TNPSC Thervupettagam

நாம் அடைய விரும்புவது என்ன

January 15 , 2024 226 days 201 0
  • ஆண்டுதோறும் சென்னைக்குப் பெருமை சேர்க்கும் புத்தகக் காட்சி தற்போது ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, இரண்டாவது ஆண்டாக சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியும் (CIBF) ஜனவரி 16 தொடங்கி 18 வரை மூன்று நாள்கள் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. முதல் ஆண்டே உலகப் பதிப்பாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வெற்றிபெற்ற சிஐபிஎஃப், இந்த ஆண்டு மேலும் பல முன்னேற்றங்களுடன் நடைபெறுவதற்கான தயாரிப்புகளோடு தயாராக உள்ளது.

பங்கேற்கும் நாடுகள்

  • தமிழ்நாடு அரசு தன் கல்வி அமைச்சகம் மூலம் பொது நூலகத் துறை இயக்குநரகம் - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் மூலம் இப்புத்தகக் காட்சியைச் சர்வதேசத் தரத்துடன் நடத்துகிறது. இந்த ஆண்டு ஏறத்தாழ 35 நாடுகளிலிருந்து பதிப்பாளர்களும் இலக்கிய முகவர்களும் வருகை தரவுள்ளார்கள்.
  • இந்நிகழ்வின் முக்கியக் கூறுகளில் ஒன்றான கெளரவப் பங்கேற்பு நாடு (Guest of honour) வகைமையில் மலேசியா பங்கேற்கிறது. உலக, இந்திய, தமிழ்நாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பேசும் மூன்று நாள் பன்னாட்டு மாநாடும் நடக்க உள்ளது.
  • பங்கேற்கும் நாடுகளின் பட்டியலே இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்: மலேசியா, கனடா, பிரிட்டன், இந்தோனேசியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பின்லாந்து, இத்தாலி, துருக்கி, சவுதி அரேபியா, கிரேக்கம், ஸ்லோவேனியா, லெபனான், வடக்கு மாசிடோனியா, லிதுவேனியா, லாத்வியா, அல்பேனியா, தான்சானியா, செனகல், செர்பியா, பிரேசில், மயன்மார், நியூசிலாந்து, ஆர்மீனியா, ஜார்ஜியா, போர்ச்சுக்கல், வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், போலந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, ஈரான்.

வளர்ச்சியின் அடையாளம்

  • நிகழ்வின் முக்கிய அம்சமாக, வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளிமாநிலப் பதிப்பாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பதிப்பாளர்கள், படைப்பாளர்களோடு தத்தம் நூல்களின் பதிப்புரிமையை விற்கவும் வாங்கவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள்.
  • தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் சீரிய முயற்சியான சிஐபிஎஃப்பின் வெற்றிக்காக மொழிபெயர்ப்பு நல்கைகள், பயிற்சியளிக்கப்பட்ட இலக்கிய முகவர்களின் சேவைகள் என்று ஆண்டு முழுக்க இதற்கான முகாந்திரமான செயல்பாடுகள் நடைபெற்றுவந்தன.
  • இவ்வளவு முனைப்பு எடுத்து தமிழ்நாடு அரசு சாதிக்க விரும்புவது எதை என்பது குறித்துப் பலருக்கு ஐயமும் இருக்கிறது. உலகின் கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்புகிறது என்பது மட்டுமல்ல இதன் பலன். ஒரு பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்பது ஒரு நாடு அல்லது கலாச்சாரம் உலகளவில் வளர்ந்த நாடாக ஆவதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.
  • பதிப்புத் துறையைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய முன்னோக்கிய பாய்ச்சலைக் குறிக்கிறது. இந்தியாவும், குறிப்பாகத் தமிழ்நாடும் பெறும் வளர்ச்சியின் விளைவுதான் சிஐபிஎஃப்.
  • ஒரு பன்னாட்டுப் புத்தகக் காட்சி எப்படி வழக்கமான புத்தகக் காட்சியைவிட வித்தியாசப்படுகிறது. அது ஏன் நமக்கு வேண்டும்?

1. உலகளாவிய வெளிப்பாடு

  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், இலக்கிய முகவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஒரு தளத்தை வழங்குகிறது. இது பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் உள்ளவர்களுடன் உள்நாட்டுப் பதிப்பாளர்கள் தொடர்புகொள்ள வழிவகுப்பதால், இது இருதரப்புக்கும் உலகச் சந்தையைத் திறந்துவிடுகிறது. சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி இந்த அடிப்படையில்தான் ‘Bringing the world to Tamil, Taking Tamil to the World’ என்கிற பொது முழக்கத்தைத் தன் பதாகை வாசகமாகக் கொண்டுள்ளது. அரசு பல கோடி செலவில் நல்கைகளையும் பதிப்புத் துறைத் திறனாளர்களையும் அதற்காக உருவாக்கியிருக்கிறது.

2. வலைப்பின்னல் வாய்ப்புகள்

  • பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், முகவர்கள், விநியோகஸ்தர்கள், புத்தக விற்பனையாளர்கள் உள்பட, உலகளாவிய பதிப்பகத் துறையில் உள்ள நிபுணர்களை ஈர்க்கின்றன. குறிப்பாகப் பதிப்புரிமை அரங்குகள், பன்னாட்டு மாநாடுகள் மூலமாகச் சிறந்த வலைப்பின்னல் தொடர்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன, பங்கேற்பாளர்கள் தமக்கிடையில் சாத்தியமான வர்த்தக ஒத்துழைப்புகளைக் கண்டறிய இது வழிவகுக்கிறது.

3. வணிக வாய்ப்புகள்

  • வழக்கமான புத்தகக் காட்சி புத்தக விற்பனையை அடிப்படையாகக் கொண்டது. பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளோ புத்தகங்களின் பதிப்புரிமையை வர்த்தகம் செய்வதை அடிப்படையாகக் கொண்டவை. வெளியீட்டாளர்கள் - ஆசிரியர்களுக்கு, உரிமைகளை விற்கவும், மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவும், சர்வதேச விநியோக ஒப்பந்தங்களைப் பாதுகாக்கவும் புத்தகக் காட்சிகள் வாய்ப்புகளை வழங்குகின்றன. இது புதிய சந்தைகளுக்கான கதவுகளைத் திறக்கிறது; உலகளவில் புத்தக விற்பனை, வெளிப்பாட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது. சிஐபிஎஃப்பின் அடிப்படை நோக்கம் இதுவே. இந்த நோக்கத்துக்காக விற்பனை நோக்கில் செயல்படும் பங்கேற்பாளர்களும் தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

4. இலக்கியப் பரிமாற்றம்

  • சிஐபிஎஃப்பில் தமிழ் எழுத்தாளர்களை உலக அளவில் கொண்டுசெல்வதற்கான அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. முதன்முதலாக, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த பதிப்புரிமைப் பட்டியல்கள் (Rights catalogues) ஆங்கிலத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டு வெளிநாட்டு, வெளிமாநிலப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்தியாவிலேயே முதன்முதலாக, இவற்றைக் கொண்டே உலகச் சந்தைக்குத் தமிழ்ப் படைப்புகளை இளம் இலக்கிய முகவர்கள் அறிமுகப்படுத்துவார்கள். மாநாட்டு அரங்குகளில் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் தந்து பல அமர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

5. கண்டறிதல்

  • சர்வதேசப் புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்துவது வெளியீட்டாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய விளம்பரமாகும். படைப்பாளர்களின் புதிய தலைப்புகளை உலகளவில் அறிமுகப்படுத்தவும், கவனத்தை ஈர்க்கவும் இது ஒரு தளத்தை வழங்குகிறது. புத்தக ஒப்பந்தங்கள், பரந்த அங்கீகாரத்துக்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன. தமிழ்ப் படைப்பாளர்களை நாம் அறிமுகப்படுத்துவதைப் போலவே, உலகப் பதிப்பாளர்கள் தத்தம் நாடுகளின் படைப்பாளர்களைப் பற்றிப் பேசவுள்ளார்கள்.

6. கலாச்சாரப் பரிமாற்றம்

  • புத்தகக் காட்சிகள் பல்வேறு இலக்கியப் படைப்புகளின் பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன, உலகெங்கிலும் உள்ள பல்வேறு இலக்கிய மரபுகள், மொழிகள், வகைகளை ஆராய வாசகர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. இவ்வாண்டு மலேசியப் பண்பாடும் இலக்கியமும் நமக்காக அரங்கேறுகின்றன.

7. சந்தை ஆராய்ச்சி

  • பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் வெளியீட்டாளர்களுக்குச் சந்தை நுண்ணறிவைச் சேகரிக்கவும், போக்குகளைப் பகுப்பாய்வு செய்யவும், வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள வாசகர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகின்றன. இந்த அறிவு எதிர்கால வெளியீட்டு முடிவுகளையும் சந்தைப்படுத்தல் உத்திகளையும் உருவாக்கும்.
  • தமிழ் நூல்கள் உலகெங்கும் பரவ, பல்வேறு தனித்துவமான நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசு திறந்துவைத்திருக்கும் வாசல் மிக அழகியது, மிகப் பெரியது. குடிசைத்தொழில் போலக் கருதப்படும் தமிழ்ப் பதிப்புலகத்தை வெகுவாக மாற்றி, நம்மையும் உலகத்தரம் வாய்ந்த தொழில் துறையாக அது மேம்படுத்தும்.
  • புதிய முயற்சி என்பதால் பலருக்கும் பல குழப்பங்களும் பதற்றங்களும் இருக்கலாம்; அது இயல்பானதுதான். ஆனால், சிஐபிஎஃப் மூலம் நாம் அடையப்போகும் இலக்குகள் நாம் வெகுகாலமாகக் கனவு கண்டுகொண்டிருந்தவைதான்.
  • முதல் ஆண்டிலேயே 30-க்கும் மேற்பட்ட நூல்கள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் நிலையில், இரண்டாம் ஆண்டு அதன் எண்ணிக்கை நூறைக் கடந்துசெல்லும். இந்த ஒரு வெற்றிப் புள்ளியிலிருந்து நாம் சிஐபிஎஃப்பின் வெற்றிக்காகக் கைகோப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories