- நிகாலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli, 1469–1527) ஃபிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த ஓர் அரசியல் நிபுணர், அரசதிகாரி, சிந்தனையாளர். இவர் எழுதிய நூல்களில் புகழ்பெற்றது, ‘தி பிரின்ஸ்’ என்ற சிறிய நூலாகும். 1512 ஆம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட அந்த நூலை மறுவாசிப்பு செய்து, விரிவாக அர்த்தப்படுத்தி, நூலைக் குறித்த பல்வேறு வாசிப்புகளை விவாதித்து 2013ஆம் ஆண்டு எரிகா பென்னர் (Erica Benner) என்பவர் ஒரு நூலை எழுதியுள்ளார். ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் சிந்தனையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு சிறிய, புதிரான நூல்தான் ‘தி பிரின்ஸ்’. நவீன அரசியல் சிந்தனையின் தோற்றுவாய் என அது கருதப்படுகிறது.
- பிரின்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று அரசனின் மகன், இளவரசர். மற்றொன்று, சிறிய நகரங்களில் ஆட்சி செய்யும் வேந்தர், குறுநில அரசர். பெரும்பாலும் இந்தக் குறுநில அரசர் மற்றொரு அரசரின் மேற்பார்வைக்குக் கட்டுப்பட்டவராக இருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்கள் மேலாதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சமஸ்தானங்களை, ‘பிரின்ஸ்லி ஸ்டேட்ஸ்’ என்று கூறுவார்கள். ஆனால், அந்த சமஸ்தானத்தை ஆண்டவர்களைத் தமிழில் நாம் மன்னர்கள் என்றுதான் அழைப்போம். எனவே, மாக்கியவெல்லியின் நூல் ஒரு முடியரசரைக் குறித்தது என்றே கொள்ளலாம். அதனை இளவரசர் என்று மொழியாக்கம் செய்ய இயலாது.
- ஆனால், மாக்கியவெல்லி முடியரசரைக் குறித்து குடியரசுத் தத்துவத்தின் வெளிச்சத்தில் எழுதியுள்ளார் என்பதுதான் அந்த நூலின் முக்கியமான முரண் அல்லது சுவாரசியம். அதற்குக் காரணம், அவர் அந்த நூலை எழுதிய சூழ்நிலை. இத்தாலியின் நகர அரசுகள் பல்வேறு ஆட்சி முறைகளின் பரிசோதனைக் களமாக இருந்த நேரம்.
- பொதுவெளியில் மாக்கியவெல்லிக்கு நற்பெயர் கிடையாது. எதைச் செய்தாவது லட்சியங்களை அடையலாம் என்றும், ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வன்செயல்களைச் செய்யலாம் என்றும் கூறிய அறமற்ற காரியவாதி, ராஜதந்திரி என்று அறியப்படுபவர். அதனால்தான் அவரைப் பற்றிய சமீபகாலக் கல்விப்புல மறுவாசிப்புகள் முக்கியமானவை.
- குடியரசுத் தத்துவம்: கடந்த 75 ஆண்டுகளாக நம் நாடு மக்களாட்சிக் குடியரசாக விளங்குவதால், குடியரசு என்றாலே மக்களாட்சிதான் என்று கருதும்போக்கு உள்ளது. குடியரசு என்பது குடிமைப் பண்புகள் சார்ந்த ஒரு சமூகத்தில் ஏற்படும் நியதிகள், விழுமியங்களைக் கொண்டு சட்ட திட்டங்களை, நிறுவனங்களை உருவாக்கி, அரசாட்சியைச் சாத்தியமாக்குவது.
- குடியரசில் குடிமக்களின் சுதந்திரம் முக்கியம் என்றாலும், எந்த அளவு கட்டுப்பாடுகள், எந்த அளவு சுதந்திரம் என்பதில் வெகுகாலமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. குடியரசில் ஆட்சியதிகாரம் ஒரு தனி நபரிடமோ ஒரு குழுவினரிடமோ இருக்கலாம். ஆயின் குடிமைப் பண்புகள், குடிநலன் சார்ந்த ஆட்சிமுறை இருக்கிறது என்பதே முக்கியம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதல்ல; அது மக்களாட்சித் தத்துவம்.
- இதற்கு மாறாக முடியரசு என்பதில் அதிகாரம் மன்னரிடம் குவிக்கப்படுகிறது. அவர் விருப்பப்படி விதிகளை மாற்றும் எதேச்சதிகாரம் சாத்தியமாகிறது. மக்கள் மன்னருக்கு அடிபணிந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். மறுமலர்ச்சிக் காலத்தில் முடியரசிலிருந்து குடியரசுக்கு மாறுவதற்கான சிந்தனைகள் எழுச்சி பெற்றதே முக்கியமான வரலாற்று நகர்வு.
- மாக்கியவெல்லியின் தருணம்: அரசியல் தத்துவ வரலாற்றை ஆராய்ந்தவர்களில் முக்கியமானவர் ஜே.ஜி.ஏ.போக்காக் (J.G.A.Pocock, பி.1924). இவர் எழுதிய ‘மாக்கியவெல்லியின் தருணம்’ (The Machiavellian Moment, 1975) முக்கியமான நூலாகும். அந்தத் தருணம் எதைக் குறிக்கிறது என்றால், இத்தாலிய நகர அரசுகளில் 15ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் பரிசோதனைகளைக் குறிக்கிறது.
- அந்தப் பரிசோதனைகளை ஒட்டி, சிந்தனையாளர்கள் பலர் அரசாட்சி குறித்த கருத்தாக்கங்களை, வழிகாட்டி நூல்களை எழுதினார்கள். பெருகும் வர்த்தகமும் வங்கிகளின் பெருக்கமும் முதலீட்டிய திரட்டுக்கு அடித்தளங்களை இட்ட நேரம். ஃபிளாரன்சில் மெடிச்சி என்ற வங்கியாளர் குடும்பம் போப்பின் பெருநிதியைக் கையாண்டதில், முதலீட்டியத்தின் முக்கிய கால்கோள் இடப்பட்டது என்பதை ஜியோவனி அர்ரிகி (Giovanni Arrighi, 1937-2009) போன்ற ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். மெடிச்சி குடும்பத்தின் அரசியல் நடவடிக்கைகளே மாக்கியவெல்லி ஃபிளாரன்சில் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சினை.
- அரசருக்கு அறிவுரையா, எச்சரிக்கையா? - மாக்கியவெல்லியின் நூல் பல முரண்களைப் பேசுகிறது. அரசர்களுக்கு ஆட்சியதிகாரத்தை நிலைபெறச்செய்யும் உத்திகளைக் கூறுவதுபோலத் தோன்றினாலும், அதில் அடங்கியுள்ள சவால்களைத் தொகுப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறது
- மாக்கியவெல்லி அரசர்களைப் பலவிதமாகப் பிரிக்கிறார். இயல்பாக வம்சாவளியாக ஆட்சிக்கு வருபவர்கள், தானாக முயன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் குடிமைச் சமூக நபர், தற்செயலாக அரசராகப் பொறுப்பேற்க நேரும் ஒருவர் என வகைகளைக் கூறுகிறார். முக்கியமாகத் தன்னுடைய பண்புகளால் வலிமைபெறுபவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் வலிமை பெறுபவர் என்று இருவகைகளைப் பேசுகிறார்.
- இவ்வகைப்பட்ட அரசர்களுக்குப் புதிய நாடுகளைக் கைப்பற்றுதல், பழைய நாட்டையும், புதிய பகுதிகளையும் சேர்ந்து ஆட்சி செய்தல் எனப் பல்வேறு சூழ்நிலைகளில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை விவரிக்கிறார். அவருடைய சமகால உதாரணங்களைத் தருகிறார்.
- முக்கியமாக, மாற்றங்களைச் செயல்படுத்துவதில் ஆட்சியாளருக்கு உள்ள பொறுப்பையும், அந்த மாற்றங்களை மக்களை ஏற்கச் செய்வதில் உள்ள சவால்களையும் விவாதிக்கிறார். குடிமைப் பண்பு, பழக்க வழக்கங்கள், அரசரின் பண்பு மற்றும் சூழ்நிலை, பிற நாடுகளுடனான உறவு, பகை ஆகிய பல்வேறு அம்சங்களுக்கு இடையேயான முரண்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த சிந்தனையாக அந்த நூல் அமைந்துள்ளது.
- அறிவுரை மன்னருக்கா, மக்களுக்கா? - மாக்கியவெல்லி இந்த நூலை மெடிச்சி குடும்பத்து வழித்தோன்றலுக்குத்தான் சமர்ப்பிக்கிறார். ஆனாலும், கற்றறிந்தோர் பயன்படுத்தும் லத்தீன் மொழியில் நூலை எழுதாமல், மக்கள் பேசும் இத்தாலிய மொழியிலேயே எழுதியுள்ளார்.
- மக்களை ஆட்சியை ஏற்கச்செய்வது எப்படி, அதிலுள்ள சிக்கல்கள் என்ன என மன்னர்களுக்குக் கூறும் போது, மறைமுகமாக மன்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களுக்குக் கூறுகிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. அதே சமயம் சமூக மாற்றங்களுக்குத் தலைமை முக்கியம் என்பதையும், அதை வெற்றிகரமாகச் செய்யத் தேவையான பண்பு நலன்கள் என்ன என்பதையும் விவாதிக்கிறார்.
நன்றி: தி இந்து (17 – 07 – 2023)