- உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் 35 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருக்கும் எல்லா ஆய்வுகளும் இந்தியாவில் வளமைக்கும் வறுமைக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருவதை உணர்த்துகின்றன. சமுதாய ஏற்றத்தாழ்வை அகற்றுவதில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவது கல்விதான் என்பதை எடுத்தியம்பத் தேவையில்லை.
சவால்கள்
- அதிகரித்துவரும் கிராமப்புற மக்களின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அரசுக்கு மிகப் பெரிய சவால். குறைந்துவரும் வேளாண் துறை வேலைவாய்ப்பும், பொருளாதாரத் தேக்கத்தால் அருகிவரும் தொழில் துறை வேலைவாய்ப்பும் ஏற்றத்தாழ்வை மேலும் கடுமையாக அதிகரிப்பதுடன், வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் பெருகுவதற்கு வழிகோலக்கூடும். இவை குறித்தெல்லாம் மத்திய - மாநில ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குக் கவலைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
- அடித்தட்டு மக்களும், கிராமப்புற மக்களும் தங்களின் குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கிவிடாமல் இருப்பதற்கு வைத்திருக்கும் ஒரே நம்பிக்கை கல்விதான். அவர்களால் தங்களது குழந்தைகளைக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாது. அதனால், அரசுப் பள்ளிகளை நம்பித்தான் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்
- இந்தியாவிலுள்ள 13 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் 23 கோடி மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். 85% அரசுப் பள்ளிகள் கிராமப்புறங்களில்தான் இயங்குகின்றன. அரசு தொடக்கப் பள்ளிகளில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் ஏறத்தாழ 100% மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், உயர்நிலை பள்ளி அளவில் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாகக் காணப்படுகிறது.
மேலும், மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் குறைவாகக் காணப்படுவதால் மேல்நிலைப் பள்ளி அளவிலும் உயர் கல்வி அளவிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டிபோட முடியாத தகுதியற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அரசுப் பள்ளிகள் ஆரோக்கியமாக இல்லாததும், ஆசிரியர் தரமும், கல்வித் தரமும், கட்டமைப்பு வசதிகளும் குறைந்து காணப்படுவதும்தான்.
நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை
- மாநிலங்களவையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அரசுப் பள்ளிகளில் காணப்படும் கட்டமைப்புச் சீர்குலைவு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை, ஏன் ஊடகங்களில் போதிய கவனம் பெறவில்லை என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகளில் 56% பள்ளிகளில் மட்டும்தான் மின் இணைப்பு தரப்பட்டிருக்கிறது. மணிப்பூர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய சராசரி அளவில்கூட இல்லாத அளவு வெறும் 20% அளவு பள்ளிகளில் மட்டுமே மின் இணைப்புகள் இருக்கின்றன.
57% அளவுக்கும் குறைவான அரசுப் பள்ளிகளில்தான் விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. சில மாநிலங்களில் இதுவே 30% அளவில்கூட இல்லை. 40% அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்கூட இல்லாத நிலைமை காணப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான் மாணவிகளுக்கு தனியான கழிப்பிடங்களின் அவசியம் உணரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- அரசுப் பள்ளிகளில் காணப்படும் கட்டமைப்பு வசதிக் குறைவு கவலை அளிக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், கல்வி கற்கும் திறனையும் கட்டமைப்பு வசதிக் குறைவு பாதிக்கும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புற, வசதி இல்லாத, அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
- ஏற்கெனவே போதுமான ஊட்டச்சத்தில்லாமல் அவர்களின் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் குறைந்து காணப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளின் சூழல் அவர்களின் கற்கும் திறனை நிச்சயமாக பாதிக்கும்.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
- காற்றோட்டம் இல்லாத, மின் இணைப்பு இல்லாத வகுப்பறைகள் மாணவர்களின் பார்வைத் திறனைப் பாதிக்கக்கூடும். மின் இணைப்பு இல்லாததால் கணினி உள்ளிட்ட நவீன எண்மக் கல்வி (டிஜிட்டல்) முறைக்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம் இல்லாமல் உடற்பயிற்சி குறைவதால், ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, குறிப்பாக, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
- நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுகிறது. மனிதவள மேம்பாட்டுத் துறை ஏனைய அமைச்சகங்களுடன் இணைந்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அந்த அறிக்கையில் வழங்கியிருக்கிறது.
- எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்களை எழுப்புவது, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் உதவியுடன் சூரிய மின்சக்தி மூலம் பள்ளிகளில் மின்சாரம் வழங்குவது போன்ற பல ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
நன்றி: தினமணி (13-03-2020)