நாம் மறந்துவிடக் கூடாது!

நாடாளுமன்ற மாற்றங்கள்

  • தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில், நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1956இல் இரண்டு தளங்கள் கட்டப்பட்டன; 2006இல் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. ஒருபுறம் நாடாளுமன்றக் கட்டிடத்தை இப்படி வலிமைப்படுத்திக்கொண்டு இன்னொருபுறம் நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பலவீனப்படுத்தும் வேலையை நமது ஆட்சியாளர்கள் செய்துவந்தனர். அதன் உச்சகட்டமாக நெருக்கடிநிலை அறிவிப்பு அமைந்தது.
  • நெருக்கடிநிலைக் காலத்து அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட தலைவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வந்தபோது அவர்கள் பெற்ற படிப்பினைகள் நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு உதவும் என நினைத்தோம். ஆனால், அதிகாரத்துவ வன்முறையை நிராகரிப்பதற்குப் பதிலாக, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலைக்கு நாட்டை இப்போது கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

அழைக்கப்படாத குடியரசுத் தலைவர்

  • இந்திய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றம் குறித்து உறுப்பு 79இல் விளக்கியிருக்கிறது: ‘இந்திய ஒன்றியத்துக்கு நாடாளுமன்றம் ஒன்று இருக்கும். அதில் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை ஆகியவை இடம்பெற்றிருக்கும்’. நமது நாடாளுமன்றம் பிரதமர் இல்லாமல் செயல்பட முடியும்.
  • ஆனால், குடியரசுத் தலைவர் இல்லாமல் செயல்பட முடியாது. ஏனென்றால், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதன் கூட்டத்தை முடித்துவைப்பதற்கும் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. அது மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான் சட்டம் என்ற அங்கீகாரத்தைப் பெற முடியும்.
  • நம்முடைய அரசமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவரைத்தான் நாடாளுமன்ற ஜனநாயக முறையின் தலைவராக நிர்ணயித்துள்ளது. அத்தகைய தனிச் சிறப்புரிமைகொண்ட குடியரசுத் தலைவரை அழைக்காமலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பது அவரை அவமதிப்பது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானதாகும். ‘பழங்குடி சமூகத்தைச் சேந்தவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டோம்’ என அரசியல் ஆதாயம் தேடிய பாஜக, இப்போது அவரைப் புறக்கணித்திருப்பதும் அவர் பழங்குடிச் சமூகத்தவர் என்பதால்தானா என்ற கேள்வி எழுகிறது.
  • நாடாளுமன்றம் என்றால் மக்களவை மட்டுமல்ல; மாநிலங்களவையும் சேர்ந்ததுதான். மாநிலங்களைவைத் தலைவரின் பெயரும் அழைப்பில் இடம்பெறவில்லை. குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பதால் அவர் பெயர் இடம்பெற்றால், குடியரசுத் தலைவரின் பெயரையும் போட வேண்டும் என்பதால்தான் அவரும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் போலும்.

நாடாளுமன்றத்தில் பிரதமர்

  • நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் கட்டியதை உலக சாதனை என பாஜகவினர் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், பாஜகவின் ஆட்சியில்தான் நாடாளுமன்றம் என்ற அமைப்பு மிக மோசமாகப் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி, பிரதமராக முதல் முறை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தபோது, நெற்றி நிலத்தில்பட அதை வணங்கினார். கோயிலுக்குச் செல்வதுபோல அவர் தினமும் அங்கே போவார் என நினைத்தோம். ஆனால், நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அவர் நாத்திகராகிவிட்டார்.
  • அதுமட்டுமல்ல... 2014 முதல் 2023 பிப்ரவரி வரை 24 முறைதான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் பேசுவது கட்டாயமாகும். அது தவிர, ஒன்றிரண்டு முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்கிறார்.

பாஜகவின் அரசியல்

  • சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான விதிமுறையைத் தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தது இந்த பாஜக அரசுதான். அவையில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கங்கள்தான் அவசரச் சட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்றுவது வழக்கம். ஆனால், 300க்கு மேல் உறுப்பினர்கள் இருந்தும்கூட இந்த அரசு மிக அதிகமாக அவசரச் சட்டங்களைப் பிறப்பித்துள்ளது.
  • அது மட்டுமின்றி மாநிலங்களவையில் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகப் ‘பண மசோதா’ என்ற பெயரில் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. வரிவிதிப்பு, செலவு தொடர்பான மசோதாக்கள் மட்டுமே பண மசோதா என வகைப்படுத்தப்படும். அந்த வகைக்குள் வராத மற்ற மசோதாக்களையும்கூட பண மசோதாவாக பாஜக அரசு நிறைவேற்றுகிறது. ஆதார் மசோதா அப்படித்தான் நிறைவேற்றப்பட்டது.
  • நாடாளுமன்ற நிலைக் குழுக்களும் அர்த்தம் அற்றவையாக ஆக்கப்படுகின்றன. சட்ட மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு அனுப்ப மறுப்பது, அப்படியே அனுப்பினாலும் அங்கு முன்வைக்கப்படும் திருத்தங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது இந்த அரசின் வழக்கமாக உள்ளது.
  • ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கும் நிறைவேற்றப்படுவதற்கும் இடையில் இரண்டு நாள்களாவது கால அவகாசம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலேயே நிறைவேற்றப்பட்டன; அல்லது அடுத்த நாளில் நிறைவேற்றப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றுவது என்பது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது. நிதிநிலை அறிக்கையைக்கூட எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றிய ‘சாதனை’ இந்த அரசுக்கே உண்டு.
  • மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, செயற்கையாகப் பெரும்பான்மையை உருவாக்குதல்; ஒரே ஒரு உறுப்பினர் கோரினாலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற விதிக்கு முரணாக வாக்கெடுப்புக்கான கோரிக்கையை நிராகரித்தல் என நாடாளுமன்ற விதிகள், மரபுகள் வெளிப்படையாகவே இந்த அரசால் மீறப்படுகின்றன. இப்படி நாடாளுமன்றம் என்ற அமைப்பைப் பலவீனப்படுத்திக்கொண்டு, வலுவாகக் கட்டிடம் கட்டியிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் ஜனநாயகத்துக்கு என்ன பயன்?

பாஜகவின் செய்தி

  • நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நாள் சாவர்க்கரின் பிறந்த நாளாகும். இந்த விழாவுக்கு அவரது பிறந்தநாளைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் பாஜக என்ன செய்தியை நாட்டுக்குச் சொல்ல விரும்புகிறது? தாங்கள் பயணிக்க விரும்புவது ஜனநாயகப் பாதை அல்ல என்பதையா? நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, “இந்திய ஜனநாயகம் ஏற்கெனவே இறந்துவிட்டது, அது இப்போது புதைக்கப்படுகிறது” என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரணஜித் குஹா வர்ணித்தார். அப்படி சாகடிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட ஜனநாயகம், புத்துயிர் பெற்று தழைக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அதைப் புதைகுழிக்கு அனுப்ப யார் முயன்றாலும் இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

நன்றி: தி இந்து (26 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories