TNPSC Thervupettagam

நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பது கூட்டுப் பொறுப்பு

December 25 , 2023 392 days 249 0
  • நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவல், அதுதொடர்பான அமளி, நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் எனப் பல எதிர்மறை அம்சங்களுடன், பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. டிசம்பர் 4 அன்று தொடங்கிய இந்தக் கூட்டத்தொடர், ஒரு நாள் முன்னதாகவே டிசம்பர் 21 அன்று முடிக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய புகாரில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதியிழப்பு செய்யப்பட்டது, தொடக்க நாள்களிலேயே பெரும் கவனம் குவித்தது. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட டிசம்பர் 13 அன்று, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட அத்துமீறல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 146 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தக் கூட்டத்தொடரில், மக்களவையில் 74% வேலை நேரத்தில் அலுவல்கள் நடைபெற்றன என்றும், மாநிலங்களவை 79% உற்பத்தித் திறனுடன் இயங்கியது என்றும் பதிவாகியிருக்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய மசோதாக்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டன. காலனியாதிக்க காலச் சட்டங்களுக்கு மாற்றாக, இந்தப் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்திருக்கிறது.
  • ஆனால், புதிய சட்டத்தில் மிகச் சிறிய அளவிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா மூலம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மாற்றாகப் பிரதமர் பரிந்துரைக்கும் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெறுவர் என்னும் மாற்றம் அமலாகிறது. இது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன. பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லை. கருத்தியல்ரீதியாகத் தாங்கள் எதிர்க்கும் மசோதாக்களை நிறைவேறவிடாமல் செய்வதுதான் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வசம் இருக்கும் மிகப் பெரிய ஜனநாயக ஆயுதம்.
  • அதை முறையாகப் பயன்படுத்த, அவர்கள் அவையில் இடம்பெற்று ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைப்பது அவசியம். ஆனால், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் ஏமாற்றத்துடன் கவனித்துக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல், அரசியல்ரீதியாக பாஜக அரசை எதிர்ப்பதை மட்டுமே மனதில் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டனர். இதனால் தார்மிகரீதியில் எதிர்க்கட்சிகளுக்குத் தோல்விதான் கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்பட்ட அத்துமீறல் குறித்து, அவையில் பிரதமர் மோடி பேசாதது நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மறுபுறம், கூட்டத்தொடர் நிறைவுற்ற பின்னர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைப் பிரதமர் மோடி சந்தித்து நன்றி தெரிவித்த நிகழ்வின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்கவில்லை.
  • இப்படி ஜனநாயக நடவடிக்கைகளைப் பரஸ்பரம் குழிதோண்டிப் புதைப்பதில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் தென்படவில்லை. அரசின் பொறுப்புக்கூறலை நிலைநாட்ட வேண்டும் என்றால், அதற்கு வெறுமனே போராட்டங்கள் மட்டும் கைகொடுக்காது; ஆக்கபூர்வ அணுகுமுறை தேவை. அதேபோல், எதிர்க்கட்சிகளின் நியாயமான விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க ஆளுங்கட்சியும் தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பது என்பது இரு தரப்புக்குமான கூட்டுப் பொறுப்பு என்பதை மறந்துவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories