- மனிதர்கள் எல்லாருக்கும் கேளிக்கை பிடிக்கும். கேளிக்கைகளில் ஈடுபடும்போது நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். ஆனால், ஏன் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்ப வேண்டும்?
- பரிணாமத்தின் ஊடாக மனிதர்கள் அடைந்திருக்கும் ஒவ்வொரு பண்புக்கும் ஒரு பயன் இருக்கிறது. அந்தப் பயன் இல்லாவிட்டால், அந்தப் பண்பு இயற்கையாகவே நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன் இருக்கிறது?
- மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றன. அளவில் சிறிய ஈக்களாகட்டும், மிகப்பெரிய யானைகளாகட்டும், எல்லா உயிரினங்களுமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. நாய்கள் பந்தைத் தூக்கி எறிந்தால் ஓடிச்சென்று எடுத்து வருவதைப் பார்க்கிறோம். சிங்கங்களும் புலிகளும் புரண்டு விளையாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், அவை ஏன் மகிழ்ச்சியாக உணர விரும்புகின்றன? உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன?
- மகிழ்ச்சி என்பது நம் மூளையில் ஏற்படும் சிறிய வேதியியல் மாற்றம், அவ்வளவுதான். நாம் சில செயல்களைச் செய்யும்போது நமது மூளையில் டோபமின் எனும் வேதிப்பொருள் சுரக்கிறது. இது நம் மூளையில் உள்ள குறிப்பிட்ட சில நரம்பணுக்களைத் தூண்டிவிடுகிறது. அப்போது நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம்.
- சரி, எந்தெந்த செயல்களைச் செய்யும்போது நாம் மகிழ்ச்சியாக உணர்வோம்? நம் மூளை பலன்களை, வெகுமதிகளை உணரும் வகையில் அமைந்துள்ளது. அதனால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்வதால் நமக்குப் பலன் உண்டாகிறது என்றால் நாம் மகிழ்ச்சியாக உணர்வோம்.
- பொதுவாக, எவை எல்லாம் நமக்கு உயிர்வாழ உதவுகின்றனவோ அந்தச் செயல்களைச் செய்வதால் நமக்குப் பலன் ஏற்படுகிறது. அதனால், அவற்றைச் செய்யும்போது நாம் மகிழ்வாக உணர்வோம்.
- நாம் தூங்கும்போது இன்பத்தைஉணர்வோம். உணவு உண்ணும் போது இன்பமாக உணர்வோம். நண்பர்களுடன் ஊர் சுற்றும்போதும் உரையாடும் போதும் நாம் மகிழ்ச்சியில் திளைப்போம். இதற்குக் காரணம் இந்தச் செயல்கள் நாம் உயிர்வாழ உதவுபவை.
- உயிர்வாழ உதவும் விஷயத்தைச் செய்யும்போது நம்மை மகிழ்ச்சியாக உணர வைப்பதன் மூலம் நம் மூளை அவற்றை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுகிறது.
- மனிதர்கள் மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாகத் தேனீக்கள் உயிர்வாழப் பூக்களில் சுரக்கும் பூந்தேன் (Nectar) அத்தியாவசியமான பொருள். அவற்றைத் தேனீக்கள் தொடர்ந்து பருக வேண்டும் என்றால், அவற்றைப் பருகும்போது மூளையில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அப்போதுதான் தேனீக்கள் மீண்டும் மீண்டும் பூக்களைத் தேடிவரும். இதுதான் நிகழ்கிறது.
- மனித மூளையில் டோபமினை உருவாக்கும் மிக முக்கியச் செயல்களில் ஒன்று விளையாட்டு. விளையாடும்போது நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். உடல் களைத்துப் போகும் வரை விளையாடுகிறோம். விளையாட்டு நமக்கு அலுப்பதே இல்லை. இதற்குக் காரணம் விளையாட்டுதான் நாம் உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத செயல் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
- விளையாட்டு நம் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது. நம் உடலுக்கு வலுவூட்டுகிறது. அது மட்டுமல்லாமல் விளையாடும்போதுதான் நாம் உயிர் பிழைக்க உதவும் திறன்களைப் பயிற்சி செய்கிறோம்.
- விளையாடும்போது ஓடுகிறோம். கற்களை எடுத்து வீசுகிறோம். தாவிக் குதிக்கிறோம். இவை எல்லாம்தான் நாம் உயிர் வாழ உதவுபவை. இப்போது இவற்றால் நேரடிப் பயனில்லாவிட்டாலும்கூட மனிதர்கள் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தபோது அவர்கள் பிழைத்திருக்க வேண்டிய அவசியத் திறன்களாக மேற்கூறியவைதான் இருந்தன. வேட்டைத் திறன்களை நாம் கட்டாயத்தின் பெயரில் கற்க முனைந்தால் அவை கடினமாகத் தோன்றியிருக்கும். அவற்றைப் பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் வலி நமக்குத் துன்பத்தைத்தான் தந்திருக்கும்.
- ஆனால், அவற்றை மகிழ்வுடன் கற்க விளையாட்டு மறைமுகமாக உதவியிருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். விளையாடும்போது நாம் இன்பத்தை உணர்வதால் எந்தச் சலிப்பும் இல்லாமல் வேட்டைத் திறன்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறோம்.
- பொதுவாகக் குழந்தைப் பருவத்தில்தான் நாம் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவோம். இதற்குக் காரணம் பிற்காலத்தில் கடினச் சூழலில் பிழைத்திருக்கும் திறனைக் குழந்தைப் பருவத்திலேயே பயிற்றுவிக்க நம் மூளை தூண்டுவதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
- கடினமான விளையாட்டு மட்டுமல்ல, குழந்தைகள் மணலில் வீடுகட்டி விளையாடுவதும், பொம்மைகளை வைத்து விளையாடுவதும்கூட மூளை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கிறது. பல்வேறு பொம்மைகளை வைத்து விளையாடுவதன் மூலம் குழந்தைகள் பொருள்களை வகைப்படுத்தக் கற்கின்றனர். நிறங்களை அறிகின்றனர். விளையாட்டின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனும் வளர்கிறது.
- மனிதர்கள் நாடோடி வாழ்விலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாக வளர்ந்ததற்குக் காரணமும் விளையாட்டுத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். விளையாட்டுகள்தாம் புதிய சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க நமது மூதாதையர்களுக்கு உதவி இருக்கின்றன. விளையாட்டின் மூலமே அவர்கள் புதிய கருவிகளை உருவாக்கி இருக்கின்றனர்.
- இன்று உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் விளையாட்டாக முயன்றதால் வந்தவை. மகிழ்வை உணராமல் கட்டாயத்தின் பெயரில் ஒரு செயலைச் செய்ய முனைவது வேண்டிய பலனைத் தராது என்கின்றன ஆய்வுகள். இதனால்தான் நாம் மகிழ்விக்கும் வேலைகளில் ஈடுபடும்போது அவற்றைத் திறன்படச் செய்கிறோம்.
- ஆனால், தவறான செயல்களால் டோபமின் உற்பத்தியாவது ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. நாம் சர்க்கரையைச் சாப்பிடும்போது உடலில் மகிழ்ச்சி உண்டாகிறது. அதனால், மீண்டும் மீண்டும் இனிப்பை எடுக்க மூளை தூண்டுகிறது. அதேபோல வீடியோ கேம்கள் விளையாடும்போதும், சமூக வலைதளங்களில் அதிகம் நேரம் செலவழிக்கும்போதும் டோபமின் சுரந்து நம்மை மகிழ்வூட்டுகிறது.
- ஆனால், அவற்றால் நிஜமான பலன் எதுவும் ஏற்படுவதில்லை. அவை தரும் இன்பத்தால் அந்தச் செயலுக்கு நாம் அடிமையாகிறோம். அவற்றால் நம் உடல் நலமும் மன நலமும் கெடுகின்றன. இதனால் எந்தச் செயல்கள் நமக்கு உதவுகின்றன என்பதை அறிவதும் அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2024)