TNPSC Thervupettagam

நாடாளுமன்றம்: நம்பிக்கையைத் தக்கவைத்தல்

September 20 , 2023 348 days 211 0
  • ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR), தேசியத் தேர்தல் கண்காணிப்பகம் (NEW) ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலின் போது அவர்கள் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • மக்களவை, மாநிலங்களவை என இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மொத்தம் உள்ள 776 இடங்களில், தற்போது பதவியில் உள்ள 763 உறுப்பினர்களின் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, குற்றப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கின்றன.
  • மக்களவையில் நான்கு இடங்களும் மாநிலங்களவையில் ஓர் இடமும் காலியாக உள்ளன; ஜம்மு-காஷ்மீரில் 4 மாநிலங்களவை இடங்கள் வரையறுக்கப்படவில்லை. மக்களவையில் ஒன்று, மாநிலங்களவையில் மூன்று என நான்கு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் கிடைக்காததால், அவர்களைப் பற்றிய தகவல்கள் இந்த ஆய்வில் இடம்பெறவில்லை.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களில், 81 வயதைக் கடந்துவிட்டவர்கள் 6 பேர்; பெரும்பான்மை உறுப்பினர்கள் 51-70 வயதுக்கு உள்பட்ட பிரிவில் உள்ளனர். உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்டு ‘இளமையான’ நாடாக உள்ள இந்தியாவில், 25-30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்களில், வெறும் 9 பேர் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர் என்பது கவலைதரும் செய்தி.
  • கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் 54 பேர்; பட்டதாரிகளாக 184 பேரும் தொழில்முறைப் படிப்புகளை முடித்தவர்கள் என 141 பேரும் உள்ள நிலையில், பட்டயக் கல்வி முடித்தவர்கள் 22 பேர். பள்ளிக் கல்வி அளவில், 89 பேர் 12ஆம் வகுப்பும் 51 பேர் பத்தாம் வகுப்பும் நிறைவுசெய்தவர்கள். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38.33 கோடி; அவர்களில் 53 பேர் (7%) நூறு கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புள்ள பெரும்பணக்காரர்கள் ஆவர்.
  • வயது, கல்வி சார்ந்த தகவல்கள் ஒருபுறம் சுவாரசியம் அளித்தால், உறுப்பினர்களின் குற்றப் பின்னணி சார்ந்த தரவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர்களில், 306 பேர் (40%) மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது; 194 பேர் (25%) மீது தீவிரக் குற்றவியல் வழக்குகள் உள்ளன. 32 உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி (இ.த.ச. பிரிவு 307) வழக்கு உள்ளது. 21 உறுப்பினர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன; இந்த 21 பேரிலும் நான்கு பேர் மீது பாலியல் வன்கொடுமை (இ.த.ச. பிரிவு 376) வழக்கு உள்ளது.
  • நாடு அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. “நாடாளுமன்றத்தின் மீது சாதாரண மக்களின் நம்பிக்கை வளர்ந்திருப்பது மிகப்பெரிய சாதனை” என நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
  • அந்த வகையில், குற்றப் பின்னணி இல்லாதவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நாடாளுமன்றத்தின் மீதான தங்கள் நம்பிக்கையைச் சாதாரண மக்கள் மேலும் வளர்த்தெடுக்க முடியும். நாளைய தேவையும் அதுவே!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories