TNPSC Thervupettagam

நான்காம் தமிழாக கணினித் தமிழ்

February 8 , 2024 340 days 334 0
  • நம் முன்னோர், தமிழ் மொழியின் இலக்கியங்களை ஆரம்ப காலத்தில் பனைஓலையில் எழுதினர். பின்னர் காகிதத்தில். தற்போது கணினி வந்துவிட்டது. அனைத்தும் கணினிமயம் என்று பெருமைப்படும் அளவிற்கு கணினி இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது.
  • தமிழ்க் கணினி வல்லுநர்கள்,1983-ஆம் ஆண்டு தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர். 1980-களின் பிற்பகுதியில் "அர்த்தனாரி' என்பவர் தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது. தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்துஅதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டபோது தமிழ் மொழி புதிய அவதாரம் எடுத்தது எனலாம்.
  • 1984-ஆம் ஆண்டு கனடாவில்  ஸ்ரீநிவாசன் என்பவரால் தமிழில் முதலில் மென்பொருட்களில்  ஆவணங்கள் எழுதும் "ஆதமி' உருவாக்கப்பட்டது. 1990-களின் முற்பகுதியில் மக்கின்டாஸ் கணினியில் தமிழ் எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக "ஆதவின்' என்ற மென்பொருளும் எம். எஸ் விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது.
  • 1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுகளில் டாஸ், யூனிக்ஸ், மேக் இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஏராளமான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. பல தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டாலும் "யுனிகோடு' முறையிலான எழுத்துருக்கள் அதிகம் பயன்பாட்டில் இல்லாத நிலையே இருந்து வந்தது.
  • ஒரு கணினியில் உள்ள தமிழ் ஆவணத் தகவலை மற்றொரு கணினியில் படிக்க முடியாத சூழல் இருந்தது. காரணம், ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்துரு முறையைப் பயன்படுத்தினர். காலப்போக்கில் யுனிகோடு முறையைப் பயன்படுத்த 1991-இல் ஒருங்குறி கூட்டமைப்பு (யுனிகோடு கன்சார்டியம்) உருவாக்கப்பட்டது. இந்த கன்சார்டியம் ஒருங்குறி தமிழுக்காக 128 இடங்களை ஒதுக்கீடு செய்தது.
  • தமிழ் எழுத்துகளை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம்., அழகி போன்ற மென்பொருள்களின்  வழியாகத் தட்டச்சு  செய்கின்றனர். சிலர் இணையதளம் வழியாக உள்ள விசைப்பலகையை பயன்படுத்துகின்றனர். தற்போது பல தமிழ் தட்டச்சுப் பலகைகள் வடிவமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதைப் பயன்படுத்தி தட்டச்சு செய்ய அனைவரும் முன்வரவேண்டும்
  • இதற்கேற்ப தமிழக அரசே  1999- ஆம் ஆண்டு "தமிழ் 99' விசைப்பலகையை உருவாக்கி தமிழைக் கணினியில் தட்டச்சு செய்வதற்கு இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் பலரும் பயன்படுத்தவில்லை. இதனால் இம்முறை பரவலாக்கப்படவில்லை என்பதே உண்மை.
  • 2000-ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தான் வெளியிட்ட விண்டோஸ் 2000 என்ற இயங்குதளத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட "லதா' என்ற எழுத்துருவை வழங்கியது.
  • 1990-ஆம் ஆண்டுகளில் "இணைய யுகம்இணையத்தில், வைய விரி வலை (வேல்ட் வைட் வெப்) தளங்கள் உருவாகி வலைக்கணினி வளர்ச்சி அடைந்தது. முதல் முதலில் 1996- ஆம் ஆண்டுதான் இணையத்தில் தமிழ் இடம்  பெற்றது. உலகை வலம் வர இணையத்தில் ஏற்றப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த 28 ஆண்டுக்குள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இணையத் தொழில்நுட்பமும் அதில் இடம் பிடித்த தமிழின் பங்களிப்பும் தமிழுக்குத்  தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றது.
  • சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமிதான் முதல் முதலாக இணையத்தில் தமிழை ஏற்றி வைத்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலேயே நிரலாக்கம் எழுதி செயல்படுத்தும் வகையில் 2013 -ஆம் ஆண்டு முத்து அண்ணாமலை மற்றும் சொக்கன் ஆகியோர் இணைந்து "எழில்' எனும் தமிழ் நிரலாக்க மொழியினையும் உருவாக்கியுள்ளனர்
  • இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும்இலவசமாகக் கிடைக்கக்கூடிய எழில் நிரல், மற்றொரு பிரபல மொழியாகிய பைத்தானுடன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
  • 2000- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. பன்னாட்டுக் கணினி நிறுவனங்களின் வணிக முயற்சிகளினால் ஒருங்குறி குடியேற்றம் (யுனிகோடு  என் கோடிங்)அறிமுகப்படுத்தப்பட்டதுதமிழுக்குத் தனியே ஒருங்குறிக் குறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன.
  • ஒருங்குறி எழுத்துகளின் வருகைக்கு முன்னர், வெவ்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு எழுத்துருவில் எழுதப்பட்ட உரையைப் படிக்க அந்த எழுத்துரு கணினியில் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டாயிரம் எழுத்துருக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் "பாமினி' எனப்படும் எழுத்துரு அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களில் ஒன்று. மேலும் "அன்பே சிவம்', "இதயம்', "ஆனந்த பைரவி', "கம்பன்', "கல்கி', "குறிஞ்சி' போன்ற பல எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன.
  • தற்போது "முல்லை', "பாலை' எழுத்துருக்கள் அரசு பாடநூல்களிலும், "மருதம்' எழுத்துரு அரசாணைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துருக்களை வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தோவியர் மற்றும் வடிவமைப்பாளரான என்.எஸ். நாணா என்ற நாராயணன். இவரது மருதம் எழுத்துரு பணிக்காக 2021-ஆம் ஆண்டு "தமிழ்நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  •  தமிழ் விக்கிபீடியா, இணையதளங்கள், வலைப்பூக்கள் இவையெல்லாம் வரவேற்கத்தக்க தமிழ்ப்பணிகள் என்றாலும், இவை கணினித்தமிழ் வளர்ச்சியின் முதல்கட்டமே ஆகும்கணினித்தமிழை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இயங்கா மொழித் தொழில்நுட்பம் மற்றொன்று இயங்கு மொழித் தொழில்நுட்பம்.
  • இயங்கா மொழித் தொழில்நுட்பத்தில்தான் விசைப்பலகை, எழுத்துரு போன்றவை அடங்கும். இவற்றில் தமிழை உள்ளீடாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் இதன் வரையறை. அடுத்த கட்டமாக, இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற செயல்பாடுகளில் தமிழை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நோக்கி பல கணினித்தமிழ் ஆர்வலர்கள் ஆராய்ச்சி செய்து பல மென்பொருள்களை உருவாக்கி வருகின்றனர்.
  • பேச்சு - எழுத்து மாற்றி, எழுத்து - பேச்சு மாற்றி மென்பொருள்கள் இதில் அடங்கும். கணினிக்கு தமிழ் மொழிச் சொற்களை பயிற்றுவித்து அதன் மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழை மொழிபெயர்ப்பு செய்வதற்கான பல கட்ட ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  •  கூகுள் மொழிபெயர்ப்பு சாதனம் மூலம் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கணினி இயந்திரம் நூறு விழுக்காடு சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. உதாரணமாக ஓடு என்றால் ஓடுதல் என்றும், வீட்டின் மேல் உள்ள ஓடு என்றும் பொருள். முயல் என்றால் முயற்சி செய்தல் என்றும், விலங்கு என்றும் பொருள்.
  • மேலும் ஒவ்வொரு சொல்லும் வாக்கியங்களுக்கு ஏற்றவாறு பொருள் மாறுபடுகிறது. உதாரணமாக 2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது என்பது ஒரு வாக்கியம்; 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றது என்பது மற்றொரு வாக்கியம். இவற்றில் இங்கிலாந்து என்பது இரண்டு வாக்கியங்களிலும் பொதுவானது அல்ல.
  • முதல் வாக்கியத்தில் அது இடமாகவும், இரண்டாவது வாக்கியத்தில் அது அணியாகவும் பொருள்படும். எனவே இது போல சொற்களுக்கான பொருள்களை கணினி தெரிந்து கொள்ள ஒரு தரவகம் (கார்ப்பஸ்) உருவாக்கப்பட வேண்டும். பல கணினித்தமிழ் ஆர்வலர்கள் இதை செய்ய முயன்று கொண்டு இருக்கின்றனர்.
  • கணினித்தமிழை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் பல எழுத்துணரிகள், தமிழ் சொற்பிழைத்திருத்தி மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. காகிதத்தில் கையினால் தமிழில் எழுதப்படும் ஒரு தகவல் தட்டச்சு செய்தது போல் மாறும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தமிழில் இன்று எழுத்துருக்கள், விசைப்பலகைகள் போன்ற அடிப்படை மொழிக்கருவிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. சொற்பிழைத்திருத்தி, சந்திப்பிழைத்திருத்தி போன்ற வசதிகள் கொண்ட பல சொல்லாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு அரசும் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக கணினித்தமிழ் பயிலரங்கங்கையும், தற்போது மிகச் சிறந்த அளவில் பன்னாட்டு அளவிலான கணினித்தமிழ் மாநாட்டையும் நடத்துகிறது. புதிது புதிதாக தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித்தமிழ் விருதும் வழங்கப்படுகிறது.
  • கணினித் தமிழை வளர்த்தெடுக்க அனைத்து கல்லூரிகளிலும் கணினித் தமிழை பாடமாக்க வேண்டும். தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான பயிற்சிகள் மாணவர்கள் மத்தியில் விரிவடைய வேண்டும்
  • பொறியியல் கல்வி பயிலும்  மாணவர்களின் நான்காமாண்டு செயல்திட்ட செயல்பாடுகளில் கணினித் தமிழ் சார்ந்த படைப்புகளை உருவாக்க  வகைசெய்யும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் -இவையெல்லாம்  கணினித்  தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்
  • உலகச் செம்மொழி வரிசையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழிக்கு கணினித் தமிழ் மென்மேலும் பெருமை சேர்க்கும் முயற்சியில் அனைவரும் பங்கேற்க முன்வர வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories